Home » இலங்கையின் கடன் மீட்சிக்காக உகந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்

இலங்கையின் கடன் மீட்சிக்காக உகந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்

– சீன நிதி அமைச்சர் தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
October 19, 2023 4:24 pm 0 comment

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன நிதி அமைச்சர் லியு குன் (Liu Kun) தெரிவித்தார்.

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (19) காலை பீஜிங்கில் இடம்பெற்றதோடு இதன் போதே சீன நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கடியை சமாளிக்க இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் வரவேற்றார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பில் நீண்டகாலமாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதாகவும் சீன நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலான பணியில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT