அரசு அதிகாரிகளுக்கு நல்லதொரு படிப்பினை | தினகரன்

அரசு அதிகாரிகளுக்கு நல்லதொரு படிப்பினை

நாட்டில் அமுலில் உள்ள சட்டம் ஓரளவேனும் நடைமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருப்பதை நேற்று முனதினம் வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அது கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பௌத்தர்களுக்கான ‘சில் துணி’ மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பான விசாரணைகள் இரண்டாண்டு காலமாக நீண்டு கொண்டிருந்த நிலையில் மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் இரு குற்றவாளிகளுக்கும் தலா மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையையும் தலா இரண்டு மில்லியன் ரூபா அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

அத்துடன் தொலைத் தொடர்புகள் விதிகளுக்கு முரணாக நிதி செலவிடப்பட்டிருப்பதால் தலா 50 மி்லலியன் ரூபாவை நட்ட ஈடாக செலுத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு வருட கால விசாரணைகளின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களும் குற்றவாளிகளென நிரூபணமானதையடுத்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துகளை மோசடி செய்தல் பாரிய குற்றமாகும். பொதுச் சொத்துக்கள் சட்டத்துக்கமைய மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட முடியும். இதனடிப்படையிலேயே மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவிலிருந்து 60 கோடி ரூபாவைப் பயன்படுத்தி இந்த ‘சில் துணி’க் கொள்வனவு செய்யப்பட்டு ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தேடும் வகையில் பௌத்த மக்களின் ‘சில்’ அனுட்டானத்துக்காக விநியோகிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முற்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் பல நாடுகளிலும் ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட ஆட்சித் தலைவர்களும், அரச அதிகாரிகளும், நாட்டை விட்டுத் தப்பியோடிய வரலாறுகள் உண்டு. அதேபோன்று பலர் பதவி துறந்தனர். மேலும் சிலர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சட்டம் ஒழுங்காக அமுல்படுத்தப்படும் நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்காமல் உரிய முறையில் அமுல்படுத்தப்படும். ஆனால் கடந்த காலத்தில் ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது இந்த ‘சில் துணி’ திட்டத்தின் சூத்திரதாரி மகிந்த ராஜபக்ஷவாகும். அதன் பணிப்பாளராக செயற்பட்டவர் பசில் ராஜபக்ஷ. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான பங்களிப்பை வழங்கியவர்கள் தான் இன்று தண்டிக்கப்பட்டிருக்கும் லலித் வீரதுங்கவும் அனுஷ பெல்பிட்டவும்.

அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என்பதை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஒரு தடவை தெரிவித்திருந்ததை இவ்வேளையில் மீள் நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது. அன்று நீதித்துறையின் மீது நாட்டு மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். நாட்டில் அராஜகமே தலைவிரித்தாடியது. 2015 ஜனாதிபதி தேர்தலுடன் அந்த அவலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சட்டம் சகலருக்கும் சமம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நல்லாட்சி அரசு நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவதற்கு அதன் கட்டுகளை அவிழ்த்துவிட்டது. குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை எந்தவித அரசியல் தலையீடுமின்றி விசாரிப்பதற்கு இடமளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அரச அதிகாரிகள் மீதான முறைப்பாடுகள் படிப்படியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான தொன்றுதான் இந்த ‘சில் துணி’ விவகாரம். அரச சொத்தை தவறாகப் பயன்படுத்தியமை, நிதி மோசடி செய்தமை, தேர்தல் சட்ட விதிகளை மீறியமை போன்ற குற்றச்சாடடுகள் சுமத்தப்பட்டு விசாரணை இடம்பெற்றுள்ளது. குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக இருவரும் கடும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தண்டனை தொடர்பில் விமர்சனம் எழக்கூடும். அதனை மறுப்பதற்கில்லை. தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மணி நேரம் கூட கடக்கவில்லை. இது அரசியல் பழிவாங்கல் என சிலர் கூச்சல் போட்டுள்ளனர். மேன்முறையீடு செய்து மீண்டு வருவோம் எனக் கூட தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீடு இரண்டாவது விடயம். ஆனால் காலம் தாழ்த்தியாவது நீதி நிலை நாட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆறுதலடைய முடிந்துள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றம் தெளிவானதொரு தீர்ப்பை வழங்கி இருப்பதை நன்கு அவதானிக்க முடிகிறது. தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படுமானால் அதனை விசாரித்து முடிக்க மேலும் இரண்டொரு வருடங்கள் செல்லலாம். அதன் தீர்ப்பு எவ்வாறானதாக இருந்த போதிலும் இக்காலப் பகுதிக்குள் சில வேளை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவும் கூடும். அவ்வாறு மாற்றமேற்பட்டால் இத்தீர்ப்பின் கதி என்ன? குற்றவாளிகள் நிரபராதிகளாகி விடுதலை பெற்று விடுவர். அப்போது இந்த வழக்கும் அதன் தீர்ப்பும் அர்த்தமற்றதொன்றாகிவிடும். இது குறித்து புத்தி ஜீவிகள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

எமது நாட்டின் அரசியல் கலாசாரம் புதுமையானது. இந்த அரசியல் கலாசாரத்தில மாற்றம் ஏற்படாதவரை ஊழல் மோசடிகளை ஒழித்துக்கட்ட முடியாது.

அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாக செயற்பட்டு ஊழல் மோசடிகளுக்குத் துணைபோவதால் ஏற்படக்கூடிய பாரிய பின்விளைவுகளை இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு படிப்பினையாகவே அமைந்துள்ளது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...