மியன்மாரில் தீப்பற்றி எரியும் ரொஹிங்கிய கிராமங்கள்: செய்மதி படங்கள் அம்பலம் | தினகரன்


மியன்மாரில் தீப்பற்றி எரியும் ரொஹிங்கிய கிராமங்கள்: செய்மதி படங்கள் அம்பலம்

 

மியன்மாரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது முதல், ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 பகுதிகளில் பரந்த அளவில் தீ பரவி இருக்கும் செய்மதி படங்களை மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் நிராயுதபாணியான ரொஹிங்கிய ஆண், பெண் மற்றும் சிறுவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் சொத்துக்களுக்கு தீ வைப்பதாகவும் குடியிருப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனினும் அரகான் ரொஹிங்கியா மீட்பு இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையில் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் 100 பேர் வரை கொல்லப்பட்டதாக மியன்மார் நிர்வாகம் கூறுகிறது.

அரச படைகளுடனான மோதலின்போது ரொஹிங்கிய தீவிரவாதிகள் தீமூட்டி தாக்குதலில் ஈடுபடுவதாக மியன்மார் நிர்வாகம் குறிப்பிடுகிறது. ஆனால் இராணுவமே நீதிக்கு புறம்பான கொலைகளில் ஈடுபடுவதாக ரொஹிங்கியாக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“இந்த தீமூட்டிய சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மதீப்பிட்டை பெறுவதற்கு மியன்மார் அரசு சுயாதீன கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதில் 100 கிலோமீற்றர் பகுதியை தீ அழித்திருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2016 ஒக்டோபரில் ரொஹிங்கிய போராளிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தாக்குதலின்போது தீ மூட்டப்பட்ட பகுதியை விடவும் இது பெரிதாக உள்ளது. செய்மதி ஊடே இந்த தரவுகளை பெற்றிருக்கும் மனித உரிமை கண்காணிப்புக் குழு இதனால் 1,500 வீடுகள் வரை அழிக்கப்பட்டிருப்பதாக கணித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நீடிக்கும் வன்முறைகளால் 3,000க்கும் அதிகமான ரொஹிங்கியாக்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான ரொஹிங்கியாக்கள் எல்லையில் குவிந்திருப்பதாக பங்களாதேஷ் குறிப்பிட்டுள்ளது. பங்களாதேஷ் எல்லை காவல் படையினர் எல்லையில் ரோந்து நடவடிக்கையை பலப்படுத்தி இருப்பதோடு, எல்லையை கடக்கும் ரொஹிங்கியாக்களை திருப்பி அனுப்பி, வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை இவ்வாறு எல்லையை கடந்த 90 ரொஹிங்கியாக்களை கைது செய்த பங்களாதேஷ், அவர்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பியது.

மியன்மாரில் ரொஹிங்கியாக்களை இலக்கு வைத்து 2016 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் சுமார் 87,000 அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.

எனினும் இராணுவம் அங்கு இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஐ.நா நம்புவதோடு மியன்மார் அரசு அதனை மறுத்து வருகிறது. 

 


Add new comment

Or log in with...