இணைந்தன இரு அணிகள்! | தினகரன்

இணைந்தன இரு அணிகள்!

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு நேற்று நடைபெற்றது. அணிகள் இணைப்பை பன்னீர்செல்வமும், எடப்பாடியும் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

கட்சியை பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழிநடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவைக் கூட்டி, கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

நேற்று திங்கட்கிழமை காலை முதலே அதிமுக தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லம், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருந்துவந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.

பின்னர் அணிகள் இணைப்பை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதன் பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில்பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதற்கு முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என எம்.பி. வைத்திலிங்கம் அறிவித்தார். விரைவில் பொதுக்குழுவை கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என அவர் கூறினார்.பெரும்பாலும் இம்முடிவு இன்று எட்டப்படுமெனத் தெரிகிறது.

பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.நேற்றைய இணைப்பையடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிரிகளை வீழ்த்துவோம் - என்றார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக - பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக - எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். வழிகாட்டுக் குழுவில் 11 பேர் இடம்பெறுகின்றனர்.

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு அணிகளும் இணைந்துள்ளன- என்று முதல்வர் பழனிசாமி நேற்றைய நிகழ்வில் குறிப்பிட்டார்.அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், நேற்று மாலை புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இணைப்பு நிகழ்ச்சியின் போது அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்துபன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை.

இரு அணிகளும் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முறைப்படி இணைந்ததும்அதன் அடையாளமாக பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் பன்னீர்செல்வம் உரையாற்றினார்.பிறகு எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

"தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் கடந்த 6 மாத காலத்தில் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டன. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிற விதமாக பன்னீர்செல்வம் மனமுவந்து இணைப்புக்கு ஒப்புக் கொண்டுள்ளார். கட்சியின் கனவை நனவாக்க வேண்டும் என்று இன்று ஒன்றாக இணையும் முடிவை எடுத்துள்ளோம்.

தமிழகத்தில் இரவு பகலாக உழைத்து பாடுபட்டு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கியது இந்த கட்சி. அவர்களுடைய கனவு நனவாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இணைப்பை நிறைவேற்றியுள்ளோம். இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. பிரிந்தால் இணைந்ததாக வரலாறு கிடையாது. ஆனால் மக்களோடு மக்களாக இருந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒன்று கூடிப் பேசி, பிரச்சினைகளைக் களைந்து மீண்டும் இந்த இயக்கம் வலுப்பெறும் என்பதை நிரூபித்திருப்பது அதிமுகதான்.

இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. இடையில் புகுந்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு எல்லாம் சம்மட்டி அடி அளித்துள்ளோம். ஒரு நூல் அளவு கூட இனி இக்கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடாது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் செயல்படுவார். இணை ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட உள்ளேன்" என்று பழனிசாமி அறிவித்தார்.

அதிமுகவின் இரு அணிகளும் இன்று ஒன்று சேர்ந்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது தொடர்பான அறிவிப்பும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவருமான வைத்திலிங்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டார்.

அதாவது, கட்சியின் பொதுச் செயலரை நீக்குவது என்றால், கட்சியின் விதிப்படி பொதுக் குழுக் கூட்டித்தான் நீக்க வேண்டும். எனவே, விரைவில் அதிமுகவின் அவசரப் பொதுக் குழு கூட்டப்பட்டு, அந்த பொதுக் குழுவில் சசிகலாவை பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

பன்னீர்செல்வம் தரப்பினர், அணிகள் இணைப்புக்கான நிபந்தனைகளில், அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை நீக்க வேண்டும் என்பதைத்தான் முக்கிய நிபந்தனைகயாக முன்வைத்தனர். இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில் விரைவில் பொதுச் செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது​ை

"நமக்கு வரக் கூடிய எதிர்ப்புகளை விஞ்சி இணைந்து நின்று வெற்றி பெறுவோம்" என்று அதிமுக இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்."தமிழக அரசியல் அரங்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பிடம் உண்டு. அவரால் உருவான நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். நடுவில் சில கருத்து வேறுபாடுகள் உணடானது. இருந்தாலும் அதனை எல்லாம் நாம் கடந்து வந்துள்ளோம்.

ஜெயலலிதாவின் ஆன்மாதான் அதற்கான ஒரு நல்ல வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளது. அதன் காரணமாகவே நாம் இப்பொழுது மீண்டும் சந்திக்கிறோம். நாற்பது ஆண்டு கால வரலாறும் பெருமையும் கொண்டது இந்த இயக்கம். அதற்குள் கருத்து வேறுபாடுகள் வந்தாலும், எம்.ஜி,.ஆரும், ஜெயலலிதாவும் காட்டிய நல்ல வழியில் பின் சென்று தற்பொழுது இணைந்துள்ளோம். நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் எண்ணமாகும். அதன்படி தற்பொழுது இணைந்துள்ளோம்.

இந்த இணைப்பினை சாத்தியப்படுத்தியதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி இரண்டாவது தடவையாக ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதாவால் சாத்தியமானது. அந்த ஆட்சியினை நாம் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்" என்று பன்னீர் கூறினார்.    

 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...