முதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் | தினகரன்


முதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள்

மனிதன் அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையே அவனை மிருகத்தனமாக நடந்து கொள்ள தூண்டி விட்டது. உலகில் நடந்தேறிய பல்வேறு கொடிய செயல்களுக்கும் எல்லை மீறிய பேராசைகளே மூலகாரணமாக இருந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.அவ்வகையில் நிகழ்ந்த ஒன்றே முதல் உலகப் போராகும்.

உலக வரைபடத்தையே மாற்றி விட்ட முதல் பெரும் போராக உலக மகாயுத்தம் காணப்படுகிறது. இதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்து நிறுத்தியது. சரிவே காணாத நூற்றாண்டு கால சாம்ராஜ்ஜியங்கள் தன்னிலை கெட்டு சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலிலிருந்து அமெரிக்கா புதியதொரு வல்லரசாக உயிர்பெற்றெழுந்தது.

இப்போரானது, 1914 தொடக்கம் 1918 வரை நான்காண்டுகள் தொடர்ந்து இடம்பெற்று உலகையே இருள் மண்டலமாகக் காட்சியளிக்கச் செய்தது.

முதலாம் உலகப் போரினால் 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும் அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவுகள் காரணமாக ஆஸ்திரிய- ஹங்கேரிய பேரரசு, ரஷ்ய பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்று துண்டுகளாயின. ஜேர்மனிய பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ்விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் கண்டன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடைமை அரசுகளும் குடியரசுகளும் உருவாயின.

மேலும் 40 மில்லியன் பேருக்கு காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும் போராளிகளுமாக சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின.

விஷக்காய்ச்சலும், போரும் கொல்லத் தவறவிட்ட மக்களை பசியும், பட்டினியும், சுரண்டல்களும், கொள்ளைகளும் கொன்று குவித்தன. துன்பங்களை சுமந்து கொண்டே மக்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில், முதலாம் மகா யுத்தத்தினால் மறுபுறமும் விளைந்தது. அதாவது எந்தவொரு விடயமானாலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் நன்மை, தீமை காணப்படுவது யதார்த்தமாகும். அதுபோலவே யுத்தத்தினால் நன்மையின் பக்கமும் உலகம் மாறுதல்களை கண்டது என்பதை மறுக்க முடியாது.

அந்தவகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய உலகப்போர் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்த கண்டுபிடிப்புக்கள் இருந்தாலும் உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.

சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப்பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப்போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டுப் போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.

செல்லுலோஸ்களை மெலிதான தாள் போல செய்வதற்கு வழிகண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின. தொடர்ந்து 'புறஊதா விளக்கு சிகிச்சை'யும் அறிமுகமானது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்து வந்த ஜேர்மனியில் பாதியளவு குழந்தைகள் 'ரிக்கட்' என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன. பாதரச குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புறஊதா விளக்கொளியில் அந்தப்பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை 'கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி'என்பவர் கண்டுபிடித்தார். இது மருத்துவ துறையில் பெரும் உதவிபுரிந்தது.

தேயிலை துணிப்பொட்டலங்கள், ஸிப், துருப்பிடிக்காத இரும்பு கருவிகள் என்பன அக்காலத்தில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புக்களாகும்.

அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகவியல் என பல துறைகள் மாற்றம் கண்டது போல் இலக்கியம், கலைத்துறைகளும் மாற்றம் கண்டன. யுத்தத்தினால் கண்டதுன்பங்கள், அனுபவங்கள் என்பன காலக்கண்ணாடியின் மாற்றத்தை உணரச் செய்தன. அதாவது, இலக்கியத்துறையானது நவீனமயமாகியது. உள்ளடக்கம், உருவம், வெளிப்பாட்டுமுறை என்பவற்றில் மரபிலிருந்து விடுபட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணமும், மக்களது அன்றாட வாழ்வின் போராட்டங்களையும் எடுத்தியம்ப ஆரம்பித்தது.

கூத்து, நாடகம், கவிதை, சிறுகதை, நாவல் என பல இலக்கியத் துறையும் மக்களை மையமாக கொள்ள ஆரம்பித்தது. இம்மாற்றமானது படித்த பண்டிதர்களால் தோன்றியவையல்ல. மாறாக சாதாரண மக்களின் உள்ளத்தினின்று ஊற்றெடுத்தவையாக உள்ளன. இதனால் இலைமறை காயாய் இருந்த கலைஞர்களின் திறமைகளும் வெளிப்பட்டன.

விழித்துக் கொண்ட படைப்பாளிகள் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினையை எளிய முறையிலும், நன்கு புரிந்து கொள்ளும் வண்ணமும், தாளத்தோடும், கருத்தாழத்தோடும் படைக்க ஆரம்பித்தனர். மக்களை விழிப்பூட்டச்செய்து அவர்களது இன்னல்களை துடைத்து நல்வாழ்வு பெற உலகாயுதமான சொல்லைக் கொண்டு முயற்சித்தனர். இவை உண்மையில் மக்கள் மனதில் நிலைத்து நின்றதோடு உணர்ச்சிப்பிரவாகத்தையும் அடைப்பட்டுக் கிடக்கும் தம் வாழ்க்கையை மீட்டிக் கொள்ளும் துணிச்சலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இம்மாற்றத்தைக் காண முடிந்தது.

முதலாம் உலகப்போரின் துயரமானது, உலகத்தின் எல்லாத்திசைகளிலும் பரவியது என்பது நாம் அறிந்த விடயமே. இருப்பினும் யுத்தம் இடம்பெறும் போது பிரிட்டி‌ஷ் நாட்டின் காலனித்துவ அரசின் கீழ் இருந்த ஆசிய நாடுகள் யுத்தத்தினால் பெருமளவு சேதங்களை தனதாக்கிக் கொண்டன. அதாவது 1914 இல் முதலாம் யுத்தம் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதிகள் தடைப்பட்டு உணவுப்பொருட்களும், அத்தியாவசியப்பொருட்களும் விலையேறின.

பிரிட்டிஷ் அரசின் காலனித்துவ ஆட்சியின் கீழ்இலங்கை, இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளும் அக்கால கட்டத்தில் இருந்தன. பிரித்தானிய அரசானது 'சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்ஜியம்' என அழைக்கப்பட்டது.

தன் ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் புதிய வரிகளை விதித்து யுத்தத்திற்கு பணம் திரட்டியது. பிரிட்டிஷ் அரசாங்கம் வெளிநாடுகளில் செய்யும் போருக்கு காலனித்துவ நாடுகள் தண்டப்பணம் கட்ட வேண்டியிருந்தது.

மக்களிடம் பசியும், பட்டினியும்,வேலையின்மையும் அரசின் மீது கோபத்தை வளர்த்து வந்தது. உள்நாட்டுக் கலவரங்களும்,இனங்கள் மீதான தாக்குதல்களும் இந்நாடுகளில் அதிகரித்தன. உணவுக்கான போராட்டமே மக்களிடையே பெரும் இழப்புக்களையும், பிரச்சினைகளையும், சேதங்களையும் தோற்றுவித்தது. இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா உட்பட முழு ஆசிய நாடுகளிலும் உணவுக்கான ஏக்கமும், தாக்கமும் போராட்டமாக தலைவிரித்தாடின.

அது மட்டுமல்லாது பிரிட்டிஷ் அரசு தனது யுத்த படைக்காக காலனித்துவ நாடுகளிலிருந்து பெருமளவிலான படைவீரர்களையும் சொத்துக்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டது. பசி, பட்டினி ஒருபுறம் வாட்ட உறவுகளை பிரிந்த சோகமும் மேலும் வாட்டின. அதிலும் முக்கியமாக இந்தியா போன்ற பெரும் வளம் கொண்ட நாடுகளிலிருந்து பெருமளவு பிரித்தானிய அரசு தனது நாட்டுக்கு எடுத்துச் சென்றது.

முதலாம் உலகப்போரில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஆறரைக் கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஒரு கோடி என்னுமளவிற்கு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. போரில் பிரிட்டன் கலந்து கொண்டதால் இந்தியாவிலிருந்து வீரர்களும் போர் புரிய அழைக்கப்பட்டனர். போர் முடிய இந்தியர்களின் தீரச்செயல்களைப் பார்த்து சுதந்திரம் அளிக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததால் இந்திய சுதந்திரப்போராட்டத் தலைவர்களும் பிரிட்டனை ஆதரித்தனர்.

இந்தப் போரில் 11 இலட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை. 'விக்டோரியா கிராஸ்' எனப்படும் வீரச் செயலுக்கான 11 விருதுகள் உட்பட 9,200 நினைவுச்சின்னங்கள் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டன. 1914, 1916 இல் இந்திய போர் வீரர்களோடு 1,72,815 மிருகங்கள் மற்றும் 36,91,836 தொன் பொருட்கள் ஐரோப்பாவிற்குச் சென்றன.

இதில் சுமார் 53,486 இந்திய வீரர்கள் இறந்தனர். 64,350 பேர் காயமடைந்தனர். 3,762 பேர் காணாமல் போயினர்.இந்தியா முதலாம் உலகப் போருக்காக எட்டுக்கோடி மதிப்புள்ள பண்டங்களையும், உபகரணங்களையும் வழங்கியது. 1919 தொடக்கம் 1920 வரை நேரிடையான பங்களிப்பாக பதினாறு கோடியே அறுபத்திரண்டு இலட்சம் பவுண்டை இந்தியா வழங்கியது.

இருப்பினும் போரின் முடிவில் இந்தியா எதிர்பார்த்த வண்ணம் சுதந்திரத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. மாறாக பஞ்சம், பட்டினி, நோய், ஊனமுற்றோர், விதவைகள், அநாதைகள், பொருளாதார வீழ்ச்சி, கடுமையான வரி அறவீடு, அடிமைத்தனம் என்று துன்பங்களின் படு குழியையே சந்திக்க நேர்ந்தது. இந்நிலை இந்தியாவில் மட்டுமல்லாது காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் நிலவியது.

இந்தியாவில் நிலவிய சமூக சூழலும், ஆங்கிலக்கல்வி முறையும், சாதிப்பிரச்சினைகளும், அடிமைத்தனமும் எனப் பல காரணிகள் பாரதியாரை புதுமை வேட்கையோடு சிந்திக்கச் செய்தது. தம் நாடும், தம் நாட்டு மக்களும் சுதந்திரமாய் வாழ வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தார். அப்பொழுதே விடுதலை உணர்வும், புதுமையும், சமூக சீர்திருத்தச் சிந்தனையும் ஓங்கிய கவிதைகளை படைக்க முற்பட்டார். அதற்கு மரபு வழி பொருத்தமன்று அதில் புதுமையை புகுத்திட வேண்டும், அதனை மக்கள் விளங்கிட வேண்டும், அவை மக்கள் நிலை சொல்ல வேண்டும் என எண்ணினார்.

மரபு வழியை மறந்திடாமலும், புதுமையில் மூழ்கிடாமலும் தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாக, இனிமையாக அன்றாட வாழ்க்கையையொட்டிப் பாடினார். இந்தியாவில் ஆற்ற முடியாத காயமாக தொடர்கின்ற சாதியப்பிரச்சினையானது மக்களின் ஒற்றுமையை கூறு போட்டது. இதனால் தான் இந்தியா சுதந்திரம் பெறாமல் இருக்கிறது. தமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம், பின்பு தம்மை மிதிப்பவர்களை விரட்டியடிப்போம் என்ற கொள்கை கொண்டவர் பாரதி.

மக்களைப் பற்றியும், அவர்கள் வாழ்வை பற்றியும் யதார்த்தபூர்வமாகவே கவிஞர்கள் எழுதியுள்ளனர். காரணம் கவிஞர்கள் பாடல்களையோ, கவிதைகளையோ, இலக்கியங்களையோ புகழுக்காக படைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை போராட்டத்தின் உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்கள். கவிஞர்கள் மக்கள் சமூகத்தை விட்டு வெளியில் நின்றவர்கள் அல்லர்.மக்களோடு மக்களாக பாடுபட்டவர்கள். தம் அனுபவங்களை நயம்பட கூறும் ஆற்றலும், துணிச்சலும் பெற்று கவிஞர்களாக மிளிர்ந்தார்கள்.

எம்.என் யஸீரா இஸ்ஸத்
 மூன்றாம் வருடம், கலைப்பிரிவு,
 கிழக்குப் பல்கலைக்கழகம், 


There is 1 Comment

Effects

Add new comment

Or log in with...