நிதிக்குற்ற நீதிமன்றம் சரியானதொரு தீர்வு | தினகரன்

நிதிக்குற்ற நீதிமன்றம் சரியானதொரு தீர்வு

'நிதி குற்றங்களை விசாரணை செய்யும் நீதிமன்றப் பிரிவு தாமதமாக வந்தாலும் அது சரியான தீர்வாகும்' என்று சட்டத்தரணி சுனில் வடகல கூறுகிறார்.

நீண்ட காலத்துக்கு முன்னரே நிதிக் குற்றம் தொடர்பாக விசேட நீதிமன்றப் பிரிவொன்றை அமைப்பது குறித்து பேசப்பட்டது. அவ்வாறான நீதிமன்றப் பிரிவொன்றை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த செய்தியுடன் மீண்டும் அவ்விடயம் அரங்குக்கு வந்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விசேட நீதிமன்ற பிரிவொன்றை ராஜபக்ஷக்களை தண்டிக்கவே அமைக்கப்படுவதாகக் கூறுகின்றார்கள். மேலும் ராஜபக்ஷக்களின் ஊழல் மோசடிகளை நியாயப்படுத்துவோரும் இதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள்.

அதைத் தவிர இவ்வாறான பிரிவொன்றை அமைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இது விசேட நீதிமன்றமல்ல.. விசேட நீதிமன்றமொன்றை வேறாக அமைப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. ஆனால் உயர் நீதிமன்றில் பிரிவொன்றை அமைக்க அரசியலமைப்பில் தடையில்லை.

விசேட பிரிவினூடாக எந்தவொரு நிதிக் குற்றம் தொடர்பாகவும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் வழக்கு விசாரிக்கும் திறன் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறான நீதிமன்ற பிரிவொன்றை அமைக்கும்படி விஜேதாச ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தபோது அரசியலமைப்பை மாற்றமுடியாதெனக் கூறினார். அரசியலமைப்பை மாற்றாமல் தற்போதும் இவ்வாறான பிரிவுகள் பல உயர்நீதிமன்றத்தில் நடைமுறையிலுள்ளன.

விசேட பொலிஸ் தொகுதிகளை உருவாக்க முடியுமென பொலிஸ் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அமையும் விதம்பற்றி அரசியலமைப்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

'நீதிமன்றம்' என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கொழும்பு அளுத்கடையில் எட்டு நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. அதனை அர்த்தப்படுத்தினால் கொழும்பு அளுத்கடையில் ஒரு நீதிமன்றமே இருக்க வேண்டும். அது சாதாரணமாக நாம் விளங்கிக் கொள்ளும் விதமாகும். ஆனால் அரசியலமைப்புப்படி அர்த்தப்படுத்தினால் தேவைக்கேற்ப நீதிமன்ற பிரிவுகளை உருவாக்க முடியும்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்த கைதிகளின் பாதுகாப்புக் கருதி சிறைச்சாலையில் நீதிமன்றம் சிறையிலுள்ளவர்களின் வழக்கை விசாரிக்கவே அமைக்கப்பட்டது. அங்கு அரசியலமைப்பு குறுக்கிடவில்லை அல்லவா? கொழும்புக்கு வெளியே விவாகரத்து, சிவில், விவகாரங்கள், காணி வழக்குகள் அனைத்தும் ஒரே நீதிமன்றத்தாலேயே விசாரிக்கப்படுகின்றன.

ஆனால் கொழும்பில் விவாகரத்து வழக்குகளை விசாரிக்க மாத்திரம் அளுத்கடையில் வேறான நீதிமன்ற பிரிவொன்றுள்ளது. அதற்கு காரணம் அதிகளவு விவகாரத்து வழக்குகள் அங்கு வருவதனாலாகும். அதேபோல் தத்தெடுக்கும் வழக்கை விசாரிக்க ஒரு பிரிவும், காணிப் பிரச்சினைகள் தொடர்பாக வேறொரு நீதிமன்றமும் உள்ளன. சிவில் வழக்குகளும் வர்க்கப்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் வழக்கு கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களாலேயே விசாரிக்கப்படுகின்றன. இவ்வாறு பலவிதமான வழக்குகளை வகைப்படுத்திவேறு பிரிவுகள் மூலம் விசாரிக்க முடியும்.

சேயா சதெவ்மீ கொலை வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டுமென முடிவு செய்து வேறான பிரிவொன்றை அமைத்து விசாரணையை தினந்தோறும் நடத்தி விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. யாழ்ப்பாண மாணவி வித்யா கொலை வழக்கும் இவ்வாறான முறையிலேயே விரைவாக விசாரணை நடத்தப்படுகின்றது.

நிதி துஷ்பிரயோக சட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகளை விசாரிக்க வேறான பிரிவொன்றை அமைக்க முடியும். அதற்கான எந்தவொரு அரசியலமைப்புச் சட்டத்தையும் மீற வேண்டிய அவசியமுமில்லை. கொலைக் குற்றம், தொழிலாளர் அடிப்படை உரிமைகள் போன்ற வழக்குகள் உயர் நீதிமன்றத்தாலேயே விசாரிக்கப்படுகின்றன..

இதனால் உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தேங்கியுள்ளன.

உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் ஒரு வருடம் வரை ஒத்திவைக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அதிகளவு வழக்குகள் காணப்படுவதாகும். தற்போது உயர்நீதிமன்றத்திலுள்ள வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு விட்டு விட்டு, கடந்த அரசாங்க காலத்தில் நடைபெற்ற நிதிமோசடிகள் தொடர்பான வழக்குகளை வேறு நீதிமன்ற பிரிவில் நீதிபதியொரிவரின் கீழ் விசாரிக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் பாராட்டக்கூடிய விடயமாகும். நாட்டு மக்கள் இதனை நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தியதனால் அரசாங்கத்திலுள்ள சிலருக்கு ராஜபக்ஷ காலத்து கள்வர்களுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அதற்கு இணைந்ததாக இந்த நீதிமன்றப் பிரிவு அமைக்கப்படுமானால் நாம் எதிர்பார்க்கும் பலனை அடைவது சிரமமாகும்.

எப்போது இந்த நீதிமன்ற பிரிவு வெற்றியடையும் என்றால் நாட்டில் ஊழல் மோசடிகளை குறைக்கவும் மோசமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கு உண்மையாகவே தண்டனை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டால் மாத்திரமேயாகும். கடந்த அரசாங்க காலத்தில் வானமும் பூமியும் ராஜபக்ஷக்களுடையதாக இருந்தன.

நாட்டின் பிரதான சொத்துக்கள் அவர்களுடையதாகவிருந்தன. மாதாந்த வருமானத்தைவிட அதிக வருமானத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள் அது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த அரசாங்க மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்தும் எந்தவொரு மோசடியாளருக்கோ குற்றவாளிகளே குற்றப்பத்திரம் கூட தாக்கல் செய்யப்படவில்லை.

ஊழல் மோசடி தொடர்பாக எவ்வளவு விசாரணைகள் நடத்தினாலும் குறைந்தபட்சம் ராஜபக்ஷவை சுற்றியிருந்த ஒருவர் மீது கூட குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு 101 ஆவணங்கள் விசாரணை செய்து கையளிக்கப்பட்டுள்ளன. அதில் 87 பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிடமிருந்தும் 14 குற்ற விசாரணை திணைக்களத்திடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் வழக்கு தொடர்பான குறிப்பிட்ட ஆவணங்கள் இவ்வாறு அங்கு தேங்கி இருப்பதற்கான காரணம் வழக்கு விசாரணை தாமதமென அனைவரும் அறிவார்கள்.

சட்டமா அதிபர் கூட ஒரு இலக்கோடு தனது கடமையை துரிதப்படுத்த வேண்டுமென்றால் குறிப்பிட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும். ஆகவே இவ்வாறான விசேட நீதிமன்றம் பிரிவு அமைக்கப்படுமானால் அத் தாமதத்தைத் தவிர்க்கலாம். இரண்டு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டிய இத்திட்டம் தற்போதாவது ஆரம்பிக்கப்பட்டது மிகவும் முக்கிய நடவடிக்கையாகும்.

துமிந்த சம்பத்
தமிழில்: வீ. ஆர். வயலட்


Add new comment

Or log in with...