மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள் | தினகரன்

மக்களின் கட்டளையை சிதைக்காது கிரிக்கெட்டை காப்பாற்றுங்கள்

மக்களின் கட்டளையை சிதைக்காது, கிரிக்கெட் அழிவிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும் எனவும் கிரிக்கெட் நிர்வாகம் ஒரு இடைக்கால குழு அல்லது ஒரு ஆணையாளரிடம் மாற்றப்படவேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்து அர்ஜூன ரணதுங்க ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, "விளையாட்டுத்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தலில் மக்களின் விருப்பத்திற்கிணங்கவும் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கும் கிரிக்கெட் உப தலைவர் பதவிக்கு நான் போட்டியிட்டேன். ஆனால் தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றன.

விளையாட்டு சட்டத்தின் படி சிலர் போட்டியிட முடியாது. ஆனால் ஊழல் நிறைந்த குடும்பப் பின்னணியை கொண்ட திலங்க சுமதிபால போட்டியிட்டார். மூன்று முன்னாள் அமைச்சர்கள் திலங்க சுமதிபாலவின் வேட்புமனுக்களை நிராகரித்தனர்.

ஆனால் தற்போதைய அமைச்சர் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். அதன் விளைவாக நான் மனித உரிமைகள் மீறல் ஆணைக்குழுவுக்கு முறைபாடு செய்ய நேர்ந்தது. நான் மீண்டும் தெரிவிப்பது யாதெனில், எல்லோரும் சேர்ந்து முக்கிய முடிவை எடுக்கவேண்டும். இது தொடர்பாகவே நான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளேன். குறிப்பாக ஞாயிறு இடம்பெற்ற போட்டியின் போது இரசிகர்கள் நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தமையானது கவலையளிக்கின்றது.

குறிப்பாக வீரர்களின் மனநிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவிலைலை. குறிப்பாக வீரர்கள் முழுநாளும் பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களிடம் குடும்பத்துடன் இருக்கக்கூட கூட நேரம் காணப்படவில்லை. அப்படி இருக்கையில் தற்போது மனதளவில் உடைந்து போயுள்ளனர். தற்போதைய நிர்வாகம் இதனை தீர்க்க தவறிவிட்டனர்.

தற்போதைய நிர்வாகம் விழிப்போடு இல்லை. அவர்கள் ஒரு முறையான நிறுவாகத்தை ஏற்படுத்தவில்லை. வீரர்களுடைய மனநிலையை மேம்படுத்த போதிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவில்லை.

இந்திய ரசிகர்களை போல நடந்துகொள்ளவேண்டாம் என நான் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன். எமக்கு சிறந்த கலாசாரம், பாரம்பரியம் உண்டு. வீரர்களை குறைகூறுவதை விட்டு கிரிக்கெட் நிருவாகத்திடம் கேள்வி கேளுங்கள். அவர்கள்தான் இதற்கு முழுப்பொறுப்புடையவர்கள். முன்னர் இருந்த வீரர்கள் தமக்கென்ற ஒரு நிலையை ஏற்படுத்தினர். ஆனால் தற்போது அடுத்து ஒரு வாய்ப்பு உருவாகுமா என்பது கேள்வியாக மாறியுள்ளது.

தினேஸ் சந்திமால் மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோர் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என நான் கூறியபோதும், நிருவாகம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. யாருடைய திறமையையும் நிருவாகத்தினால் மறைக்கமுடியாது. 40-50 வீரர்களை நாங்கள் தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

போட்டிகளுக்கு, அரசியல் தலையீடு இல்லாமல் வீரர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். குறிப்பாக காமினி திசாநாயக்க மற்றும் டொரின் பெனாண்டோ போன்றோர் விளையாட்டை முன்னேற்ற அதிகளவான் தியாகங்களை செய்துள்ளனர். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் இது தொடர்பாக கவனமில்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகம். விளையாட்டு அடி மட்டத்திற்கு போய்விட்டது. இதற்கு உடனே மாற்றம் தேவை. நான் எனது கடமையை நிறைவேற்றுவேன்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் அனுப்பியதன் மூலம் மக்களின் பொறுப்பை நிறைவேற்றியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்தார்.

 


There is 1 Comment

Pages

Add new comment

Or log in with...