சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு குழறுபடி; பட்டியலில் தொழில்நுட்ப தவறே காரணம் | தினகரன்

சமுர்த்தி நிவாரண கொடுப்பனவு குழறுபடி; பட்டியலில் தொழில்நுட்ப தவறே காரணம்

மக்களுக்கான நிவாரணங்களை இல்லாதொழிப்பதற்கான எந்த அவசியமும் அரசாங்கத்திற்கு கிடையாது. சமுர்த்தி நிவாரணம் வழங்குவது தொடர்பான பட்டியலில் ஏற்பட்ட தொழில்நுட்ப தவறை சரிசெய்த பின் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பிரச்சினைகளும் தீருமென அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார்.

சமுர்த்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஆய்வுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்திற்கமைய சமுர்த்தி மறுசீரமைப்பு பட்டியல் நேற்று (16 ) முழுமையாக செல்லுபடியாக்கப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப தவறுகள் சரிசெய்யப்பட்ட பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று சமூக முன்னேற்றம் மற்றும் நலன்புரி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

சமுர்த்தி மறுசீரமைப்பு பட்டியல் தயாரிப்பின் போது இடம்பெற்றுள்ள கணனி மற்றும் வேறு தொழில்நுட்ப தவறுகள் பல இனங்காணப்பட்டுள்ளன. இதற்கிணங்கவே மேற்படி பட்டியல் செல்லுபடியாக்கப்பட்டது. கணனி மற்றும் தொழில்நுட்ப தவறுகள் சரிசெய்யப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடர முடியும் என அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

வெளியிடப்பட்ட பட்டியல் சம்பந்தமாக இடம்பெற்றுள்ள எதிர்ப்புகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சமுர்த்தி நிவாரணம் பெற தகுதியானவர்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்காமை தொடர்பில் ஆய்வுமூலம் தெரியவந்துள்ளதுடன் இந்த நிலையை உடனடியாக சரிசெய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பணிப்புரைக்கமைய அதன் மீதான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிணங்க பிரதான 200 முறைப்பாடுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது பலர் பட்டியலில் உட்படுத்தப்படாமைக்கு கணனி மற்றும் தொழில்நுட்ப தவறுகளே காரணம் என்பது தெரியவந்துள்ளது. தகவல் விண்ணப்பங்கள் நிரப்புதலில் இடம்பெற்ற தவறுகள் இதற்கு காரணமாகியுள்ளன. மேற்படி 200 முறைப்பாடுகளை கவனத்திற்கொண்ட போது அதில் 41 பிழைகள் இருந்தன. அத்துடன் விண்ணப்பப்பத்திரங்கள் நிரப்புவதிலும் 11 பிழைகள் காணப்பட்டன. இதனையடுத்து ஒவ்வொரு விண்ணப்பங்களையும் தனித்தனியாக பரிசீலிக்குமாறு சகல பிரதேச செயலகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கண்டறியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகுதியில்லாதவர்களுக்கு சமுர்த்தி நிவாரணங்கள் வழங்கப்படுவதாகவும், உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு நிவாரணங்கள் கிடைக்காமலிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் சமுர்த்தி நிவாரணம் தொடர்பில் மீளாய்வு ஒன்றை செய்ய நேரிட்டது. கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே இவ்வாறான ஒரு செயற்பாட்டை மேற்கொள்ள இருந்தபோதும் அன்றைய சூழ்நிலையில் அதை செய்யமுடியாமல் போனது.

அதன் பின்னர் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இதனை மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய நான் சமுர்த்திக்கு பொறுப்பான அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள், குடிசன மதிப்பீட்டு விசேட அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி உலகிலேயே சிறந்த முறைமையொன்றின் மூலம் இந்த மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிணங்க சமுர்த்தி பெறுவோர் மட்டுமன்றி சமுர்த்தி நிவாரணம் கோரி விண்ணப்பிப்போர் உட்பட 23 இலட்சம் பேரின் தகவல்கள் திரட்டப்பட்டு இந்த மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரதேச செயலகங்கள் மூலம் நாள் சம்பளத்திற்கு சிலபேரை அமர்த்தியே இதைக் கணனி மயப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

இதன்போது சிலரது தகவல்கள் முழுமையாக கணனிமயப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சில பக்கங்கள் குறைந்து காணப்பட்டன. சில தகவல்கள் தவறாகப் பதியப்பட்டிருந்தன. மேற்படி பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்கொள்ள நேர்ந்த எதிர்ப்புகள் மற்றும் முறைப்பாடுகளுக்கமையவே இத்தவறுகள் எமக்குத் தெரியவந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...