நீதி அமைச்சரின் அழுத்தம், தலையீடுகளால், ராஜபக்ஷ நிர்வாக மோசடி விசாரணைகள் தாமதம் | தினகரன்


நீதி அமைச்சரின் அழுத்தம், தலையீடுகளால், ராஜபக்ஷ நிர்வாக மோசடி விசாரணைகள் தாமதம்

ராஜினாமா செய்ய இருக்கும் நீதி அமைச்சருக்கு பதவி துறந்து செல்ல சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதியையும் பிரதமரையும் கோருவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதனூடாக எமது அரசாங்கத்தை பாதுகாத்து 2020 வரையல்ல 2025 வரைநிலைக்கச் செய்ய முடியுமென்று குறிப்பிட்ட அவர், மஹிந்த ஆட்சியின் மோசடிகள் இரண்டரை வருடங்களாக விசாரிக்கப்படாமல் இருப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தங்களே காரணமென்றும் தெரிவித்துள்ளார்.

தொம்பே கிரிந்திவெல பஸ்தரிப்பிட திறப்பு விழா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு தொடர்ந்து பேசிய அவர்:

திருடர்களுக்கு சாதகமாக செயற்பட்டு பதவியில் இருந்து அகற்றப்படவுள்ள நிலையில் தான் இனம்,மதம் குறித்து விஜயதாசவுக்கு நினைவு வந்திருக்கிறது. நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சிக்கு வந்தது. "அவன்கார்ட் "மோசடி,மிக்விமான மோசடி, இது பற்றி செய்தி வெளியிட்டதால் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவுக்கு நடந்த கதி, குறித்து மீண்டும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.மத நல்லிணக்கம்,ஜனநாயகம், சுதந்திரத்தை ஏற்படுத்துதல் மற்றும் கடத்தல்களை நிறுத்துதல்,என்பவையும் நல்லாட்சி அரசால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளாகும்.

தற்போதைய அரசிலுள்ள சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் வேதனை தருகின்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறும் கருத்துக்களை விட இவை கவலையளிக்கின்றன. சில அமைச்சர்கள் அமைச்சு வரப்பிரசாதங்களை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.கடந்த ஆட்சியில் வாய்திறக்காதவர்கள் தற்பொழுது வீரர்களாக மாறியிருக்கிறார்கள்.

தாஜூதீன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸ் குழுவுக்கு அரச மாளிகையிலிருந்து 46 தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன.இவற்றை விகாரமாகதேவி தான் வழங்கியிருக்கிறார்.

திருடர்களை ஏன் இன்னும் தண்டிக்கவில்லை என எல்லோரும் வினவுகின்றனர். நாட்டின் நீதி அமைச்சர் தொடர்பில் பிரச்சினை இருக்கிறது. இரண்டரை வருடங்கள் விசாரணைகள் முடங்கிக் கிடப்பதற்கு நீதி அமைச்சரின் அழுத்தமே காரணம். திருடர்களை பிடிக்குமாறு மக்கள் ஜனாதிபதியையும் பிரதமரையும் கேட்கிறார்கள். சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இதனை தான் கோருகிறார்கள். வழக்குகள் தாமதமாக நீதி அமைச்சர் தான் காரணம்.

விசேட நீதிமன்றம் அமைத்து வழக்குகளை விசாரணை செய்வதற்கு யாப்பு திருத்தம் தேவை என நீதி அமைச்சர் கூறுகிறார். வித்யா கொலை,பண்டாரநாயக்க கொலை,பாரத லக்‌ஷ்மன் கொலை என்பன தொடர்பில் தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டன.கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்தும் தினமும் விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக நான் அமைச்சரவையில் வினவினேன்.

3 விசேட நீதிமன்றங்களை உருவாக்கி விசாரணைகளை ஆரம்பித்தால், மொட்டு மலரவே மலராது. அது நிரந்தரமாக மொட்டாகவே இருந்து விடும். திருடர்களுக்கு சார்பான அமைச்சர்களுக்கு ஜ.தே.க செயற்குழுவில் ஆதரவாக எவரும் பேசவில்லை. (பா) 


Add new comment

Or log in with...