இனங்களிடையே நல்லுறவு, புரிந்துணர்வு வலுப்பெறட்டும்! | தினகரன்

இனங்களிடையே நல்லுறவு, புரிந்துணர்வு வலுப்பெறட்டும்!

இஸ்லாமிய உலகம் இன்று தியாகத்திருநாளாம் ஹஜ் பெருநாளை பேருவகையுடன் கொண்டாடுகின்றது. முப்பது இலட்சத்துக்கும் அதிகமான ஹஜ்ஜாஜிகள் மக்காவில் கூடி ஹஜ் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட கஃபா ஆலயத்தில் அன்று முதல் இன்று வரை ஹஜ் எனும் உலகளாவிய மாநாடு தவறாமல் நடந்து கொண்டே இருக்கின்றது. நபி இப்ராஹீம் புரிந்த தியாகத்தை நினைவூட்டும் விதத்திலேயே உலக முஸ்லிம்கள் ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்களும் இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த வேளையில் தியாகத்தின் மகத்துவம் பற்றி சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமானதாகவே அமையும். பொதுவாக சவால்களை வெற்றி கொள்ள வேண்டுமானால் பல விஷயங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தியாகத்தை கைக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. ஒரு சமூகம் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ள வேண்டுமானால் அச்சமூகம் ஒற்றுமைப்படுத்தப்படுவதும் சில தியாகங்களை புரிவதும் இன்றியமையாததாகும்.

ஹஜ் கடமையானது ஒற்றுமையையும், தியாகத்தையும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. ஆனால் இந்த ஒற்றுமையுணர்வு, தியாக மனப்பாங்கு அண்மைக் காலமாக அருகி வருவதையே வெளிப்படையாகக் காணக் கூடியதாக உள்ளது. இந்த வேதனையானது இலங்கைக்கு மட்டுமானதல்ல. உலகளாவிய ரீதியில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது. ஒற்றுமை, அமைதி, சமாதானம் என உலகம் எவ்வளவுதான் கூச்சலிட்ட போதும், உலகளாவிய மாநாடுகளை நடத்திய போதும் அவை வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாகவே உள்ளன.

உலக நாடுகளில் வாழும் முஸ்லிம்களின் நிலை ஒருபுறம் கவலையளிக்கும் அதேசமயம், இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கிடையே ஒற்றுமை என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. ஏறத்தாழ 10 வீதமாக வாழும் முஸ்லிம் சமூகம் இறை ஏகத்துவக் கொள்கையில் மாற்றமில்லை என்கின்ற போதிலும் தங்களுக்குள் ஆன்மீக மற்றும் அரசியல் ரீதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையிலும் சுயநலம் கொண்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களாலும் பிளவுபட்டுப் போயுள்ளதையே காணக் கிடக்கின்றது.

இந்தப் பாரிய பின்னடைவிலிருந்து சமூகம் விடுபடவேண்டுமானால் ஒற்றுமை கட்டியெழுப்பப்படவேண்டும். ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தி நிற்கின்றது. ஆனால் இன்று முஸ்லிம்களுக்கிடையில்தான் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தினர் இன்று குர்ஆனை, ஹதீஸை மறந்தவர்களாக மேற்குலக நாகரிகத்தின் பிடிக்குள் சிக்கி விட்டார்களோ என்ற அச்சமே காணப்படுகின்றது.

இலங்கை முஸ்லிம் சமூகம் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பல சவால்களை எதிர்கொண்டவண்ணமே உள்ளது. சமூகம் பல தேவைகளையும், குறைபாடுகளையும் வேண்டி நிற்பதையே காணக் கூடியதாக உள்ளது. இந்தச் சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றி கொள்ள வேண்டுமானால் அதற்கான முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அந்தத் திட்டத்தை வகுப்பது யார்? என்ற கேள்வியே இன்று எழுந்துள்ளது. முதலில் முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வேதனைகளையும், சோதனைகளையும் சுமந்ததாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்களது கண்ணீரைத் துடைப்பதற்கு சரியான வழி இன்றளவும் கைகூடாமலேயே காலம் கடந்து கொண்டிருக்கின்றது. அரசியல் முரண்பாடுகள் காரணமாக சரியான வழிகாட்டலை உத்தரவாதப்படுத்திக் கொள்ளவியலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் வாழ்வின் இன்பத்தையும், சந்தோஷத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்தாலும் ஏனைய அனைவரும் சோதனைகளையும், வேதனைகளையுமே சுமத்து அநாதைகளாக்கப் பட்டிருக்கின்றனர். இந்த அவலத்திலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் கடப்பாட்டுக்குள் தலைமைகள் தள்ளப்பட்டுள்ளன. இது அவர்களது கடமையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது. இதுகூட மிகப் பெரிய தியாகமாகவே கொள்ள வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனைய இனச் சகோதரர்களோடு புரிந்துணர்வுடனும், நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கின்றது. அயல் வீட்டார் மாற்று மதத்தினமாக இருப்பினும் அவர்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்தி நிற்கின்றது. அவர்களுடன் சகோதரத்துவத்தை உயர்வாகக் காட்டுவதன் மூலம் நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொள்ள முடியும். அண்டை வீட்டார் பசித்திருக்க தன்வீட்டில் வயிறாற உண்பவன் மனிதநேயம் கொண்டவனாக, உண்மை முஸ்லிமாக இருக்க முடியாது என்பதை உணர வேண்டும்.

சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் சமூகத்தில் துறைசார்ந்தோர் முடித்த பங்களிப்பைச் செய்தாக வேண்டும். நல்ல மனப்பாங்கு ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்பட வேண்டும். தியாகத்திருநாளில் அவ்வாறான உறுதியாக மனப்பாங்குடன் செயற்பட உறுதி பூண வேண்டும். இன்றைய நாளில் தியாகத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம். 


Add new comment

Or log in with...