Thursday, April 25, 2024
Home » நாடெங்கும் வேகமாகப் பரவிவருகின்ற கண்நோய்; நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு?

நாடெங்கும் வேகமாகப் பரவிவருகின்ற கண்நோய்; நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு?

மக்களுக்கு மருத்துவத்துறையினர் கூறும் ஆலோசனை

by mahesh
October 18, 2023 7:28 am 0 comment

இலங்கையின் பல இடங்களில் பரவிவருகின்ற கண்நோய் தற்போது யாழ் மாவட்டத்திலும் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுத்தல்களை வழங்கியுள்ளனர்.

யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

‘வேகமாக பரவிவரும் கண் நோயிலிருந்து (Viral Conjunctivitis) எம்மை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கண்வைத்திய நிபுணர் டொக்டர் மு. மலரவன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இலங்கை முழுவதும் தற்சமயம் பரவுகின்ற கண்நோய் கடந்த சில நாட்களாக யாழ் மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. அடினோ வைரசினால் (Abdeno Virus) பரவும் இந்நோய் சாதாரணமான கண்நோய் போன்றதே. இக்கண்நோயானது 70 வீதமானவர்களுக்கு ஒரு கண்ணில் வந்தால் மற்றைய கண்ணிலும் வரும்.

வீட்டில் உள்ள ஒருவருக்கு இக்கண் நோய் வரும் பட்சத்தில் 25 வீதம் வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கும் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. குறித்த கண்நோயானது நேரடி தொடுகை மூலம் பரவக்கூடியது என்பதனால் பாடசாலைகள், அலுவலகங்கள், மற்றும் பொதுச்சந்தைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் பரம்பல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நோயின் தாக்கத்திற்குள்ளான ஒருவருக்கு கண்கள் சிவந்து இளஞ்சிவப்பு (Pink Eyes) நிறத்தில் காணப்படும். ஒரு சிலருக்கு கண்களில் சொறிச்சல் ஏற்படும். கண்ணிலிருந்து தண்ணீர் வடியும். பெரும்பாலானவர்களுக்கு பூழை வெளியேறாது. வெளிச்சத்தைப் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும்.

இந்நோயானது தானாகவே மாறக்கூடியது. பெரும்பாலும் இதற்கு சிகிச்சை எதுவும் தேவையற்றது. இந்நோய் அரும்பு காலமானது (ஒருவரிலிருந்து தொற்று ஏற்படும் காலம்) 24 மணித்தியாலங்கள் தொடக்கம் 72 மணித்தியாலங்கள் ஆகும். இந்நோய் தொற்று ஏற்பட்ட 75 தொடக்கம் 80 வீதமானவர்களுக்கு 05 தொடக்கம் 07 நாட்களுக்குள் (சுமார் ஒருவார காலத்தில்) குணமடையும். எனினும் 25 வீதமானவர்களுக்கு 02 தொடக்கம் 04 வாரங்கள்( சுமார் ஒரு மாத காலம்) வரை நோய் நீடிக்கலாம்.

பொதுவாகவே வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறத் தேவையில்லை. எனினும் ஒரு வாரத்துக்கு மேலாக கண்நோய் தாக்கம் காணப்படுமாயின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ வைத்திய நிலையத்திற்கோ சென்றால் அங்குள்ள வைத்தியர்கள் உங்களைப் பரிசோதித்து மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மாத்திரம் கண்வைத்தியரிடம் சிபார்சு செய்வார்கள். இந்நோயினைக் கட்டுப்படுத்துவது மிகவும் இலகுவானது. பின்வரும் சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதன் மூலம் இந்நோய்த் தாக்கத்தினை இருவார காலப்பகுதிக்குள் கட்டுப்படுத்த முடியும்.

கண்நோய் ஏற்பட்ட ஒருவர் பாடசாலைக்கோ அலுவலகத்திற்கோ செல்வதனை முற்றாக தவிர்த்து சாதாரண தனிமைப்படுத்தலில் ஈடுபடுவது அவசியம். கண் சிவப்பு மறைந்து கண்ணில் இருந்து நீர்வடிதல் முற்றாக குணமடைந்த பின்னரே (3–5 நாட்கள் வரை) பாடசாலைக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். இந்நோய்த் தொற்றுக்குள்ளான ஒருவர் தனது கண்ணில் இருந்து வரும் நீரை கைகளினால் தொட்ட பின்னர் கைகளைக் கழுவாது வேறு ஒருவரையோ ஒரு பொருளையோ தொடுவதை முற்றாக தவிர்த்தல் அவசியம். அடிக்கடி கைகளைச் சவர்க்காரமிட்டு நன்றாக கழுவுதல் வேண்டும்.

அனைவரும் எச்சந்தர்ப்பத்திலும் கண்களைக் கசக்குவதையோ கண்களை தேவையற்று தொடுவதையோ முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். கண்நோய்ப் பாதிப்புக்குள்ளானவர் பாவித்த துவாய், தலையணை, உணவுத்தட்டுக்கள் தேநீர் குவளைகள் கட்டில், கதிரை என்பவற்றை பாவிப்பதனை முடிந்தவரை தவிர்த்தல் வேண்டும். தொற்றுநீக்கிய பின்னர் பயன்படுத்தலாம்.

கண்களுக்கு லென்ஸ் பாவிப்பவர்கள் நோய் குணமடையும் வரை அதனைப் பாவிப்பதைத் தவிர்த்தல் வேண்டும். நீச்சல் தடாகத்திற்கு செல்வதை தொற்றுக்குள்ளானவர்கள் முற்றிலும் தவிர்த்தல் அவசியம். அடிக்கடி கைகளையும் முகத்தையும் சவர்க்காரமிட்டு கழுவுவதுடன் குளித்து சுத்தமாக இருத்தல் வேண்டும்.

கண்நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு மருந்தையும் கண்களுக்கு இடுவதனை முற்றிலும் தவிர்த்தல் அவசியம். கண் வைத்தியர் ஒருவரின் ஆலாசனையின்றி மருந்துகளை பாவிப்பதனை தவிர்த்தல் வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயூரப்பிரியன் (யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT