தென்மாநிலங்களில் கால் பதிக்க பா.ஜ.க வகுக்கும் தந்திரோபாயம்! | தினகரன்

தென்மாநிலங்களில் கால் பதிக்க பா.ஜ.க வகுக்கும் தந்திரோபாயம்!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மேலும் ஒன்பது பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இணை அமைச்சர்களாக இருந்த நான்கு பேர் அமைச்சரவை அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரி ஹர்தீப் பூரி, மும்பை முன்னாள் காவல்துறை தலைவர் சத்யபால் சிங், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கண்ணன்தனம், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் ஷெகாவத், பீகாரின் அஸ்வினி குமார் சவுபே, ராஜ்குமார் சிங், உத்தரப்பிரதேசத்தின் ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோர் புதிய அமைச்சர்களாகி உள்ளனர்.

புதிய அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்பட்டவர்களுக்கு அமைச்சு விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத்துறையின் அமைச்சரவை அமைச்சராகி உள்ளார்.

இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாதுகாப்புத்துறையை கூடுதல் பொறுப்பாக மட்டுமே கவனித்தார். தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பொறுப்பு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு பிரதமர் மோடி, பிரதிநிதித்துவம் அளித்துள்ளார். இதேபோல் கேரள மாநிலத்திற்கும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். மேலும் பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் மத்திய அமைச்சரவையில் சேர்த்திருப்பதன் மூலம், எதிர்வரும் தேர்தல்களை அவர் கவனத்தில் கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

தவிர கர்நாடக மாநிலத்தின் லிங்காயத் பிரிவைச் சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கியிருப்பதன் மூலம் அந்த சமுதாயத்தினரின் வாக்குகளைப் பெற முடியும் என்று பிரதமர் கருதியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படும் நிலையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள், அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தவிர, பொன். ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் துறையுடன் கூடுதலாக நிதித்துறை இணையமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பிரதிநிதியை முக்கியப்படுத்தும் நோக்கில் பிரதமர் செயல்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.

எதிர்வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பி.ஜே.பி-யை எப்படியும் காலூன்றச் செய்து விட வேண்டும் என்ற முக்கிய குறிக்கோளுடன் அக்கட்சி செயலாற்றிக் கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சரவை விரிவாக்கமும் அதனை தெளிவுபடுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.ஆனால் கர்நாடகத்தில் மீண்டும் பி.ஜே.பி ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதா என்பதும், தமிழகத்தில் அக்கட்சி காலூன்ற முடியுமா என்பதும் போகபோகத்தான் தெரியும்.

மோடி மந்திரமும், அமித் ஷாவின் தந்திரமும் தென் மாநிலங்களில் எடுபடுமா என்பதை எதிர்காலத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளை வைத்தே தீர்மானிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014 இல் அமைந்த பின்னர் இதுவரை இரண்டு முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில் நேற்றுமுன்தினம் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மத்தியஅமைச்சரவை பலம், 73 இல் இருந்து 76 ஆக உயர்ந்தது.

இராணுவ அமைச்சரானதன் மூலம் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர், நிதி, உள்துறை, வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் இனிமேல் நிர்மலாவும் கலந்து கொள்வார்.

2019 தேர்தலுக்கு ஆயத்தம்!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்து, மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத் துடன் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், 2019ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் இணையமைச்சராக உள்ளார். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பிறந்தவர் என்றாலும், கர்நாடகாவில் இருந்தே ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் பிறந்தவர் நிர்மலா சீதாராமன் (வயது 58). திருச்சி சீதாலட்சுமி கல்லுாரியில் பி.ஏ படித் தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., (பொருளாதாரம்) பயின்றார். பா.ஜ. செய்தித் தொடர்பாளராக இருந்தார். 2014இல் வர்த்தகத் துறை இணை அமைச்சரானார்.

2016இல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி. ஆனார். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 


Add new comment

Or log in with...