வடகிழக்குக்கும் தெற்குக்கும் வெவ்வேறு அணுமுறை கூடாது! | தினகரன்

வடகிழக்குக்கும் தெற்குக்கும் வெவ்வேறு அணுமுறை கூடாது!

தென்னிலங்கையில் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடுவதற்கு காரணமானவர்களோடு குரோதம் பாராட்டாமல் அவர்களோடு இணைந்து செயற்பட முடியுமானால், ஏன் வடக்கில் ஆயுதமேந்திய இளைஞர்களுடனும் அங்கு வாழும் மக்களுடனும் இணைந்து செயற்பட முடியாது எனக் கேள்வி எழுப்பியிருக்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, சகல இனத்தவர்களும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை விலியுறுத்தியிருக்கிறார்.

வடக்கில் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே 30 வருட காலமாக யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தெற்கில் அன்று நடந்ததை ஜனநாயக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாகவே நோக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வடக்கின் மணலாறு (வெலிஓயா) பகுதிக்கு கடந்த வாரம் விஜயம் செய்த அமைச்சர், அங்கு வாழும் மக்களுக்காக ஜனாதிபதி மக்கள் சேவைத் திட்டத்தை ஆரம்பித்து வைத்துப் பேசும்போதே இக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே தெற்கிலிருந்து வடக்கு செல்லும் அரசியல் தலைவர்கள் அங்கு வாழும் மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் எடுத்து நல்ல பல யோசனைகளை முன்வைக்கின்றனர். இது தெற்கின் மனமாற்றத்தையே வெளிப்படுத்துவதாகக் கொள்ள முடிகிறது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்களோ, அவர்களின் குடும்பத்தினர்கள், உறவுகள் எவராக இருந்த போதிலும் அவர்கள் தமது மனநிலையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து அரச சேவையில் இணைந்து கொள்ள வேண்டுமென நல்லாட்சி அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இது வரவேற்கத்தக்க விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது. அப்படியின்றேல் தமது ஆயுதக் கலாசார மனநிலையை கைவிட்டு ஜனநாயக அரசியலுக்குள் இணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை தொடங்கலாம் என்றும் அமைச்சர் தமது பகிரங்க அழைப்பில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பழைய மரபுகளை உடைத்தெறிந்து புதிய அரசியல் பாதையில் இணைந்து கொள்ள வேண்டுமென்பதே இந்த அழைப்பின் நோக்கமாகும்.

யதார்த்த ரீதியில் பார்க்கும் போது சுதந்திரத்துக்குப் பின்னர் ஒன்றுபட்டு வாழமுடியும் என்ற கோட்பாடு மேலோங்கிக் காணப்பட்ட போதிலும், காலவோட்டத்தில் மக்கள் இன ரீதியில் சிந்திக்க முற்பட்டதால் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையில் பழுது ஏற்பட்டது. அன்று வடக்கில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்துவதற்கு அன்றைய அரசியல் கலாசாரமே பிரதான காரணமாக அமைந்தது. இதனை எந்தச் சக்தியாலும் மறுத்துரைக்க முடியாது.

தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வித்தியாசமானதாகும். தமது தாயக மண்ணில் குடியேறி வாழ வேண்டுமென்பதே தமிழ் சமுதாயத்தின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

வட புலத்தில் தமிழ் மக்களின் வாழ்விட உரிமையை எந்தச் சக்தியும் நிராகரிக்க முடியாது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் வித்தியாசமானவையாகும். அதனை மேற்கு மக்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இரண்டுக்குமிடையில் பாரிய வித்தியாசமுண்டு என்பதையும் மறுக்க முடியாது.

நாட்டில் வாழும் ஏனைய இனமக்களுடன் இணைந்து நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப உசிதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதுதான் இன்றைய பிரதான நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைய வேண்டுமானால் புரிந்துணர்வுடன் இணைந்து செயற்பட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். தனித்து நின்று எம்மால் எதனையும் சாதித்துவிட முடியாது. ஒவ்வொருவர் மனதிலும் நல்லெண்ணம் துளிர்விட வேண்டும். அதனை நாம் சரியாகப் பயனபடுத்த வேண்டும்.

இனங்களுக்கிடையே நலலெண்ணம் வளர்ந்தோங்கினால் மட்டுமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும் வடக்கு, தெற்கு, கிழக்கு என்று பிரிந்து நின்று சிந்திக்க முற்பட்டால் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது வெறும் கானல் நீராகவே முடிந்துவிடும். கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக அனுபவித்த வேதனைகளை நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கும் விட்டுச் செல்ல முடியாது.

வட பகுதிப் பிரதேசங்கள் மிகவும் கஷ்டப் பிரதேசங்களாகவே அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களே இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பின்னடைவு கண்டுள்ளது. அந்த வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டியதே இன்றைய பிரதான விடயமாக நோக்க வேண்டியுள்ளது.

இந்த அடிப்படையிலேயே அரசாங்கம் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளை மட்டுமின்றி காலாதிகாலமாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. அடுத்த இரண்டு வருட காலத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் ஜனாதிபதியும, பிரதமரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிடுகின்றார்.

வடக்கோ, கிழக்கோ, தெற்கோ எந்தப் பிரதேசமானாலும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசு ஒரே கண்கொண்டுதான் பார்க்க வேண்டும். இதில் பெரும்பான்மை சிறுபான்மை என்றோ, இன, மத, மொழி வேறுபாடோ பார்க்கப்படக் கூடாது. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனமக்களும் சரிசமமாகவே நோக்கப்பட வேண்டும்.

மனிதாபிமான நோக்கில் அவர்களது பிரச்சினைகள் பார்க்கப்பட வேண்டும். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சம நீதிகிட்ட வேண்டும். பெயரளவில் ஜனநாயகம் இருப்பதால் எதுவித பயனுமில்லை. அரசாங்கத்தின் இந்த சாதகமான சமிக்ஞை கூடிய விரைவில் நிறைவேற வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். வாக்குறுதி பேச்சோடு முடிந்து விடக்கூடாது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...