அரசியல் துரும்பாகிப் போன இலங்கைத் தமிழர்கள்! | தினகரன்

அரசியல் துரும்பாகிப் போன இலங்கைத் தமிழர்கள்!

ஈழத் தமிழர் விவகாரத்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வருகின்றனரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழ்நாட்டின் மதுரையில் வைத்து நிருபர்களிடம் கூறியிருந்ததாக இந்திய ஊடகமொன்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்துக்கள் அனுஷ்டிக்கின்ற விநாயகர் சதுஷ்டி அனுஷ்டானத்துக்காக தமிழகத்துக்குச் சென்றிருந்த வேளையில், அங்குள்ள ஊடகவியலாளர்களிடம் யோகேஸ்வரன் எம்.பி இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் பின்புல அனுபவம் எதனையும் கொண்டிருக்காமல், ஆன்மிகப் பாதையில் தனது வாழ்வை வகுத்துக் கொண்டிருந்த யோகேஸ்வரன், தனது குறுகிய கால அரசியல் அனுபவத்தின் விளைவாக வெளியிட்டிருக்கும் இக்கருத்தானது தமிழ் மக்கள் மத்தியில் எத்தனை தூரம் பொருட்படுத்தப்பட்டிருக்குமென்பதை அனுமானிக்க முடியாதிருக்கிறது.

ஆனாலும் யோகேஸ்வரன் எம்.பி கூறியிருக்கும் அக்கருத்து தவறானதெனக் கூறி விட முடியாதிருக்கின்றது.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளால் மட்டுமன்றி இலங்கையின் அரசியலுடன் தொடர்புபட்ட உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் அனைத்துமே ஈழத் தமிழர் விவகாரத்தை தத்தமது அரசியல் சார்ந்த தேவைகளுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளன.

இலங்கையின் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் கட்சிகள், தமிழ் நாட்டு அரசியல் அமைப்புகள், இந்தியாவில் பதவி வகித்த மத்திய அரசாங்கங்கள், மேற்குலகம், புலம்பெயர் தமிழர் அமைப்புகள் போன்ற அத்தனையுமே தங்களது நலன்களுக்காக ஈழத் தமிழர் விவகாரத்தை பிரதான துரும்பாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன. ஆகவே யோகேஸ்வரன் எம்.பி. தனது கருத்தில் சுட்டிக் காட்டியிருப்பது தமிழக அரசியல்வாதிகளான சிறு பிரிவினரை மாத்திரமேயாகும்.

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர் மாறி மாறி ஆட்சியில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை விவகாரத்தை எவ்வாறு தத்தமது அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தி வந்துள்ளன என்பது சுருக்கமாக விபரித்து விடக் கூடிய விடயமல்ல. சிங்கள மக்கள் மத்தியிலான செல்வாக்கு சரிந்து விடாதிருப்பதற்காகவோ அல்லது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காகவோ இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் தமிழர் விவகாரத்தை தமது அரசியல் துரும்பாகப் பயன்படுத்தியதன் விளைவுதான் நாட்டின் இன்றைய அரசியல் நெருக்கடி!

ஈழத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசுகள் தமது பிராந்திய நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ள அதேவேளை, மேற்குலக வல்லாதிக்க நாடுகளும் தமது தேவையின் நிமித்தம் இவ்விவகாரத்துக்குள் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ பிரவேசித்திருக்கின்றன.

அதேசமயம் வடக்குக் கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் அரசியல் இருப்புக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டதும் தமிழர் விவகாரமே என்று கூறுவதில் தவறேதும் இருக்கப் போவதில்லை.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்துள்ள தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மாத்திரமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பை நோக்கியும் சுட்டுவிரல் நீட்டுவதில் என்ன தவறு உண்டு?

வடக்கு, கிழக்குத் தமிழர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதித்துவம் செய்திருந்த நீண்ட காலப் பகுதியில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்ததன் காரணத்தினால் தமிழ்க் கூட்டமைப்பின் இயங்குநிலை குன்றிப் போயிருந்ததென்பது உண்மைதான்.

ஆனாலும், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை வருடங்கள் பூர்த்தியாகியிருக்கும் இவ்வேளையில், தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டவை எவையென்பதை ஆராயும் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் குற்றம் கூறாமல் இருக்க முடியாது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது ‘அரசியல் தீர்வு’ என்ற இலக்கை மாத்திரம் பிரசாரப்படுத்தியே கடந்த இரண்டரை வருட காலத்துக்கு மேலாக அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வு காண்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் தீர்க்கப்படாத ஏராளமான விடயங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டபடியே உள்ளன. அரசியல் கைதிகள் விவகாரம், வடக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள், காணாமல் போனோர் விவகாரம், கிழக்கில் இடம்பெறும் நில அபகரிப்புகள், கிழக்கு மாகாண சபையினால் தமிழ் மக்கள் மீதான பாரபட்சம் என்றெல்லாம் நீண்டதொரு பட்டியலாக சிக்கல்கள் தீர்க்கப்படாதுள்ளன.

'அரசியல் தீர்வு' என்ற மாயமானை துரத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் தமிழ் மக்களின் ஏனைய பிரதானமான பிரச்சினைகளுக்கான தீர்வில் தமிழ்க் கூட்டமைப்பு கவனம் செலுத்துவதே இன்றைய வேளையில் அவசியமாகும்.

இல்லையேல் ‘ஈழத் தமிழர்களை அரசியல் துரும்பாகப் பயன்படுத்தியுள்ள சக்திகள்’ என்ற வரையறைக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்கள் உள்ளடக்குவது தவிர்க்க முடியாததாகிப் போய் விடலாம். 


Add new comment

Or log in with...