2/3 பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம்: ஐ.தே.க சூளுரை | தினகரன்

2/3 பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம்: ஐ.தே.க சூளுரை

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த ஆதரவு அணியினர் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் தோற்கடிப்போமென ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சூளுரைத்தனர்.

மஹிந்த ஆதரவு அணியினர் காரணமில்லாமல் அடுத்தடுத்து கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களிடையே நகைச்சுவைக்கு உள்ளாகியிருக்கும் அதேநேரம் 'நம்பிக்கையில்லா தீர்மானத்தின்' பெறுமதியை வலுவிலக்கச் செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம், சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்டது அல்ல. உயர்கல்வியை தனியார்மயப்படுத்தப்படுவதாக அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அவரது அமைச்சு சம்பந்தப்பட்ட விடயமல்ல என்றும் ஐ.தே.க எம்.பிக்கள் வலியுறுத்தினர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் நேற்று பிற்பகல் தகவல் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர். இதன்போதே அவர்கள் இக்கருத்தை கூட்டாக முன்வைத்தனர்.

"அரசாங்கத்தில் வேலை செய்யும் அமைச்சர்களுக்கெதிராக பாராளுமன்றத்திலுள்ள திருடர்கள் குழு தொடர்ச்சியாக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றனர். இது நியாயமற்ற செயல். மக்கள் இவ்வாறானவர்களை நிராகரிக்க வேண்டும். எனக்கு நேர்ந்த நிலை ஏனையவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே நான் முன்மாதிரியாக செயற்பட தீர்மானித்துள்ளேன்" என இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ரவி கருணாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன எந்தவொரு குற்றச் செயலையும் அச்சமின்றி தட்டிக் கேட்க கூடியவர். யார் அவரை எதிர்த்தாலும் எமக்கும் இந்நாட்டு மக்களுக்கும் அவர் மீது பூரண நம்பிக்கையுண்டு என்றும் ரவி கருணாநாயக்க எம்.பி தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும்பங்களிப்பு செய்த அமைச்சர் ராஜிதவுடன் தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். நாட்டையும் நல்லாட்சியையும் கெடுக்க தீயசக்திகள் பெரும் வியூகம் வகுத்து வருகின்றன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க ஆளும் கட்சி பெரும் முயற்சி செய்து வரும் நிலையில் அதனை தோற்கடிக்க மஹிந்த ஆதரவு அணியினர் களத்தில் இறங்கியுள்ளனர். இதனால் நாட்டிலுள்ள அனைத்து இனத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த பெண்கள் சமூகமும் மஹிந்த ஆதரவு அணியினரை தொடர்ந்தும் நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலைக் குழப்புவதே ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பிரதான குறிக்கோளாகும். இதன் மூலம் நாளாந்தம் பொது மக்களின் இலட்சக்கணக்கான பணத்தை அவர்கள் வீணடிப்பதாக முஜிபூர் ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.

மஹிந்த ஆதரவு அணியினர் பாராளுமன்றத்துக்கு வருகைதந்த நாளிலிருந்து ஆளும் தரப்பிலுள்ள அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருகின்றனர். அது தற்போது நகைச்சுவைக்குரிய விடயமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.

"எதிர்க்கட்சியினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்களுக்குள் பாரிய கருத்து முரண்பாடு உள்ளது. விமல் வீரவன்ச எம்.பி, ‘மண்ணெண்ணெய் தெளிக்கப்பட்ட சாரைப்பாம்பு’போல் தினமும் பாராளுமன்றத்தில் வந்து விஜயதாச ராஜபக்ஷ எம்.பிக்காக கத்துகின்றார். உண்மையில் விஜயதாச எம்.பிக்கு வாக்களித்த மக்களே சிறிகொத்த முன்பாக கூச்சலிட வேண்டும். அவர்களுக்கில்லாத அக்கறை விமல் வீரவன்ச எம்.பிக்கு வந்துள்ளமை அவர்களுக்கிடையிலிருந்த இரகசிய உறவை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இவர்கள் ஒன்றல்ல பத்து நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தாலும் நாம் அதனை தோற்கடிப்போமென்றும்", முஜிபூர் ரஹ்மான் எம்.பி கூறினார்.

இதேவேளை தமது குற்றச் செயல்கள் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்திலேயே மஹிந்த ஆதரவு அணியினர் தரப்பில் நாட்டுக்காக உழைக்கும் அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர தீர்மானித்திருப்பதாக ஐ.தே.க எம்.பி ஜீ.சி அலவத்த தெரிவித்தார்.

பந்துலால் பண்டாரிகொட எம்.பி கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் ஸ்திரமற்று இருப்பதாக உலகுக்கு காட்டவே எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் செய்வதுடன் அமைச்சர்களுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதாகவும் கூறினார். மஹிந்த ஆதரவு அணியின் தலைவர், மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு வாக்கெடுப்புக்கும் பாராளுமன்றம் வருவதில்லையென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைதியைக் களைந்து கூட்டாக எழுவதற்கு யானைகளுக்கு சந்தர்ப்பம் இப்போதே வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார். இதுவரை யானைகள் அமைதியாக இருந்து அனைத்தையும் அவதானித்திருந்ததாகவும் எதிர்காலங்களில் யானைகள் செயலில் இறங்குமென்றும் அவர் கூறினார். நாம் அரசாங்கத்துக்கு வேலை செய்வதற்காகவே பாராளுமன்றத்துக்கு வந்தோமே தவிர நகைச்சுவையாளர்களுக்கு பதில் கூறுவதற்காகவல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் எதிர்க்கட்சியினர் விஜயதாச எம்.பியை கனவில் கண்டு அலறுவதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் கும்பலில் கொலை, கொள்ளை மற்றும் திருடர் கூட்டமே இருப்பதாகவும் நாட்டு மக்களுக்கு உண்மையைப் பகுத்தறியக்கூடிய தன்மையுண்டு என்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 


There is 1 Comment

THE MOVE TAKEN BY THE JO TO BRING A NO-CONFIDENCE MOTION AGAINST MINISTER RAJITHA SENERATNE NEEDS THE FULLEST SUPPORT OF ALL PARLIAMENTARIANS. WHEN THE YAHAPALANA GOVERNMENT INDEED HAS TO TAKE ACTION AGAINST CORRUPT MINISTERS AS TOLD DURING THEIR PROPAGANDA MEETINGS IN 2015 AND PROMISES MADE TO THE GENERAL PUBLIC THAT THOSE ROGUES WILL BE PUNISHED, IT SEEMS THAT THE YAHAPALANA GOVERNMENT HAS ALLOWED THEM TO GO SCOTH-FREE. RAJITHA SENERATNE IS THE MOST CORRUPT POLITICIAN OF THIS CENTURY’S POLITICAL HISTORY OF PARLIAMENT IN SRI LANKA. WHAT JVP – ANURA KUMARA DISSANAYAKE TOLD IN PARLIAMENT YESTERDAY IS COMPLETELY TRUE OF THIS SCROUNDEL. RAJITHA SHOULD ALSO BE PROBED REGARDING THE FOREIGN FUNDS HE AND HIS SON IS ALLEGED TO HAVE RECEIVED FROM FOREIGN SOURCES THAT WERE INVOLVED IN THE RUN-UP TO THE ELECTIONS IN 2015 TO TOPPLE MAHINDA RAJAPAKSE. RAJITHA’S SECRET INVOLVEMENT WITH NORWAY SHOULD ALSO BE INVESTIGATED. THE SRI LANKA PEOPLE SHOULD NOW JOIN THE J.O., TO CHASE THIS RASCAL OUT OF POLITICS. FROM THE DAY RAJITHA ENTERED POLITICS, RAJITHA HAS BEEN A CURSE TO THE PO:LITICAL LEADERS OF THE NATION AND POLITICS OF SRI LANKA. THE J.O., SHOULD ALSO BRING A NO-CONFIDENT MOTION AGAINST THE MINORITY COMMUNITY POLITICAL PARTY LEADER FROM THE NORTH WHO IS ALLEGED TO HAVE SWINDLED MILLIONS OF RUPEES IN TRADE DEALS, RICE IMPORTS AND PAYMENTS FROM THE ROAD DEVELOPMENT AUTHORITY. IF THE COMPLAINTS AGAINST THIS MINISTER IS PROBED, MANY EVIDENCES WILL WE REVEALED TO THE CID AND THE PRESIDENTS COMMISSION TO PROCECUTE THIS MINISTER. Noor Nizam - Political Communication Researcher, Former SLFP District Organizer Trincomalee District and Stalwart and Convener - "The Muslim Voice".

Pages

Add new comment

Or log in with...