Thursday, March 28, 2024
Home » சகல தமிழ் அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க

சகல தமிழ் அரசியல் தலைவர்களும் ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க வேண்டும்

by mahesh
October 18, 2023 6:06 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படக் கூடிய தலைவரென்ற வகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், “எமது நாடு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தற்போது படிப்படியாக எழுச்சி பெற்று வருகின்றது. இது இன்னும் முழுமையாக முற்றுப்பெறாத நிலையிலிருக்கிறது. மக்களின் வாழ்க்கைச் சுமை முற்றுமுழுதாக குறைந்துவிட்டது என்று கூற முடியாது. எவ்வாறு இருந்தாலும் கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தற்பொழுது ஓரளவு குறைந்து கொண்டு வருகின்றன. தொடர்ந்தும் இவ்வாறு மக்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் நிவர்த்திக்கப்பட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்புகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் உட்பட அரசாங்கம் மேற்கொள்கின்றது. இது தொடர்ச்சியாக சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லோரும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். ஏனென்றால், நான் ஒரு வர்த்தக இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். ஏனென்றால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது இந்நாட்டில் வாழும் சாதாரண மக்களையே அதிகளவில் பாதிக்கின்றது.

எனவே மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய இன்னும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். அது மிக முக்கியமான விடயமாகும். அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம்.

அதேநேரம், சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட இன்னும் ஒரு சில வர்த்தகர்கள் அதன் விலைகளை குறைத்ததாகத் தெரியவில்லை. எப்போது அவற்றை அதிகரித்தார்களோ, அதே விலையிலேயே தற்போதும் அப்பொருட்களை விற்பனை செய்யும் ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. அதனால், இவ்வாறு விலை குறைக்கப்பட்ட பொருட்களை யார் அதிக விலையில் விற்கின்றார்களோ அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளுக்கு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT