உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றம் | தினகரன்

உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டம் நிறைவேற்றம்

 
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
குறித்த சட்டமூலம் தொடர்பில் இன்று (25) மிக நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் குறித்த சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டதோடு, எதிராக எவ்வித வாக்குகளும் அளிக்கப்படவில்லை. மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதன்போது, குறித்த சட்டமூலத்தில் தினேஷ் குணவர்தனவினால் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை அரசாங்க தரப்பு அங்கீகரிக்காமையால், சபையில் கூச்சல் குழப்ப நிலை உருவானது.
 
கிராம உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகிய கள உத்தியோகத்தர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட முடியாது எனும் சரத்தை மாற்றியமைக்கும் திருத்தத்தை, தினேஷ் குணவர்தன முன்வைத்திருந்தார்.
 
இதனை அடுத்து, அவ்விடயம் குறித்தான சரத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வாக்கெடுப்பொன்றை மேற்கொள்ளுமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அதற்கான தனியான வாக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது குறித்த திருத்தத்திற்கு ஆதரவாக 43 பேரும் எதிராக 117 பேரும் வாக்களித்ததோடு, ஒருவர் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
குறித்த வாக்கெடுப்புக்கு, இலத்திரனியல் வாக்கெடுப்பு கருவி பயன்படுத்தப்பட்டிருந்தது.
 

Add new comment

Or log in with...