Home » சமூக ஊடகங்களை சீர்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை!

சமூக ஊடகங்களை சீர்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ள இலங்கை!

by mahesh
October 18, 2023 6:00 am 0 comment

இருபத்தோராம் நூற்றாண்டு நவீன டிஜிட்டல் யுகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு முன்னேற்றத்தை இத்துறை முன்னொரு போதுமே அடைந்ததில்லை.

தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி, முன்னேற்றங்கள் காரணமாக முழு உலகமும் ஒரு குக்கிராமமாக மாற்றமடைந்துள்ளது.

பல ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருப்பர்களுடன் நினைத்த மாத்திரத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய வசதியை மாத்திரமல்லாமல் அங்கு இடம்பெறக் கூடிய நிகழ்வுகளை அறிந்து தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது இந்த தகவல் தொழில்நுட்பங்கள்.

இத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினால் முழுஉலகமும் பல்வேறு விதமான நன்மைகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதேநேரம் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியினால் தீமைகளும் ஏற்படவே செய்திருக்கின்றன. மக்களுக்கு பல்வேறு வகையிலும் நன்மைகள் அளிக்கக் கூடியனவாக விளங்கும் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, சில சந்தர்ப்பங்களில் மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகினறன.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் சமூக ஊடகங்களுக்கு வரையறைகளோ, ஒழுக்கக்கோவைகளோ, கட்டுப்பாடுகளோ பெரும்பாலும் கிடையாத நிலையே காணப்படுகிறது. அதனால் மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பயன்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் பரவலாக உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் சமூக ஊடகக் கண்காணிப்பின் அவசியம் குறித்து பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

சமூக ஊடகங்களை உருவாக்கியவர்களே அதற்கான ஒழுங்குவிதிகளையும் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சமூக ஊடகங்களின் சில செயலிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கூட டிக்டொக் உள்ளிட்ட 58 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

இன்றைய இளம் தலைமுறையினர் முகநூல், ட்வீட்டர், யூரியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வழங்கப்படும் தகவல்கள் குறித்து மிகவும் சங்கடமான நிலைகளுக்கு உள்ளாகக் கூடியவர்களாக உள்ளனர். அத்தகவல்கள் சில சந்தர்ப்பங்களில் மிக மோசமான விபரீதங்களை ஏற்படுத்தக்கூடியனவாக அமைந்து விடுகின்றன. இந்த நிலையில் சமூக ஊடகங்களை ஒழுங்கமைத்து நெறிமுறைப்டுத்துவதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இதற்கு சட்ட விதிகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நாட்டில் தற்போது அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொலைக்காட்சிச் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் அது நியாயமான ஊடக வளர்ச்சிக்கு எவ்வகையிலும் பொருத்தமற்றது. தகவல் தொடர்பாடல் மற்றும் ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும், மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும், உலகின் முன்னேற்றமடைந்துள்ள பல நாடுகள் சட்ட விதி முறைகளை தயாரித்துள்ளன. குறிப்பாக சிங்கப்பூரின் தகவல் தொடர்பாடல் ஊடக மேம்பாட்டு அதிகார சபைச் சட்டத்தை எடுத்துப் பார்த்தால் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அது பாரிய பங்களிப்பு நல்கி வருகின்றது.

அந்த வகையில் அத்தியாவசியமான உண்மைகளை மறைக்காமல் இருப்பது குறித்தும் ஊடகங்களுக்கு பொறுப்பு உள்ளது. அதனால் இலங்கை அறிமுகப்படுத்தும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக ஊடகங்களை கண்காணிக்கும் முறைமையானது, ஊடகங்களை வலுப்படுத்துமே தவிர அவற்றைக் கட்டுப்படுத்துவதாக அமையாது. அதனை அனைத்து ஊடகவியலாளர்களும் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். சரியான தகவல்களை வழங்குவது முழுநாட்டிற்கும் பயனுள்ள செயலாக அமையும்.

இந்தச் சூழலில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன எம்.பி, சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் நோக்கில் அல்லது பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்படுவது அவசியம்’ என்று குறிப்பிட்டதோடு, ‘உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அனைத்து தரப்பினரதும் வரவேற்றுள்ளனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இது பெரிதும் உதவும்.

ஆகவே தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பொறுப்புடன் பாவிப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அது பிறரது உரிமைகளையும் அபிலாஷைகளையும் பாதிக்க எந்த வகையிலும் துணைபோகாது. சமூக, கலாசார, பொருளாதார மேம்பாட்டுக்கும் அது வலுசேர்க்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT