Thursday, March 28, 2024
Home » பொருளாதார நன்மைகளுக்காக ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

பொருளாதார நன்மைகளுக்காக ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

by gayan
October 6, 2023 6:00 am 0 comment

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பீஜிங்குக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதிகள், உபஜனாதிபதிகள், பிரதமர்கள் உட்பட உயர்மட்ட தலைவர்கள் என 140 நாடுகளின் பிரதிநிதிகள் 30 சர்வதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் 4000 பேர் பங்குபற்றியுள்ள இம்மாநாட்டில் ஜனாதிபதி இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இச்சர்வதேச மாநாட்டின் நிமித்தம் பீஜிங்குக்கு நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பாகிஸ்தான், இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளது தலைவர்களையும் சந்தித்துள்ளதோடு இருதரப்பு நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தை அடிப்படையாகக் கொண்டு, பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் முதலீடு, வர்த்தகம் மற்றும் சுற்றுலா தொடர்பான அமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இவ்வமர்வில் இலங்கையில் முதலீடு செய்துள்ள மற்றும் முதலீடு செய்யவிருக்கும் சீன முதலீட்டாளர்களும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளும், இலங்கையின் முன்னணி வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, போட்டி நிறைந்த பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கட்டம் கட்டமாக முன்னேறி வரும் இலங்கையை எதிர்கால வர்த்தக வாய்ப்புகளுக்கான தளமாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை சீன முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் சாதகமாகப் நோக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையானது வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளுக்கும் சுற்றுலாத் துறைக்கும் மிகவும் சாதகமான சூழலைக் கொண்டுள்ள நாடாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தில் முக்கிய இடத்தில் அமையப்பெற்றுள்ள இந்நாடு நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள போதிலும், சர்வதேச கப்பற் போக்குவரத்து பாதைக்கு மிகவும் அருகாமையில் அமைந்திருக்கிறது. அதிலும் இந்நாட்டின் புவிசார் அமைவிடத்தை உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் போது ஆசிய பிராந்தியத்தில் மேற்கு சந்தையை வெற்றி கொள்ள முடியும். அதற்கான விஷேட வாய்ப்புக் காணப்படுகிறது.

முதலீடுகளை மேற்கொண்டு இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் போது மேற்கு சந்தையை நிச்சயம் வெற்றி கொள்ளலாம். அதன் ஊடாக இலங்கையும் பொருளாதார ரீதியில் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும். குறிப்பாக பொருளாதார ரீதியில் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் இம்முதலீடுகள் பக்கத்துணையாக அமையும்.

கடந்த வருடத்தின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இந்நாடு பலவிதமான அசௌகரியங்களையும் பாதிப்புக்களையும் தாக்கங்களையும் எதிர்கொண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியின் பின்புலத்தில் வீழ்ச்சியடைந்திருந்த இந்நாடு கட்டம் கட்டமாக மீட்சி பெற்று தற்போது மறுமலர்ச்சி பாதையில் பிரவேசித்திருக்கிறது. இதன் ஊடாக இந்நாட்டின் பொருளாதாரம் சாதமான முறையில் முன்னேற்றப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறான சூழலில்தான் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் முதலீட்டார்கள், வர்த்தகர்களுக்கான அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமர்வில் பங்குபற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய போது விடுத்துள்ள அழைப்பு நாட்டுக்கு பொருளாதார ரீதியில் நிச்சயம் நன்மைகளைக் கொண்டு வரவே செய்யும். அது நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கும் பக்கத்துணையாக அமையும் என்பதுதான் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

துறைமுகநகர் உட்பட பல துறைகளில் சீன முதலீட்டாளர்கள் ஏற்கனவே இந்நாட்டில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஊடாக இலங்கை தொழில்வாய்ப்புக்களையும் அந்நியச் செலாவணியையும் பெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த அழைப்பு இலங்கையை நோக்கி முதலீடுகள் மேலும் வந்துசேர வழிவகுக்கும்.

இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாட்டையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு முதலீடுகள் இன்றியமையாதவையாக விளங்குகின்றன.

ஆகவே ஜனாதிபதி விடுத்துள்ள இந்த அழைப்பு இலங்கையின் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT