உள்நாட்டுப் போரின் பலிக்கடாக்களாக மியன்மார் முஸ்லிம்கள் | தினகரன்

உள்நாட்டுப் போரின் பலிக்கடாக்களாக மியன்மார் முஸ்லிம்கள்

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த துயரத்தைத் தருகின்றன. அரசுப் படைகளுக்கும் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் அப்பாவி மக்கள் சிக்கிக் கொண்டு உயிரிழக்கிறார்கள்.

சமீபத்தில் ரோக்கைன் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் நடந்த மோதல்களில் 70- இற்கும் மேற்பட்டோர் இறந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வங்கதேச எல்லைக்குள் தப்பிச் செல்ல வேண்டிய சூழல். பலியானவர்களில் அதிகம் பேர் பெண்களும் குழந்தைகளும்தான் என்கிறது இடம்பெயரும் அகதிகள் நலன் குறித்த ஐ.நா. அமைப்பின் சர்வதேசப் பிரிவு.

‘அரக்கான் ரோஹிங்கியா முக்தி சேனை’ என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவ, பொலிஸ் சாவடிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பதில் தாக்குதலில் இராணுவம் இறங்கியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உண்மையில், ராக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக அரசு எடுத்து வரும் திட்டமிட்ட அலைக்கழிப்பு நடவடிக்கைகளைத் தாங்க முடியாமல்தான் எதிர்வினைகள் கிளம்பின. ஆனால், 'தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை' எனும் பெயரில் அப்பாவி மக்களும் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கிறது மியன்மார் அரசு. நிவாரணம் மற்றும் உதவி நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூசியின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை அமைந்திருக்கிறது என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணைளாளரே கண்டிக்கும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

இத்தனைக்கும் ஆங் சான் சூசி வெறும் வெளியுறவுத் துறை அமைச்சர் மட்டுமல்ல, மியன்மாரின் ஜனநாயகப் போராட்டத்தின், மனித உரிமைகள் கோரிக்கைகளின் அடையாளமாக சர்வதேச அரங்கில் பார்க்கப்பட்டவர். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் நிகழ்த்தி வரும் கொடூரச் செயல்கள் குறித்து எதுவும் சொல்லாமல் அவர் மௌனம் சாதிப்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது.

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியன்மார் குடிகளாக அங்கீகரிக்கக் கூடாது என்று பௌத்த தேசியவாதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ரக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கியாக்களின் நிலைமையை ஆராய்ந்த ஐ.நா. சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் தலைமையிலான குழு, ரோஹிங்கியா மக்களுக்கு மியன்மார் குடியுரிமை வழங்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும், அவர்களுடைய நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அந்த அறிக்கையைக் குப்பையில் வீச வேண்டும் எனும் அளவுக்கு தேசியவாதிகள் வன்மம் காட்டுகிறார்கள்.

அடிப்படையான இந்த விஷயங்கள் கூட இல்லையென்றால் அமைதி திரும்புவது எளிதல்ல. மியன்மாரை இப்போது ஆளும் ‘ஜனநாயகத்துக்கான தேசிய லீக்’ கட்சி, இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடி ஜனநாயக உரிமைகளைப் பெற்றோம் என்று பெருமைப்படுவதில் தவறில்லை; அந்த ஜனநாயக உரிமைகளை ரோஹிங்கியாக்களுக்கும் வழங்குவதில் அது பின்தங்கியிருக்கிறது. ரோஹிங்கியாக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்காதவரை, மியன்மார் முழுமையாக ஜனநாயகத்துக்கு மாறிவிட்டது என்று கூறிக் கொள்வதில் அர்த்தமில்லை!

ஹிந்து ஆசிரிய தலையங்கம்


Add new comment

Or log in with...