சுமண தேரர் போராட்டம்; கண்ணீர்ப்புகை தாக்குதல் | தினகரன்

சுமண தேரர் போராட்டம்; கண்ணீர்ப்புகை தாக்குதல்

 
வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த மைதானக் காணியை மீட்பதற்கு இன்று (15) பகல் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமண தேரர் தலைமையில் குழுவொன்று வந்துள்ளது.
 
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான காணியின் ஒரு பகுதியை, முஸ்லிம்கள்  சட்டத்திற்கு முரணாக அபகரித்து குடிசை அமைத்துள்ளதாக தெரிவித்து, அதற்கு எதிராக அதனை கண்டித்து காணியை மீள பெறும் வகையில் இக்குழுவினர் வருகை தந்திருந்தனர்.
 
 
இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமண தேரர் தலைமையில் வந்த பொதுமக்கள் வேலியை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை வேலியில் ஒட்டினர்.
 
நீதிமன்ற தடை உத்தரவை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமண தேரர் கிழித்தெறிந்ததோடு, வேலிக் கம்பை பிடுங்கி எறிய முற்பட்ட நிலையில், தேரருடன் வந்த பொதுமக்களும் வேலியை பிடுங்க முற்பட்டனர், இதன்போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
 
 
அதனையும் பொருட்படுத்தாக அவர்கள், வேலியை தகர்க்க முற்படும் போது, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமண தேரர் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் பொலிஸ் கலகம் அடக்கும் பிரிவினர் ஈடுபட்டனர்.
 
இதனையடுத்து, ஆவேசகம் கொண்ட குறித்த குழுவினர், மீண்டும் வேலியை பிடுங்கிய போது பொலிஸார் தடி அடி தாக்குதலை பிரயோகம் செய்தனர்.
 
இதன்போது பலர் காயமடைந்ததோடு, பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
 
இவ்விடயமாக குறித்த இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்ன ஆகியோர் சம்பந்தப்பட்ட பொதுமக்களிடம் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
 
குறித்த விடயம் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் (16) அனைவரும் கலந்து கொள்ளுமாறும், பாடசாலை காணி வரைபடத்தில் உள்ளவாறு காணி பெற்றுத் தரப்படும் எனவும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அநுர தர்மதாச தெரிவித்தார்.
 
 
அதன் பிற்பாடு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமண தேரர் தலைமையில் வந்த குழுவினர் கலைந்து சென்றதுடன், பொதுமக்களை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டுக் கொண்டனர்.
 
 
(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...