பாடசாலை இடைவிலகல் காரணங்கள் கண்டறியப்பட வேண்டும் | தினகரன்

பாடசாலை இடைவிலகல் காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்

எமது நாட்டில் இலவசக் கல்வி வழங்கப்படுகின்ற போதும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லுதல் என்பது குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பாலர் பாடசாலை முதல் பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வி இலவசப் பாட நூல் மதிய உணவு போசாக்கான காலை உணவு தூய பசும் பால் வழங்கல் கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கான பாதணி குறைந்த விலையில் மாணவர் களுக்கான பிரயாண பருவச்சீட்டு என சலுகைகளை அள்ளிக் கொடுக்கப்பட்டு வரும் நிலையில்அவற்றை மாணவர்களும் அவர்களது பெற்றோர் பாதுகாவலர்களும் சரியாக பயன்படுத்துகிறார்களா? ஏன்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. இதற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க ஆய்வு எடுத்துக் காட்டாகவுள்ளது.

தொழில் அமைச்சின் பணிப்புரையின் கீழ் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட சில நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட கணிப்பீட்டின்படி 5 வயது தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் 452661 பேர் பாடசாலைக்கு செல்லாது உள்ளதாகவும் இதில் 51249 பேர் ஒரு போதும் பாடசாலைக்கு செல்லாதவர்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

நாட்டிலுள்ள சனத்தொகையில் 5 வயது தொடக்கம் 17 வயதிற்குட்பட்டவர்கள் 4.65% உள்ளனர். இவர்களில் 4118741 பேர் பாடசாலை செல்லும் அதே வேளை 452661 பேர் பாடசாலை செல்லாதுள்ளனர். இதில் 70% மாணவர்கள் கிராமப்புற மற்றும் மலையக சேரிப்புற பிரதேசங்களில் வசித்து வருகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பாடசாலைகளை விட்டு இடை விலகுவதற்கு பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகிறது

பாடசாலையில் சேரும் பிள்ளைகள் முழுமையான கல்வியைப் பெறாது இடையில் பாடசாலையை விட்டு விலகல் இடைவிலகல் எனப்படும். ஒரு பிள்ளை தேவையான கல்வியைப் பெறாதிருப்பது நாட்டின் வளத்தை வீணவிரயம் செய்யும் செயலாக இருக்கின்றது. இடைவிலகலினால் அரசும் பெற்றோரும் செலவிடும் முதலிற்குரிய சரியான விளைவு கிடைக்காமல் போகின்றது.

மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அப்பிரச்சினைக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர். இதனால் சமூகத்திலும் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. பாடசாலையில் இருந்து மாணவர்கள் இடையில் விலகிச் செல்வதற்கான காரணங்களை நோக்க வேண்டியது

1. பொருளாதாரக் கஷ்டம்

2. ஏதாவதொரு தொழிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருத்தல்.

3. பெற்றோர்களின் தொழிலுக்கு உதவ வேண்டியிருத்தல்.

4. நோயுற்றிருத்தல் (உடல் உளரீதியாக)

5. பிறப்பிலுள்ள குறைபாடு

6. வீட்டிற்கும் பாடசாலைக்குமிடையிலான தூரம்

7. பிள்ளைகளுக்கு பாடசாலை மீது வெறுப்பு ஏற்படல்

8. பெற்றோர்களுக்கு பாடசாலை மீது நம்பிக்கை இல்லாதிருத்தல்

9. சிலவேளைகளில் பாடங்களிலோ அல்லது ஆசிரியர் மீதோ வெறுப்படைந்து பாடசாலையை விட்டு வெளியேறல்

10. ஒழுக்கக் கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக பாடசாலையிலிருந்து வெளியேற்றப்படல்

11. பாலியல் குற்றவாளியாக இருப்பதினால் பாடசாலையிலிருந்து வெளியேறப்படல்

12. சமவயதுப் பிரிவினரிடையேயுள்ள செல்வாக்கு காரணமாக கல்விமீது வெறுப்படைதல்

13. பெற்றோர்களின் கவலையீனம் பரம்பரைத் தொழிலில் ஆர்வம் காட்டுகின்றமை

14. சாதிப்பாகுபாடு

15. இளம் வயதில் திருமணம் செய்தல்

16. சிறு குழந்தைகளைப் பராமரித்தல்

17. பாடசாலைகள் மாணவர்களை ஊக்குவிக்காமை

18. பாடசாலைக்கும் பெற்றோருக்குமிடையே தொடர்பு குறைவாகக் காணப்படல்

இலங்கையில் உள்ள எல்லா கல்வி மாவட்டங்களிலும் இடைவிலகிகும் நிலை காணப்படுகின்றது. ஆனால், இடைவிலகியோர் தொகை மாவட்டத்திற்கு மாவட்டம் பொருளாதார நிலைக்கும் புவியியல் நிலைக்கும் நகர கிராம அளவிற்கு ஏற்பவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது இலங்கையில் நீண்ட காலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி இனப்பிரச்சினை காரணமாக எழுந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளையடுத்து சிறுவர்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். சில சிறுவர்கள் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு போதுமான கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டுள்ளது.

போர் சூழலினால் கடந்த மூன்று தசாப்த காலமாக பல இலட்சக்கணக்கான மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். மலையகத்தில் ஆண் பிள்ளைகளைவிட பெண்பிள்ளைகளே கல்வியில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மற்றவர்களின் சுகயீனம் தாய்மார்களின் பிள்ளைப்பேறு விருந்தினர் வருகை திருவிழாக்களின் போது சம்பந்தப்பட்டவர்களை கவனிப்பதற்காக பாடசாலை செல்வதை தடை செய்தல் வீட்டு வேலைகள் அனைத்தையும் தாயோடு பகிர்ந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்படுவதால் வீட்டில் படிக்க நேரமின்மை விசேடமாக பெண்கள் பருவமடைந்ததும் சடங்கு சம்பிரதாயம் என்ற பேரில் மூன்று மாதங்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு மூன்று மாதங்கள் பாடசாலை செல்லாதவிடத்து பாடசாலையை விட்டு இடைவிலகிவிடுகின்றனர்

பெற்றோர்கள் மத்தியில் கல்வி கற்பதிலுள்ள நன்மைகளை எடுத்துக் கூறுவதன் மூலம் பெற்றோர்களின் மேலதிக செலவைக் கட்டுப்படுத்தவும் இதனால் கல்விக்கு கூடிய தொகையை செலவிடவும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான நல்லுறவை ஏற்படுத்தி பெற்றோர்களை பிள்ளைகளில் அக்கறையுள்ளவராக மாற்றுதல் மற்றும் பெற்றோர்கள் முடிந்தளவிற்கு பிள்ளைகளைக் கல்வி பயிலும் வயதில் வருமானம் உழைக்கும் தொழில்களை நாடிச் செல்வதில் ஆர்வத்தைக் குறைத்து இவர்களின் நலனில் தம்மை அர்ப்பணிப்பவராக மாற்றுதல். பாடசாலையில் உள்ள பற்றாக் குறையினை நிவர்த்தி செய்ய வழிகோலுதல் வேண்டும் ஆசிரியர் வளப்பற்றாக்குறையை தீர்க்க தொண்டர் ஆசிரியர் அடிப்படையில் பாடசாலை வசதிக் கட்டுப் பணத்தில் ஊக்குவிப்புக்களை வழங்கி பொருத்தமானவர்களை அல்லது ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கலாம்.

அத்துடன் நகர்ப்புறங்களுக்கு ஆசிரியர் செல்வதைத் தடுக்கும் வகையில் ஒரு பாடசாலையில் குறித்த காலம் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தல். மற்றும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை குறிப்பாக குறித்த பிரதேசத்தை சேர்ந்தவர்களை அல்லது வேறு இடங்களில் இருந்து ஆசிரியர்களை சேவைக்கு அமர்த்துதல் வேண்டும்.

பாடசாலையை விட்டு இடைவிலகலை தவிர்க்கும் நோக்கில் சில கட்டாய நடவடிக்கைகளை கொண்டு வரவேண்டும். பாடசாலைவிட்டு இடைவிலகுவோருக்கு முறைசாராக் கல்வியை வழங்க வேண்டும். இதற்கு அரசாங்க தொழிற் பயிற்சித் திணைக்களம் சிறுகைத் தொழில் திணைக்களம் தொழில்நுட்பக் கல்லூரிகள் என்பன இம்மாணவர்கள் மீது கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

பாடத்திட்டங்களை மாற்றும் போது அதுபற்றி ஆசிரியர்களுக்கு முறையான விளக்கம் கொடுக்க வேண்டும். சேவைக்கால ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆழமாக விளக்கும் வகையில் நுட்பமுறைகளை கையாள வேண்டும். விவசாயம் அதிகமானோரால் மேற்கொள்ளப்படுவதால் பாடத்திட்டத்தில் விவசாயம் சம்மந்தமான படிப்பு புகுத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் நாடிச் செல்லும் சினிமா முகநூல் தேவையற்ற பிரச்சினைகள் என்பவற்றில் இருந்து நீக்கும் முகமாக கிராமங்களில் நூலகம் விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்களின் தேவைகளை முறையாக நிறைவேற்றும் போது பாடசாலை இடைவிலகல்களை குறைத்து முழுமையான இலவசக் கல்வியையும் அதன் பயனையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு தானாக உருவாகும்.இது விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்படுவது அவசியமானதாகும்.

ஏ.எம். கஸ்பியா வீவி
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உதவியாளர், பிரதேச
செயலகம், நாவிதன்வெளி.


Add new comment

Or log in with...