Thursday, April 25, 2024
Home » “சவர்க்கார நூடுல்ஸ்” இறக்குமதி நிறுவனங்கள் பின்பற்றும் முறை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு அவதானம்

“சவர்க்கார நூடுல்ஸ்” இறக்குமதி நிறுவனங்கள் பின்பற்றும் முறை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு அவதானம்

- மது வரி விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 வரவுசெலவுத்திட்டம் மதிப்பீட்டுக்கு அனுமதி

by Rizwan Segu Mohideen
October 19, 2023 11:26 am 0 comment

“சவர்க்கார நூடுல்ஸ்” இறக்குமதி தொடர்பில் நிறுவனங்கள் பின்பற்றும் முறை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், 1989 ஆம் ஆண்டி 13 ஆம் இலக்க மது வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, அதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதியும் இதன்போது வழங்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்றுமுன்தினம் (17) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற குழுக் கூட்டங்களின் போது சவர்க்காரம் தயாரிப்பதற்கான “சவர்க்கார நூடுல்ஸ்” இறக்குமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒரு சில நிறுவனங்கள் பாம் எண்ணெய்க் கொழுப்பு அமிலங்கள்இறக்குமதி செய்வதாகவும், அண்மையில் சுங்க வரி திருத்தம் செய்தமையினால் அதற்கு 24 % அறவிடப்படுவதாகவும் இதன்போது வெளிப்பட்டது. அத்துடன், ஒரு சில நிறுவனங்கள் சவர்க்கார நூடுல்ஸ் உற்பத்திக்கு குறைந்த வரியின் கீழ் பல்மிடிக் மற்றும் லூரிக் அமிலங்களை இறக்குமதி செய்வதாகவும் இதன்போது இனங்காணப்பட்டது. இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தின் (ITISL) அறிக்கைக்கு அமைய மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவிப்பதற்கு அமைய “சவர்க்கார நூடுல்ஸ்” உடன் ஒப்பிடும் போது பல்மிடிக் மற்றும் லூரிக் அமிலங்களைப் பயன்படுத்தி சவர்க்காரம் உற்பத்தி செய்வதில் பாரிய தொழிநுட்ப முதலீடு மாற்றமோ இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, சவர்க்கார நூடுல்ஸ் நேரடியாக இறக்குமதி செய்வதை விட குறிப்பிடத்தக்க அளவு குறைந்த விலையில் அமிலங்களை இறக்குமதி செய்வதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மோசடி செய்கின்றதா என்பதைக் கண்டறிய வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழு வலியுறுத்தியது.

அதற்கமைய, இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்தின் அறிக்கையை உறுதிப்படுத்தி குழுவுக்கு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன், வரித் திருத்தம் ஊடாக ஈட்டப்படும் மாதாந்த வருமானம் பற்றியும், சந்தையில் சவர்க்கராத்தின் விலை மாற்றம் இடம்பெறும் விதம் தொடர்பிலும் குழுவுக்கு அறிவிக்குமாறும் நிதி அமைச்சுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டது.

மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீடு கருத்திற் கொள்ளப்பட்டதுடன், அதற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் (கலாநிதி) சுரேன் ராகவன், (வைத்தியகலாநிதி) சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, நிமல் லான்சா, பிரேம்நாத் சி. தொல்வத்த, மதுர விதானகே, பாட்டலி சம்பிக்க ரணவக்க, மயந்த திசாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, விஜிர அபேவர்தன மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT