பிக் போஸ் 62 ஆம் நாள்: கொலையிலும் பார்க்க விசாரணை கொடூரமானது! | தினகரன்


பிக் போஸ் 62 ஆம் நாள்: கொலையிலும் பார்க்க விசாரணை கொடூரமானது!

Part 01

Part 02

Part 03

Part 04

Part 05

பஞ்சாயத்து நாளான இன்று ‘நாட்டாமை’ கமலுக்கு என்னதான் வேலையிருக்கப் போகிறது, அவர் வந்து என்னதான் செய்யப் போகிறாரோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு பெரும்பாலும் கேலியும் விளையாட்டுமாகத்தான் இருந்தது. பஞ்சாயத்து பேசுமளவிற்கு பிராது எதுவும் இல்லை. 

இதையேதான் கமலும் சரியாகச் சொன்னார். “வீடு சந்தோஷமா இருக்கு. அப்படி இருந்தா நமக்கு சந்தோஷமா இருக்காதில்லையா? வெள்ளிக்கிழமை ஏதாவது நடக்குதான்னு பார்ப்போம்’ ம்ஹூம் எதுவும் நடக்கவில்லை. 

கமல் செய்ய என்னதான் இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் எப்படியோ சமாளித்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் கமல் தொடர்பான முந்தைய எபிஸோடுகளில் இருந்த பரபரப்பும் ஆக்ஷனும் இன்றைய நாளில் இல்லை. 

பழைய பஞ்சாயத்துக்களை தூசு தட்டி, போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை சாய்வு நாற்காலியில் செளகரியமாக அமர்ந்து வேடிக்கை பார்க்க மட்டுமே செய்தார் கமல். அவ்வப்போது .. “ஆங்… அப்படியே லெப்ட்ல குத்து. ரைட்ல அடி’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை வேறு எதுவும் சுவாரசியமாக இல்லை. 

அதற்கு முன்னால் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி கமல் பேசினார்.

‘அந்தரங்கம் என்பது தனிநபர் உரிமை’ என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பற்றிய தனது தனிப்பட்ட வழிமொழிதலுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கும் ஏதேனும் முரண் இருக்கிறதா’ என்பது தொடர்பான விளக்கத்தை அவர் அளித்தார். 

‘ஒரு சினிமா படப்பிடிப்பு என்பது நடிகர் உள்ளிட்ட அனைவரின் சம்மதத்தோடு நிகழ்வது. ஆனால் நான் வீட்டில் உட்கார்ந்து காது குடையறதை படமெடுத்து வெளியிட எவருக்கும் உரிமை கிடையாது. அதைப் போலவே இங்கிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் நடவடிக்கைகளை படமெடுப்பதற்கான சம்மதத்தை எழுத்துபூர்வமாக தந்திருக்கின்றனர். எனவே இது அந்தரங்கத்தை மீறுவதாகாது. அந்தப் புரிதலோடுதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்தளிக்க சம்மதம் தெரிவித்தேன்’ என்பது கமல் அளித்த விளக்கத்தின் சாரம். 

சட்டபூர்வமாக கமல் அளித்த விளக்கம் சரியானது. ஆனால் தார்மீகமாக அது சரியா? படப்பிடிப்புக் காட்சிகளின் மூலம் உருவாகும் சினிமா என்பது ஒரு புனைவு என்பது அதில் இயங்குபவர்கள் உள்ளிட்டு பார்ப்பவர்கள் அனைவருக்குமே தெரியும். அதில் நிகழ்வது எல்லாமே நடிப்பு என்பது பார்வையாளர்களின் ஆழ்மனதிலும் இருக்கும். ஆனால் பாருங்கள், இதில் கூட வில்லன்களின் செயல்களை உண்மை என்று நினைத்துக் கொண்டு பயங்கரமாக திட்டும் வெள்ளந்தி மனிதர்கள் இன்னமும் கூட இருக்கிறார்கள். நிலைமை அப்படி இருக்கிறது.

ஆனால் சினிமாவிற்கும் பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோவிற்கும் அடிப்படையிலேயே வித்தியாசமிருக்கிறது. இதில் நடிப்பவர்கள் அனைவரும் தங்களின் உண்மையான பிம்பங்களோடும் அடையாளங்களோடும் இயங்குகிறார்கள். அவர்களுக்கு கற்பனை பாத்திரங்கள் ஏதும் தரப்படுவதில்லை. இதில் நிகழும் சாதக பாதகங்கள் நிகழ்ச்சியின் வெளியே அவர்களின் நிஜமான வாழ்க்கையையும் பாதிக்கக்கூடிய சாத்தியமுண்டு. 

உதாரணத்திற்கு ஆரவ்வின் முத்த சமாச்சாரம் பற்றி பார்ப்போம்.  இந்த விவரங்களின் பின்னணி நமக்கு முழுமையாகத் தெரியாத நிலையில் மேலோட்டமாக பார்த்து விட்டு அவரை லவ்வர் பாய், மோசக்காரன் என்று ஒருவர் நினைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.  சாட்சியத்திற்கு சமூகவலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களைக் கவனியுங்கள். 

இதைப் போலவே ஜூலி துரோகி, காயத்ரி வில்லி, சிநேகன் பெண்களை கட்டிப்பிடிக்கும் வாய்ப்புகளை வீணாக்காத தடவியல் நிபுணர், கணேஷ் சாப்பாட்டு ராமன் என்பது போல அவர்களின் மீதான பிம்பங்கள் அழுத்தமாக விழ வாய்ப்புண்டு. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சமூக வெளியில் இது சார்ந்த பிம்ப சேதங்களை அவர்கள் பல ஆண்டுகள் சங்கடத்துடன் எதிர்கொள்ள நேரிடலாம். 

போட்டியாளர்கள் புகைப்பது உள்ளிட்ட பல காட்சிளை அவர்களின் பிம்பம் அதிகம் சேதம் ஆகக்கூடாது என்கிற சுயப்பொறுப்போடு பிக்பாஸ் டீம்  தணிக்கை செய்திருக்கலாம். ஆனால் அவற்றை மீறியும் இந்த விபத்து நிகழ்வதுதான் ரியாலிட்டி ஷோக்களின் தன்மை. ஆக.. கமல் அளித்த விளக்கம் சரிதானா என்பது விவாதத்திற்கு உரியது. 

**

‘வெள்ளிக்கிழமையாவது’ ஏதாவது சண்டை நிகழுமா என்று பார்ப்போம் என்று அதற்கான காட்சிகளை காட்டத் துவங்கினார் கமல்.

‘இருமுகன்’ திரைப்படத்திலிருந்து ‘ஹெலனா’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப் பாடல் ஒலித்தது. நடன விஷயத்தில் பழைய விறுவிறுப்பு எதையும் காணோம். பிந்து கூட மந்தமாகி விட்டார்.

சுஜா தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை காஜல் கிண்டலடித்தார். இதை சிநேகன் விளையாட்டாக ஆட்சேபித்ததற்கு, ‘இங்க எல்லோரையும் பிடிச்சிருக்கு. அவளை மட்டும்தான் பிடிக்காது’ என்று வெளிப்படையாகச் சொன்னார். காஜல் வந்ததில் இருந்தே சுஜாவை பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபின் அவர்களுக்குள் கசப்பு ஏற்படுமாறு எந்தவொரு சம்பவமும் நிகழ்ந்தததாக தெரியவில்லை. 

ஒன்று, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர்களுக்குள் தொழில் சார்ந்து ஏதேனும் கசப்புகள் இருந்திருக்க வேண்டும். கஞ்சா கருப்பிற்கும் பரணிக்கும் இருந்த சச்சரவைப் போல. அல்லது ஏதோவொரு முன்தீர்மான வெறுப்பின் காரணமாகத்தான் காஜல் இப்படி நடந்து கொள்கிறார் போல. அப்படித்தான் என்றால் அது முறையல்ல. 

போட்டியாளர்கள் இப்படியே ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தால் நம்முடைய பிழைப்பு என்னாவது என்று தீவிரமாக யோசித்த பிக்பாஸ் அதற்காக ஒரு விஷயத்தைச் செய்தார்.

புகார் பெட்டி ஒன்றை ஏற்பாடு செய்து, போட்டியாளர்கள் தனிமையில் மற்றவர்களின் மீதுள்ள குறைகளை, ஆதங்கங்களை வெளிப்படையாக கடிதம் வழியாக எழுதலாம். அவற்றில் புகார் அளிப்பவரின் பெயர் இல்லாமல் அநாமதேய புகாராக இருக்கட்டும் என்றார். என்றாலும் யார், யார் எதை எழுதியிருப்பார் என்று பார்வையாளர்களாகிய நம்மாலேயே யூகிக்க முடிகிற போது அவர்களால் முடியாதா?

எனவே நிச்சயம் அவர்களுக்குள் சண்டை நிகழும் என்கிற பிக்பாஸின் கணக்கு வீண் போகாது என்றே தோன்றுகிறது. 

**

‘யார் கொலையாளி’ task தொடர்கிறது. இதுவரையான task-களில் இதுதான் மிக சுவாரசியமாகவும் ஜாலியாகவும் இருக்கிறது. ஆரவ்வும் ஹரிஷூம் திறமையாக தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். காமெடிக்கு பல்ராம்நாயுடுவான வையாபுரி கலக்குகிறார். 

வையாபுரி தன் விசாரணையை கணேஷிடம் தொடர்ந்தார். கணேஷ் அப்படியொன்றும் மொக்கையான ஆசாமி இல்லை. புத்திக்கூர்மை உள்ளவர்தான் போலிருக்கிறது. “கொலை நடந்த பிறகு அது பற்றிய கவலையே இல்லாமல் ஆரவ்வும் ஹரிஷூம் தூங்கினார்கள், எப்போதும் ஒன்றாகவே ரகசியம் பேசிக் கொண்டு சுற்றுகிறார்கள். கேட்காமலேயே எனக்கு முட்டை செய்து வம்பாக கொடுத்தார்கள்’ என்றெல்லாம் தன் சரியாக யூகங்களை முன்வைத்து கொலையாளிகளை ஏறத்தாழ நெருங்கி விட்டார்.

ரைசாவிற்கு சுஜாவின் மீது சந்தேகம். பிந்துவின் மீதும். ஆனால் கணேஷின் யூகங்களைக் கேட்டவுடன் மனம் மாறி விட்டார். எனவே ஆரவ் –ஹரீஷ் கூட்டணியை அழைத்து ‘ஏன் எப்பவும் ஒண்ணாவே சுத்தறீங்க?’ என்று நேரடியாக கேட்டார். ‘என் ஸ்வப்னா.. புத்திசாலி.. அவளை யாரும் ஏமாத்த முடியாது’ என்று தூள் திரைப்பட ‘விவேக்’ நகைச்சுவையைக் காட்சியைக் கேட்ட மாதிரி, ரைசாவின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. 

இருவரும் ஆடு திருடிய கள்ளர்கள் மாதிரி விழித்தார்கள். ‘அப்பவே நெனச்சேன். ரெண்டு பேரும் ஒண்ணா இருந்தா கண்டுபிடிச்சுடுவாங்கன்னு’ என்று ஹரீஷ் ரகசியமாக பதறினார். “ஏன் கொன்னுட்டீங்க ஹரீஷ்’ என்று கவலையாக ரைசா கேட்க ‘பிடிக்கலை’ என்று தெனாவெட்டாக பதில் சொன்னார் ஹரீஷ். ஜாலியான பதில்.

**

அடுத்து காஜலைக் கொல்ல வேண்டும் என்று நம்பியார் பிக்பாஸ் ரகசிய உத்தரவு தர, ‘ஓகே பாஸ். கனகச்சிதமா காரியத்தை முடிச்சுடறேன்’ என்று அடியாள் அசோகன் மாதிரியே கண்ணைச் சிமிட்டிக் கொண்டு தேர்ந்த விசுவாசியாக பதில் அளித்தார் ஆரவ். 

காஜல் தானாக முன்வந்து ஆரவ்வை அல்லது அவரது கூட்டாளியை கட்டிப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் கொலை நிகழ்ந்ததாக கருதப்படும். இது கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பானது என்பதால் ஹரீஷிற்கு வாய்ப்பளிக்காமல் தாமே முன்வந்து இந்த வழக்கை எடுத்துக் கொள்வதாக தீர்மானித்தார் ஆரவ். என்னவொரு தியாகவுள்ளம்!  ‘என் கிட்டதான் அவங்க நல்லா பேசுவாங்க’ என்று அவர் சுட்டிக் காட்டிய காரணமும் ஏற்கும்படிதான் இருந்தது. 

ஆனால், ‘காஜல் தானாக முன்வந்து ஆரவ்வை எப்படி கட்டிப்பிடிப்பார்? விவகாரமான task ஆக இருக்கிறதே, இது சாத்தியமா?’ என்றெல்லாம் நாம் குழம்பிக் கொண்டிருக்கும் போது மிக எளிதாக இந்தக் காரியத்தை முடித்து விட்டார் ஆரவ். ‘பெண்களை கவர்வது எப்படி?’ என்று மனிதர் ஒரு புத்தகமே எழுதுமளவிற்கு விற்பன்னர் போல.

‘இந்த வழக்கு தொடர்பாக எத்தனை விவரங்கள் தந்தேன். ஒரு hug உண்டா, handshake உண்டா?’ என்றெல்லாம் ஆரவ் சிணுங்க, ‘அதற்கென்னடா.. வாடா.. வாடா’ என்று பலியாடு காஜல் முன்வந்து கட்டிப்பிடிக்க வெற்றிகரமாக நிகழ்ந்தது கொலை. 

ஆனால் காஜல் தானொரு மொக்கையான போலீஸ் ஆஃபிசர் என்பதை மறுபடியும் நிரூபித்தார். வழக்கு விசாரணை தொடர்பான தகவல்களையெல்லாம் ஆரவ்விடம் சொல்லிக் கொண்டிருந்தார். தமிழக காவல்துறை உங்களை அன்புடன் வரவேற்கிறது காஜல். 

காரியம் வெற்றிகரமாக முடிந்த சந்தோஷத்தில் ‘எனக்கு வையாபுரி மேலதான் சந்தேகமா இருக்கு’ என்று தர்க்கத்தில் அடங்காத ஒரு விஷயத்தை டிப்ஸாக தந்து விட்டுச் சென்றார் ஆரவ்.

**

அடுத்த கொலை டார்கெட் ‘பிந்து’ அவர் போலீஸ் தொப்பியை அணிந்து கொண்டு ஆரவ்வை நோக்கி ‘hi buddy’ என்று சொல்ல வேண்டும். ‘இதை எப்படிச் செய்வது?’ என்று ஐடியா மன்னன் ஆரவ்வே குழம்பி விட்டார். ஆனால் பிறகு இதையும் எளிதாகவே சாதித்தார்.

பெயர்களை மாற்றிப் போட்டு விளையாடுவது போல விளையாடி, வையாபுரி போல பிந்துவை நடிக்கச் செய்து எளிதாக அந்த வாசகங்களை சொல்ல வைத்து விட்டார் ஆரவ்.

வாலி திரைப்படத்தில் அஜித், சிம்ரனை விதம்விதமான பொய்களைச் சொல்லி ஏமாற்றுவதெல்லாம் நடைமுறையில் சாத்தியம்தானா என்கிற மெல்லிய சந்தேகம் எனக்கிருந்தது. அவை மட்டுமல்ல, அதற்கு மேலான விஷயங்களும் சாத்தியமே என்பதை பிந்து நிரூபித்து விட்டார். அத்தனை எளிதாக ஏமாந்து விட்டார் பாவம்.

‘இந்த வீட்டில் மேலும் இரண்டு அசம்பாவிதங்கள் நடந்து விட்டன. காஜலும் பிந்துவும் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆவியாகி விட்டதால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற அறிவிப்பு வெளியானது. 

காஜல் உடனே கண்டுபிடித்து விட்டார். ‘அடப்பாவி.. ஆரவ்.. இதுக்குத்தான் hug செய்யச் சொன்னியா?’ ஆனால் பிந்து தாம் எப்போது கொலையானோம் என்று குழம்பிக் கொண்டேயிருந்தார்.

நடந்து முடிந்த கொலைகள் விஷயமாக வையாபுரியை விசாரிக்கச் சொன்னார் பிக்பாஸ். பல்ராம் நாயுடுவின் சேட்டைகள் தொடர்ந்தன. இந்த தீவிர விசாரணையில் அவர் அணிந்திருந்த பேண்ட்டே கழன்று போகத் துவங்கியது. அத்தனை தீவிரம். ‘மாமா.. டவுசர் கழண்டுச்சே…’ பாடலை உண்மையாக்கினார் வையாபுரி.

ஆரவ்தான் கொலையாளி என்று பெரும்பாலானோர் நம்பிய நிலையில் ஹரீஷ் அப்பாவியாகவே பார்க்கப்பட்டார். ‘வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ என்கிற பொன்மொழியை மக்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் போலிருக்கிறது. 

ஆரவ் கூடவே சுற்றுவதால்தான் ஹரீஷ் மீது மெல்லிய சந்தேகம் எழுந்ததே தவிர, கொலைக்கு உடந்தையாக இருப்பார் என்றெல்லாம் எவரும் நம்பவில்லை. போதாக்குறைக்கு வையாபுரியின் விசாரணையின் போது ‘குழந்தை’ மாதிரி முகத்தை வைத்துக் கொண்டார் ஹரீஷ். ‘உலக நடிப்புடா சாமி’

**

ஆரவ்விற்கு பிக்பாஸிடமிருந்து போன் வந்தது. அப்போதே பெரும்பாலானோர் யூகித்து ஆரவ்வை கொலைவெறியுடன் பார்த்தனர். ‘நாம நம்ம கடமையைத்தானே செய்தோம்.. பாஸ்… ஓக்கே.. ஓக்கே…’ என்று திருடன் வடிவேலு மாதிரியே கெத்தாக பேசி உரையாடலை முடித்தார் ஆரவ். தன்னுடைய கூட்டாளி ஹரீஷ் என்று அவர் அறிவித்ததும் ஆச்சரியத்தில் மற்றவர்கள் வாய் பிளந்தனர். 

தாம் இத்தனை கேவலமாக ஏமாற்றப்பட்டதை பிந்துவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திகைப்பும் ஆச்சரியமுமாக அமர்ந்திருந்தார். ‘போனை திருப்பிக் கொடுத்திடுங்க, ஆரவ்’ என்று பிக்பாஸ் கேட்டவுடன் ‘ஒரு போன் மட்டும் பண்ணிக்கட்டுமா’ என்று ஜாலியாக விளையாடினார் ஆரவ். கள்ளப்பயல்.

**

அநாமதேயக் கடிதங்களின் மீதான விசாரணைக்காக ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ‘எங்க வீட்லயே எத்தனையோ வக்கீல்கள் இருக்காங்க. எங்க அப்பாவும் வக்கீல்தான். நான்தான் தப்பிப்பிழைச்சு சினிமாவிற்கு வந்துட்டேன். டாக்டர் பட்டம் வாங்கிடறது கூட ஈசி. ஜட்ஜ் பட்டம் வாங்க முடியாது. பிக்பாஸ் கோர்ட்ல எனக்கு ஜட்ஜ் வேலை தந்திருக்காங்க’ என்று நீதிபதியாக அமர்ந்தார் கமல். பேச்சின் இடையே அரசியல் நையாண்டியின் வாசனையும் பலமாக அடித்தது. 

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் உண்மையாக விவாதியுங்கள். தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவும் முன்வைக்கவுமான பயிற்சி இது. Fighting spiritதான் இதில் முக்கியம். பூசி மெழுகாதீங்க’ என்று போதுமான முன்தயாரிப்பை தந்தார் கமல்.

open a Pandora's box என்பார்கள். அப்படித்தான் ஆயிற்று. பழைய குப்பைகள் கிளறப்பட்டன. நாற்றம் பலமாக அடிக்கத் துவங்கிற்று. ஒவ்வொருவரின் மீதான ஆதங்கம், குறை, கோபம் போன்றவை வெளிப்படையாக வந்து கொட்டத் துவங்கின. இப்படி வெளிப்படும் கோபம் வருங்கால சண்டைகளுக்கு உரமாகும் என்பது பிக்பாஸின் கணக்கு. 

காஜல் கூண்டில் நிற்க வழக்கறிஞராக விசாரணையைத் துவங்கினார் சிநேகன். ‘வீட்டு வேலைகளில் முழு ஈடுபாட்டோடு செய்யவில்லை என்று புகார் வந்திருக்கிறதே?’ என்று முதல் குற்றச்சாட்டைத் துவக்கினார் சிநேகன். ‘அப்படியெல்லாம் இல்லை. சரியாகவே செய்கிறேன்’ என்று மறுத்தார் காஜல்.

சிநேகன் இந்த சமயத்தில் ஒரு தவறு செய்தார். அவை அநாமதேயக் கடிதங்கள் என்கிற ரகசியம் காப்பாற்றப்படும் நிலையில்தான் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ‘இந்தக் கடிதத்தை எழுதியவர் சாட்சி சொல்ல வரலாம்’ என்று கூறி விட்டார். பின்பு கமல் திருத்தினாலும் சுஜாதான் அந்தக் கடிதத்தை எழுதியது என்பது அவர் சாட்சிக்கு வந்தவுடன் வெளிப்படையாகத் தெரிந்தது. 

ஏற்கெனவே இரண்டு பேருக்கும் ஆகாது. எனவே உரையாடல் சூடாக தொடர்ந்தது. காஜல் வீட்டுப் பணிகளை சரியாக செய்வதில்லை என்பதற்கான உதாரணம் ஒன்றை சுஜா சொல்ல, காஜல் கண்கலங்கத் துவங்கி விட்டார். 

நாம் கவனித்தவரை, பிக்பாஸ் விளையாட்டை காஜல் ஈடுபாட்டுடன் விளையாடுவதில்லை. சில Task-களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாக சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் கடந்த வார தொகுப்புகளை மற்றவர்களிடம் சொல்கிறார். சுஜா மீது பிரத்யேக வெறுப்புடன் இருக்கிறார் என்று பலவற்றைச் சொல்லலாம். 

பதிலுக்கு காஜல் விசாரணையில் இறங்கினார். ஓவியா மாதிரி நகலெடுப்பது, வலி என்று புலம்பி விட்டு விளையாட்டின் போது ஆக்ரோஷமாக ஈடுபடுவது, பேய் பார்த்து பயப்படுவது போல நடிப்பது போன்ற குற்றச்சாட்டுக்களை சுஜா உண்மையாகவே எதிர்கொண்டார். தகுந்த பதில்களும் தந்தார். 

**
கணேஷ் கூண்டில் நிற்க, வையாபுரி வக்கீலாக மாறி உணவுப் பிரச்னையை கையில் எடுத்தார். பாவம் கணேஷ். 

ஆனால் நடைமுறையில் கவனித்தால் வீட்டு ஆண்களிடம் பொதுவாக இந்தப் பிரச்னை உண்டு. மனைவி உள்ளிட்ட இதர நபர்களுக்கு போதுமான தொடுவுணவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எல்லாவற்றையும் தின்று தீர்த்து ‘ஏவ்’ என்று கைகழுவச் சென்று விடுவார்கள். எல்லோருக்கும் இருக்கிறதா என்று விசாரிப்பதும் உறுதிப்படுத்திக் கொள்வதும் நல்ல வழக்கம். 

கயிறுகள் கட்டப்பட்டு பந்து சேகரிக்கும் போட்டியில் கணேஷ் துரோகம் செய்து விட்டார் என்பது ஆரவ், சிநேகனின் குற்றச்சாட்டு. இதற்கு கணேஷ் சரியாக பதிலளித்தார். 

வையாபுரி விவாதத்தை தொகுத்தளிக்கும் போது கணேஷை அதிகம் விட்டுத்தராமல் பேச, ‘வையாபுரி தலைமையில் கணேஷிற்கு நடந்த பாராட்டு விழா இத்துடன் முடிந்தது’ என்று சூசகமாக கிண்டலடித்தார் கமல்.

‘கட்டிப்பிடி பாடலை ஏன் பாடீனீர்கள்? என்கிற சுஜாவின் கேள்வியை இம்முறையும் வையாபுரி நியாயமாக எதிர்கொள்ளவில்லை. எதையோ சத்தமாக பேசி சமாளித்தார். அநியாயம். 

‘உங்களுடைய உடல் பலவீனம் காரணமாக உடலுழைப்பு தொடர்பான taskகளை நீங்கள் செய்ய மறுப்பது சரி. மற்றவர்களையும் discourage செய்கிறீர்களே?’ என்கிற கேள்வியையும் வையாபுரி சரியாக எதிர்கொள்ளவில்லை. தான் பிக்பாஸ் போட்டிக்கு வந்த கதையை மட்டும் சற்று உருக்கமாகச் சொன்னார். பிந்துவிற்கு மட்டும் பிரத்யேகமாக அதிக உதவிகள் செய்கிறீர்களே? என்கிற கேள்விக்கும் எதையோ பதில் சொன்னார். 

மற்றபடி வக்கீல் வண்டு முருகனின் இதர சில்லறை பஞ்சாயத்துக்கள். வழவழா பதில்கள். 

**

ஆரவ்வின் மருத்துவ முத்தம் விவகாரத்தை மீண்டும் மீண்டும் கிளறிக் கொண்டிருப்பது நியாயமே அல்ல. அதிலும் இன்னொரு தரப்பான ஓவியா போட்டியை விட்டு விலகி விட்ட நிலையில் ஆரவ்வை மட்டும் இப்படி  நிற்க வைத்து கேள்விகள் கேட்பது முறையானதல்ல. 

எந்தவொரு இடத்திலும் ஓவியாவை தான் காதலிப்பதாக சொல்லவில்லை என்று அடித்துச் சொல்கிறார் ஆரவ். என்றாலும் ஏதோவொரு வகையில் ஓவியா பிரச்னைக்கு தான் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ஒப்புக் கொள்கிறார். இந்த நிலையில் இதை மேலும் கிளறுவது நியாயமாகப் படவில்லை. 

இந்த நோக்கில்தான் ஒரு தனிநபரின் அந்தரங்கம் மிகையாக கொச்சைப்படுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்ட காரணத்திற்காகவே அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் harass செய்ய முடியாது என்பதை பிக்பாஸ் டீம் புரிந்து கொள்ள வேண்டும். இது அவர்களின் வணிகத்தை பரபரப்பாக்கும் என்பதால்தான் உற்சாகமாகச் செய்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சியில் தொய்வு ஏற்படுவதால் வேறுவழியின்றி இந்தப் பழைய விஷயத்தை தூசு தட்டி எடுத்திருக்கிறார்களோ என்னமோ. 

சிறந்த வழக்கறிஞராக வையாபுரியும், கேள்விகளை சிறப்பாக எதிர்கொண்டவராக கணேஷூம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பார்வையாளர்களின் பங்களிப்பும் இதில் இருந்தது. பச்சை மற்றும் சிவப்பு அட்டையை ஒருமாதிரி தோராயமாக காட்டினார்கள். ஆனால் என்னளவில் இரண்டு விஷயங்களிலும் சிநேகன்தான் சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்ல முடியும்.

ஆண்டவர் இன்று ஏதோ குறும்படம் காட்டப் போகிறாராம். அது ஆரவ் தொடர்பானதாக இருக்குமா? வேறென்ன, அதற்காகவாவது இன்று இரவு 08.30 மணிக்கு குத்த வைத்து உட்கார்ந்து விட வேண்டியதுதான். அப்படியே ரைசாவின் வெளியேற்றமும் நிகழும் என யூகம். பார்ப்போம்.

- ரமேஷ் கண்ணா

 


Add new comment

Or log in with...