20க்கு எதிராக உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் | தினகரன்

20க்கு எதிராக உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல்

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாமல் 20ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் இந்த மனுவை நேற்று தாக்கல் செய்தது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் மூன்று காரணங்களை முன்வைத்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தாது ஒத்திவைப்பற்கான அச்சுறுத்தல் காணப்படுகிறது. இறுதியாக பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் மாகாண சபைகளைக் கலைத்து ஒரே நாளில் தேர்தல் நடத்துவதாக அதில் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனடிப்படையில் ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே முடிவடைகிறது. எனவே அதுவரை சகல மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்பதற்கான அச்சுறுத்தல் காணப்படுகிறது என்பது முதலாவது காரணமாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லது உரிமை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது. எனினும், 20ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுவுக்கு காணப்படும் அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு உள்வாங்குவதற்கு அல்லது இழுத்தெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் இந்த மனுவில் இரண்டாவது காரணமாக குறிப்பிட்டிருப்பதாக ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஐந்து வருட பதவிக்காலத்துக்கே அல்லது ஆட்சி நடத்துவதற்கே மக்கள் மாகாண சபைகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்வுசெய்கின்றனர். இவ்வாறு தேர்வுசெய்யும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை பாராளுமன்றத்துக்கு இழுத்துக்கொள்வது குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று காரணங்களை உள்ளடக்கிய மனுவை ஆராய்ந்து 20ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை பவ்ரல் அமைப்பு கோரியுள்ளது.

மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...