Friday, April 19, 2024
Home » காத்தான்குடி சிறுவர், முதியோர் இல்லங்களில் ஒருநாள் பொழுதை கழித்த ஐகோனிக் யூத்ஸ்-சிறிலங்கா அமைப்பு இளைஞர்கள்

காத்தான்குடி சிறுவர், முதியோர் இல்லங்களில் ஒருநாள் பொழுதை கழித்த ஐகோனிக் யூத்ஸ்-சிறிலங்கா அமைப்பு இளைஞர்கள்

by mahesh
October 18, 2023 2:06 pm 0 comment

கிழக்கிலங்கையில் மக்கள்நலப் பணிகளில் பிரகாசித்து வரும் ஐகோனிக் யூத்ஸ்- சிறிலங்கா அமைப்பு, வறிய மக்களின் கண்ணீர் துடைக்க பாடுபட்டு வருகின்றது. மூவினத்தையும் சேர்ந்த வறிய மாணவர்களை இனம்கண்டு, அவர்கள் வறுமையின் காரணத்தால் கல்வியை இடைநடுவில் கைவிடாமலிருப்பதற்கான உதவிகளையும் வழங்கி வருகின்றது.

அதேசமயம் நோயுற்றிருக்கும் வறிய மக்களுக்கான மருத்துவ தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதிலும், பெற்றோரை இழந்து ஆதரவற்றிருக்கும் சிறுவர்களுக்கு உதவுவதிலும் மேற்படி அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

ஆதரவற்ற சிறுவர்களின் கவலையை அகற்றி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதிலும், அவர்களுக்குத் தேவையான அவசியமான உதவிகளை வழங்குவதிலும் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஐகோனிக் யூத்ஸ் – சிறிலங்கா அமைப்பு ஈடுபட்டு வருகின்றது.

அந்த வகையில் காத்தான்குடியில் உள்ள சிறுவர் இல்ல சிறுவர்களோடும், இந்த இல்லத்துடன் இணைந்தாற் போல் இயங்கி வரும் முதியோர் இல்ல முதியவர்களோடும் ஐகோனிக் யூத்ஸ் அமைப்பின் ஸ்தாபக தலைவர் யூ.எம்.தில்ஷான் வழிநடத்தலில், ஆலோசனைச்சபை உறுப்பினர்கள், இளைஞர்கள் ஒருநாள் பொழுதை மகிழ்ச்சிகரமாக கழித்தார்கள்.

இவ்வமைப்பினரின் இச்செயற்பாடு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது. ஒன்பதாவது வருட நிகழ்வாக நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் (நழீமி) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இவர் அச்சிறுவர்களுக்கும், அமைப்பின் இளைஞர்களுக்கும் அறிவுரைகளை வழங்கினார். ஐகோனிக் யூத்ஸ் அமைப்பு தொடர்ச்சியாக சமூகத்திற்கு பல வழிகளிலும் உதவி செய்கின்றது என்று அவர் தெரிவித்ததுடன், கல்வி எனும் சொத்தை எந்தப் பிரச்சினை வந்தாலும் கைவிடக்கூடாது, அதற்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்பாடுகளையும் பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இச்சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள் தங்களது கவலைகளை மறந்து இந்த இளைஞர்களுடன் மகிழ்ச்சியுடன் உரையாடி மகிழ்ந்தார்கள். உணவு உண்டார்கள், ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். இஸ்லாமிய பாரம்பரிய கலைநிகழ்ச்சியான பொல்லடியும் அச்சிறுவர்களினால் அரங்கேற்றப்பட்டதோடு, அதற்கும் மேலாக தங்களுக்குள் மறைந்து கிடந்த திறமைகளை வெளிக்கொண்டும் வந்தார்கள்.

இந்த அமைப்பின் வாலிபர்கள் சிறுவர் இல்ல சிறுவர்களுடன் சேர்ந்து தாங்களும் சிறுவர்களாக மாறி மகிழ்ச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டார்கள். அந்த அனுபவத்தை சிறுவர்கள் மனம்திறந்து பாராட்டினார்கள். பல துன்பங்களை அச்சிறுவர்கள் சுமந்திருந்தாலும் ஐகோனிக் யூத்ஸ் இளைஞர்களின் வருகையால் அவர்கள் கவலைகளை மறந்திருந்தனர்.

காலை வேளையில் சிறார்களுடன் அன்பைப் பரிமாறியவர்கள், பிற்பகல் வேளையில் முதியோர் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்குத் தேவையான பகலுணவை வழங்கி அங்கு அவர்களோடும் உரையாடினார்கள். அந்த முதியவர்கள் தங்களது நிலைமைகளை இளைஞர்களிடம் விபரமாக எடுத்துரைத்தனர். முதியவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் இளைஞர்கள் அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.

சிறுவர் இல்லத்தில் சில போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, வெற்றியீட்டியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்ட சிறுவர்களுக்கும் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. அதேவேளை பிள்ளைகள் ஒவ்வொருவரும் தமது பெற்றோரை வீட்டில் வைத்து கவனத்துடன் பராமரித்தால் இவ்வாறான முதியோர் இல்லங்கள் அவசியமில்லை என்பதுதான் அங்கு கண்டுகொண்ட உண்மையாகும்.

எம்.எஸ்.எம்.றிஸ்வான் (அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT