நாளாந்தம் அநியாய மரணங்கள்! | தினகரன்

நாளாந்தம் அநியாய மரணங்கள்!

இலங்கையில் விபத்து மரணங்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. வீதிகளில் அன்றாடம் இடம்பெறுகின்ற வாகன விபத்துகளால் ஏற்படுகின்ற மரணங்கள் மாத்திரமே 'விபத்து மரணங்கள்' என்ற வரையறைக்குள் அடங்குவதில்லை. எதிர்பாராத விதமாக, தற்செயலாக ஏற்படுகின்ற ஆபத்துகளால் சம்பவிக்கும் மரணங்களும் 'விபத்து மரணங்கள்' என்றே கொள்ளப்படுகின்றன.

இயற்கையான அல்லது செயற்கையான அனர்த்தங்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள், கடல், ஆறு, குளம் போன்றவற்றில் ஏற்படுகின்ற விபத்துகளால் சம்பவிக்கின்ற மரணங்கள், வாகன விபத்துகளால் மக்கள் உயிரிழத்தல், மின்னல் மற்றும் மின்சாரத் தாக்குதல், பிராணிகளின் தாக்குதலால் ஏற்படும் மனிதப் பலிகள் என்றெல்லாம் ஏராளமான சம்பவங்களால் நாளாந்தம் அதிகளவு மக்கள் அநியாயமாக உயிரிழக்கின்றனர். இவையெல்லாம் 'விபத்து மரணங்கள்' என்றே பதிவு செய்யப்படுகின்றன.

வீதிகளில் வாகன விபத்துகளால் ஏற்படுகின்ற உரிழப்புகளே இவற்றில் கூடுதலாக உள்ளன. வாகன விபத்துகளால் எமது நாட்டில் தினந்தோறும் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது தற்போது 7 ஐத் தாண்டி விட்டது. சிறியதொரு நாடென்ற வகையில் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகமானதாகும்.

வாகனங்களின் பெருக்கம், அதிகரித்த வேகம், மது போதையில் வாகனம் செலுத்தல், போக்குவரத்து விதிமுறைகளை உதாசீனம் செய்தல், தனியார் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கிடையேயான தொழில் போட்டி என்றெல்லாம் வீதி விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வாகனப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான தண்டனை எமது நாட்டில் போதாது என்ற அபிப்பிராயம் மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இக்கருத்தில் உண்மை இல்லாமலில்லை. சட்டத்தின் மீதான அச்சம் குறைவாக இருப்பதனாலேயே வாகன சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்வதற்கு முற்படுகின்றனர். எந்தவொரு பாரதூரமான குற்றத்துக்கும் அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு தப்பிக் கொள்ளலாமென்ற சுபாவம் வாகன சாரதிகள் மத்தியில் நிலவுகின்றது.

வாகனப் போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. அபராதத் தொகை அதிகரிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அபராதத் தொகை அதிகரிப்பு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரும் நாளாந்த வாகன விபத்துகள் அதே எண்ணிக்கையில் தொடருமானால் அபராதத் தொகை அதிகரிப்பினால் எதுவித பயனுமில்லை என்றே நாம் கொள்ள வேண்டும்.

வீதிப் போக்குவரத்துச் சட்டத்தை உரியபடி நடைமுறைப்படுத்துவதில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைகளில் குறைபாடுகள் நிலவுவதை மக்கள் எப்போதும் சுட்டிக்காட்டியபடியே உள்ளனர். சாரதிகளால் இழைக்கப்படுகின்ற பாரிய குற்றங்களை கண்டும் காணாதது போல அலட்சியம் செய்கின்ற போக்குவரத்துப் பொலிஸார், சிறு குற்றங்களை இழைப்போருக்கு மாத்திரம் அபராதம் விதிப்பதாக பரவலாக புகார்கள் வருகின்றன. நாளாந்தம் எவ்வாறாவது குறித்ததொரு

எண்ணிக்கையான போக்குவரத்துக் குற்றங்களைப் பதிவு செய்து, அபராதமும் விதித்து விட்டால் போதுமென்ற மனோநிலையிலேயே போக்குவரத்துப் பொலிஸார் உள்ளதாகத் தெரிகின்றது.

வீதிகளில் தனியார் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகளால்

இழைக்கப்படுகின்ற குற்றங்களில் அதிகமானவற்றை போக்குவரத்துப் பொலிஸார் கண்டு கொள்ளாமலிருப்பதைப் பார்க்கின்ற போது, இவ்வாறு எண்ணுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

பொதுமக்கள் கூறுகின்ற புகார்களில் அதிகமானவை வாகனப் போக்குவரத்துக் குற்றங்களை மூடி மறைப்பதற்கு கையாளப்படுகின்ற இலஞ்சம் சம்பந்தப்பட்டதாகும்.

வாகனப் போக்குவரத்துக் குற்றம் இழைக்கின்ற சாரதிகள் சட்டத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கு இலஞ்சம் வழியேற்படுத்திக் கொடுக்கின்றது. இலஞ்சத்தை ஒழிப்பதில் பொலிஸ் திணைக்களம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில், வாகனப் போக்குவரத்துக் குற்றங்களும் பெருமளவு குறையுமென்பதில் ஐயமில்லை.

வாகன சாரதிகள் குற்றமிழைக்கின்ற போதிலும் விபத்துகளால் உயிரிழப்போரும், காயங்களுக்கு உள்ளாவோரும் குற்றமிழைக்காத சாதாரண மக்களே ஆவர்.

மக்களின் உயிர்களைப் பற்றிய சிந்தனையை இவ்வாறான சாரதிகளிடம் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. எனவே வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் போக்குவரத்துப் பொலிஸார் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இங்கு அவசியமாகின்றது.

விபத்து மரணங்களில் அடுத்தபடியாக நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்ற

உயிரிழப்புகளைக் குறிப்பிடலாம். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள மண்டைதீவு கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற படகு விபத்தில் ஆறு மாணவர்கள் பரிதாபமாகப் பலியான சம்பவம் இதற்கான ஒரு உதாரணமாகும்.

கடல், ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் மூழ்கி மக்கள் உயிரிழக்கும்

சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றன. இம்மரணங்களின் சராசரி எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றது. விபத்து மீதான கவனயீனமே இதற்கான காரணமாகும்.

கடலில் மூழ்கி மரணமடைவோரில் கூடுதலானோர் இளவயதினராகவே உள்ளனர். இவர்களெல்லாம் பெற்றோருக்குத் தெரியாமலேயே கடலுக்கு நீராடச் செல்கின்றனர். இளவயதினரின் நடத்தைகள் குறித்து பெற்றோர் அவதானம் செலுத்துவது குறைவாக உள்ளதையே இம்மரணங்கள் புலப்படுத்துகின்றன. எவ்வாறிருப்பினும் இவ்வாறான அநியாய உயிரிழப்புகளைத் தவிர்ப்பது குறித்து எமது நாட்டில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியமாகின்றது.


Add new comment

Or log in with...