Wednesday, April 24, 2024
Home » சிறுவர் சேமிப்புகளுக்கான வெகுமதிகள் அனுபவத்தை மேம்படுத்த முன்வந்துள்ள அமானா வங்கி மற்றும் Daraz

சிறுவர் சேமிப்புகளுக்கான வெகுமதிகள் அனுபவத்தை மேம்படுத்த முன்வந்துள்ள அமானா வங்கி மற்றும் Daraz

by Rizwan Segu Mohideen
October 19, 2023 7:34 am 0 comment

அமானா வங்கி, இலங்கையின் முன்னணி இலத்திரனியல் வணிக சந்தைப்பகுதியான Daraz உடன் கைகோர்த்து, வங்கியின் சிறுவர் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு புத்தாக்கமான அன்பளிப்பு அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளது. இளம் சேமிப்பாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்காக இலத்திரனியல் வணிக கட்டமைப்பை பயன்படுத்தப்படுவதால் இந்த பங்காண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சிறுவர் சேமிப்புகளில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த பங்காண்மை அமைந்துள்ளது.

இந்தப் பங்காண்மையினூடாக, தகைமை வாய்ந்த சிறுவர் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு ஒன்லைன் அன்பளிப்பு வவுச்சர்கள் பரிசாக வழங்கப்படும். இவற்றை Daraz அப்ளிகேஷனில் அல்லது இணையத்தளத்தில் பயன்படுத்தி கொள்வனவுகளை மேற்கொள்ள முடியும். இந்த புதிய வெகுமதித் திட்டத்தினூடாக, சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொருட் தெரிவுகளைக் கொண்ட கட்டமைப்பிலிருந்து சிறுவர்களுக்கு தமக்கு பிடித்த தெரிவுகளை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், சில பொருட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய அன்பளிப்பு முறைகளுக்கு அப்பால் சென்று, பிரத்தியேகமான அனுபவத்தை அவர்களுக்கு வழங்குகின்றது. வாடிக்கையாளர்களுக்கு தமது வீட்டில் சௌகரியமாக இருந்தவாறே, தமக்கு தேவையான பொருட்களை தெரிவு செய்து பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதுடன், வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள வங்கிக் கிளைக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்துள்ளது.

தகைமை வாய்ந்த சிறுவர் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு Daraz ஒன்லைன் அன்பளிப்பு வவுச்சர்களை ரூ. 1000 முதல் ரூ. 80000 வரை அமானா வங்கி வழங்கும். வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நியமிக்கப்பட்ட சேமிப்பு தொகையை எய்தும் போது இந்த வெகுமதிகள் தீர்மானிக்கப்படும். தகைமை தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு SMS வாயிலாக அறிவிக்கப்படும்.

அமானா வங்கியுடனான பங்காண்மை தொடர்பில் Daraz இன் முகாமைத்துவ பணிப்பாளர் பார்ட் வான் ஜிக் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த வெகுமதித் திட்டத்துக்காக அமானா வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நிதிசார் வளர்ச்சியில் அங்கம் பெறுவதற்கும், இலங்கையின் இளம் சேமிப்பாளர்களின் சேமிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பு வழங்கவும் Daraz க்கு வாய்ப்பளிப்பதாக அமைந்துள்ளது. எமது ஒன்லைன் அன்பளிப்பு வவுச்சர்கள் இளம் பாவனையாளர்களுக்கு மனம்மறவாத அன்பளிப்பு அனுபவத்தை வழங்குவதுடன், இலத்திரனியல் வணிகம் மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை மேலும் பயன்படுத்த தூண்டுவதாகவும் அமைந்திருக்கும். எமது பரந்த தெரிவுகள், விநியோக சேவைகள், 24/7 வாடிக்கையாளர் சேவை மற்றும் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் போன்றவற்றினூடாக இந்த மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு Daraz சிறந்த நிலையில் காணப்படுகின்றது. இலங்கையில் டிஜிட்டல் வெகுமதித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல நாம் தயாராகவுள்ளதுடன், இந்த முக்கிய படியை முன்னெடுத்துள்ளமைக்காக அமானா வங்கிக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இது உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் இந்தப் பங்காண்மையின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “Daraz உடன் பங்காண்மையை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த வெகுமதித் திட்டத்தினூடாக, இளம் வயது முதல் சேமிப்புப் பழக்கத்தை தூண்டுவதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமது பிள்ளைகளுக்காக சேமிக்கையில் பெற்றோருக்கு வெகுமதிகளை பெற்றுக் கொள்ளும் அனுபவத்தையும் வழங்குகின்றது. இலத்திரனியல் வணிகம் நாடு முழுவதிலும் பரந்தளவில் பின்பற்றப்படும் நிலையில், எமது வாடிக்கையாளர்களுக்கு Daraz ஊடாக வெகுமதிகளைப் பெற்றுக் கொடுக்க நாம் தீர்மானித்தோம். அதனூடாக அவர்களுக்கு தெரிவுகளை மாத்திரமன்றி, பல சலுகைகளையும் சௌகரியத்தையும் வழங்கியுள்ளோம்.” என்றார்.

அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “Daraz உடன் கைகோர்த்து, இளம் சேமிப்பாளர்களுக்கு நினைவில் நிலைத்திருக்கும் சேமிப்பு அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதனூடாக, எமது சிறுவர் சேமிப்புக் கணக்குக்கு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளோம். பெருமளவான வாடிக்கையாளர்கள் Gen Z மற்றும் Gen A தலைமுறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், பெருமளவு பொருட்கள் மற்றும் பருவகால கொடுப்பனவுகளுடனான இந்த ஒன்லைன் கட்டமைப்பு பல தெரிவுகளை ஈடு செய்வதாக அமைந்திருப்பதுடன், சேமிப்புகள் மற்றும் வெகுமதிகளுக்கான தேவையை நிவர்த்தி செய்து, பாரம்பரிய அன்பளிப்புத் திட்டங்களில் காணப்படும் பல சிக்கல்களை இல்லாமல் செய்வதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

அமானா வங்கி பற்றி
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

Daraz குழுமம் பற்றி
2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Daraz, தெற்காசியாவின் முன்னணி e-வணிக கட்டமைப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் திகழ்கின்றது. 200,000க்கு அதிகமான விற்பனையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தினூடாக, 500 மில்லியன் மக்களைக் கொண்ட பிராந்தியத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து செல்லும் நுகர்வோர் மத்தியில் சென்றடைவதற்கு வலுவூட்டப்படுகின்றது. Daraz Express மற்றும் Daraz Pay ஊடாக, மிகவும் வினைத்திறனான மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சரக்குக் கையாள்கை மற்றும் கொடுப்பனவு உட்கட்டமைப்பை அதன் சந்தைகளில் செயற்படுத்துகின்றது. 2030 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு சேவைகளை வழங்கும் சம்பியனாகத் திகழ்வது என்பது Daraz’இன் நோக்கமாகும். மேலதிக தகவல்களுக்கு www.daraz.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT