தெலுங்கில் திரைப்படமாகிறது பிரபாகரன் தலைமையிலான ஈழப்போர் | தினகரன்

தெலுங்கில் திரைப்படமாகிறது பிரபாகரன் தலைமையிலான ஈழப்போர்

வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவர் நடத்திய போரையும் மையமாக்கி தமிழில் சில திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அவை தமிழ் ஈழ அரசியல் செயல்பாட்டில் ஆர்வமுள்ள, ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள கலைத்துறையினரின் உணர்வு வெளிப்பாடாகக் கருதப்பட்டது. தமிழில் இப்படியான முயற்சிகள் வழக்கமானவை.

ஆனால் தெலுங்கில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளிவருவது அரிது. 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ். ராஜமெளலியின் ‘சத்ரபதி’ திரைப்படத்தில் அம்மா சென்ட்டிமென்ட் காட்சிகள் சில இலங்கையிலிருந்து போரில் தப்பி வரும் அகதிப் பிரச்சினையைத் லேசாகத் தொட்டு வெளிவந்தது. அவ்வளவு தான் அதற்குப் பின் அங்கே இலங்கைப் பிரச்சினை குறித்த திரைப்படங்கள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

தற்போது நடிகர் மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரை மையமாக வைத்து வெளிவர இருப்பதாக செய்திகள் கசிகின்றன. அதுமட்டுமல்ல அத்திரைப்படத்தில் மஞ்சு மனோஜ் புலித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வேடமேற்று நடிக்கவிருப்பதாகவும் கூடத் தகவல்! ஒக்கடு மிகிலடு எனும் தெலுங்கு வார்த்தைகளுக்கான அர்த்தம் ‘எவனும் மிஞ்சப்போவதில்லை’ என்பதே.

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிக சென்சிட்டிவ்வான அரசியல் போராட்டங்களில் ஒன்றான இலங்கை உள்நாட்டுப் போரை மையமாக்கி வெளிவரும் இத்திரைப்படம் வழக்கமாகப் புறக்கணிக்கப்படும் மசாலா தூக்கலான தெலுங்கு அக்‌ஷன் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு உண்மையாகவே இலங்கை உள்நாட்டுப் போரை உள்ளது உள்ளபடி உணர்வு பூர்வமாக வெளிக்கொண்டு வருமா? என்பது படம் வெளிவந்தால் தெரியும்.


Add new comment

Or log in with...