இரு போட்டிகளில் வெல்ல வேண்டும்; தீர்மானம் மிக்க தொடர் இன்று ஆரம்பம் | தினகரன்

இரு போட்டிகளில் வெல்ல வேண்டும்; தீர்மானம் மிக்க தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று (20) இடம்பெறவுள்ளது.
 
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான புதிய தலைவர் உபுல் தரங்க தலைவராக செயல்புரிவார்.
 
இரு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி 3 - 0 என தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, 5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால், 2019ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் நேரடியாக பங்குகொள்ளும் தகைமையை இலங்கை அணி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சர்வதேச தரப்படுத்தலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள், 2019 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெறும்.
 
88 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை அணி 8 ஆம் இடத்திலும், அதை விட 10 புள்ளிகள் (78) பின்னிலையிலுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 9 ஆம் இடத்திலும் உள்ளன.
 
இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் 90 புள்ளிகளை இலங்கை அணிக்கு பெறும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொள்ளும் தகைமையை இலங்கை அணி பெறும்.
 
எனினும், இந்தத் தொடரில் எந்தவொரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெறத் தவறுமாயின், 2 புள்ளிகளை இழந்து 86 புள்ளிகளை பெறும் நிலை ஏற்படும்.
 
தற்போது புள்ளிப்பட்டியலில் 78 புள்ளிகளுடன் 9 ஆம் இடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, குறித்த காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ள 6 ஒருநள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், 8 ஆம் இடத்துக்கு முன்னேறும்.
 
இதனூடாக மேற்கிந்திய தீவுகள் அணி, 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிக்கு நேரடியாக தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...