Friday, March 29, 2024
Home » அறுபது வருட காலமாக இலக்கியப்பணி புரிந்த இலங்கைக் கலைஞர் நவாலியூர் நாயகி

அறுபது வருட காலமாக இலக்கியப்பணி புரிந்த இலங்கைக் கலைஞர் நவாலியூர் நாயகி

எதிர்வரும் ஞாயிறன்று முதலாவது நினைவுதினம்

by gayan
October 19, 2023 6:08 am 0 comment

‘நவாலியூர் நாயகி’ என்ற புனைபெயருடன் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கவிதைகளையும் ஏனைய ஆக்கங்களையும் எழுதி வந்த ஈழத்தின் புகழ்பூத்த கவிஞரும், பாடகியும், ஓய்வுநிலை ஆசிரியரும், அதிபருமாகிய திருமதி மேரி நாயகி மரியதாஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் 22.10.2022 அன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

நவாலியூர் நாயகி 22.08.1940 அன்று நவாலியில் பாரம்பரிய கலைக்குடும்பத்தில் பிறந்தார். இனிமையான குரல் வளம் கொண்ட இவர், சிறுவயதில் இருந்தே பாடல்களைப் பாட வல்லவராகவும், எழுத்தாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். 500 இற்கு மேற்பட்ட கவிதை, கட்டுரைகளை அவர் எழுதி உள்ளார்.

உலகெங்கிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் பயன்படுத்தவல்ல பல பாடல்களையும் அவர் இயற்றியுள்ளார். குறிப்பாக 1995 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் பின்னர் அவர் எழுதிய ‘கண்ணீர் சிந்துகிறோம் கொஞ்சம் கருணை காட்டுமையா’ என்ற மன்னிப்பு பஜனை உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலி வேளைகளில் பாடப்படுகின்றது.

தனது கற்பித்தல் திறனால் சிறந்த ஆசிரியராகப் பாடசாலைகளில் கடமை ஆற்றி உள்ளார். நாடகம், கவியரங்கம், பட்டிமன்றம், குழுப்பாடல், தனிநடிப்பு என்று பலவற்றை எழுதி மாணவர்களைப் பயிற்றுவித்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். பல போட்டிகளில் மாணவர்கள் தேசிய நிலையில் முதலிடம் பெற அவரின் ஆக்கங்கள் உதவியுள்ளன.

நவாலி சென் பீற்றர் பாடசாலை, மானிப்பாய் சென். ஆன்ஸ் பாடசாலை ஆகியவற்றின் பாடசாலை கீதங்களும் இவராலேயே எழுதப்பட்டன. லண்டனில் உள்ள அகில உலக தமிழ் விளையாட்டுப் பாடசாலையின் கீதம் இவராலேயே எழுதப்பட்டது. இலங்கை வானொலியிலும் பல பாடல்களையும் நாடகங்களையும் எழுதி உள்ளார்.

வெறுமனே எழுதுவது மட்டுமமல்ல சமகால வாழ்நிலைகளில் ஏழை எளியவர்களின் துன்பங்கள், துயரங்களில் தனது உணர்வலைகளை வெளிப்படுத்தும் படைப்பாளி ஆகவும் இருந்துள்ளார். அவரது கவிதைகளில் பெரும்பாலானவற்றில் தீமைகளைச் சாடுகின்ற அறச்சீற்றம் ஓங்கி ஒலிப்பதைக் காணலாம்.

புரட்சிக்கவிஞர் பாரதி கூறிய ‘நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்’ கொண்ட ஈழத்தின் பெண் கவிஞராய், படைப்பாளியாய், பாடகியாய், பல்வேறு பணிகளை ஆற்றினாலும் தன்னடக்கத்துடன் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று ஆர்ப்பாட்டமில்லாமல் வாழ்ந்து மடிந்த அன்னை தனது படைப்புக்கள் வழியாக இன்றும் எம்முடன் வாழ்கின்றாள்.

எட்வேட் மாஸ்டர்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT