Saturday, April 20, 2024
Home » LTTE சார்பான கருத்து; பயங்கரவாத வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை

LTTE சார்பான கருத்து; பயங்கரவாத வழக்கிலிருந்து விஜயகலா விடுதலை

by Prashahini
October 19, 2023 2:12 pm 0 comment

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் வருகை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று (19) விடுதலை செய்யப்பட்டார்.

2018 ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் யாழப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் மக்கள் சேவைத் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் எழ வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டாரெனவும் அக்கருத்தானது அரசியலமைப்பின் 6ஆவது பிரிவின் திருத்தம், 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் தண்டணைச் சட்டக்கோவை 120ஆம் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றமாகும் என கொழும்பு குற்றப்புலனாய்வுப் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த வழக்கு இன்று (19) நீதிமன்றில் மேலதிக விசாரணைக்காக அழைக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வுப் பகுப்பாய்வு மற்றும் தடுப்புப்பிரிவுப் பொலிஸார் நீதிமன்றில் தமது சமர்ப்பணத்தில் 1978ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழோ விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய உத்தேசிக்கவில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் தங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்தனர்.

இதயடுத்து விஜயகலா மகேஸ்வரன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா, விஜயகலா மகேஸ்வரனை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு நீதிமன்றினை கேட்டுக் கொண்டதை அடுத்து முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் அனுசரணையில் சிரேஸ்ட சட்டத்தரணி காமினி திசாநாயக்க ஜனாதிபதி சட்டத்தரணி கேவி தவராசா, ஆகியோர் இவ்வழக்கில் முன்னிலையாகியிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT