Saturday, April 20, 2024
Home » காசாவில் ‘மனிதாபிமான அவலம்’ தீவிரம்; இன்று இஸ்ரேல் விரைகிறார் ஜோ பைடன்

காசாவில் ‘மனிதாபிமான அவலம்’ தீவிரம்; இன்று இஸ்ரேல் விரைகிறார் ஜோ பைடன்

- வடக்கில் ஹிஸ்புல்லாஹ்வுடன் தொடர்ந்து மோதல்

by mahesh
October 18, 2023 7:36 am 0 comment

முற்றுகையில் உள்ள காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணங்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (18) திடீர் விஜயமாக இஸ்ரேலுக்கு வருகை தரவுள்ளார்.

இஸ்ரேல் தவிர்த்து காசாவுக்குள் நுழைவதற்கான ஒரே வாயிலாக உள்ள எகிப்துடனான ரபா எல்லை கடவையில் முக்கிய உதவிப் பொருட்களை ஏற்றிய டிரக் வண்டிகள் வரிசையில் காத்துள்ளன. எனினும் அவை எல்லை கடந்து காசாவுக்குள் அனுமதிக்கப்படுவது குறித்து நேற்று பின்னேரம் வரை எந்த உறுதியான அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது.

ரபா எல்லையை திறப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு அருகில் எகிப்து சிறு நகரான அல் அரிஷில் சுமார் 160 டிரக் வண்டிகள் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 1,300 பேர் கொல்லப்பட்ட நிலையில் காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக இஸ்ரேல் உறுதிபூண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதில் 2,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் கால் பங்கினருக்கும் அதிகமானோர் சிறுவர்களாவர். 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசா மீது உணவு, நீர், மின்சாரம் மற்றும் எரிபொருளை துண்டித்து முழு முற்றுகை அமுல்படுத்தியிருக்கும் சூழலில் அங்கு பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன் இஸ்ரேல் பயணித்து நெதன்யாகுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார். இதன்போது காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல நெதன்யாகு அனுமதித்ததாக பிளிங்கன் தெரிவித்திருந்தார். அது பற்றி மேலதிக விபரங்கள் எதனையும் அவர் கூறவில்லை.

“இஸ்ரேல் தம்மை பாதுகாப்பதற்கு என்ன தேவை என்பது பற்றி ஜனாதிபதி கேட்டறியவுள்ளார். அந்தத் தேவையை பூர்த்தி செய்ய பாராளுமன்றத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்று பிளிங்கன் தெரிவித்தார்.

ஈரான் முன்கூட்டிய நடவடிக்கை ஒன்று பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இந்தப் போர் பிராந்தியத்திற்கு பரவுவதை தடுப்பதற்கு அரபு நாடுகளை அணிதிரட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது.

இன்று இஸ்ரேல் செல்லும் பைடன் தொடர்ந்து ஜோர்தான் சென்று அந்நாட்டு மன்னர் அப்துல்லாஹ், எகிப்து ஜனாதிபதி அப்துல் பதாஹ் அல் சிசி மற்றும் பலஸ்தீன அதிகாரசபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை காசா போர் தொடர்பில் அரச தலைவர்களின் மாநாடு ஒன்றை எகிப்து நடத்தவுள்ளதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹகன் பிதான் தெரிவித்துள்ளார்.

காசா அவலம் தொடர்கிறது

காசாவில் நேற்று அதிகாலை இடம்பெற்ற உக்கிர வான் தாக்குதல்களில் தென் காசாவில் உள்ள ரபா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளில் மேலும் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் உத்தரவை அடுத்து பெரும்பாலான காசா மக்கள் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

அமின் ஹனைதக் சக்திவாய்ந்த குண்டு வெடித்த அதிர்வினாலேயே நேற்று விழித்துக் கொண்டார். அவரது வீட்டின் ஜன்னல்கள் உடைந்தன. மகளின் தலையில் கீறல் ஏற்பட்டது. இந்த குண்டு தாக்குதலில் அருகில் இருக்கும் வீடு தரைமட்டமாக்கப்பட்டு வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்து அடைக்கலம் பெற்றிருந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

“தாக்குதல் காரணமாகவே அவர்கள் வடக்கில் இருந்து தெற்கு வந்தார்கள்” என்று ஹனைதக் அழுதபடி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

கான் யூனிஸுக்கான ஒரே ஒரு நீர் இணைப்பை மாத்திரம் இஸ்ரேல் திங்கட்கிழமை மூன்று மணி நேரம் திறந்துவிட்ட நிலையில் 14 வீதமானவர்கள் மாத்திரமே நீரை பெற்றனர் என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“காசாவில் இயங்கி வந்த கடைசி கடல்நீர் சுத்திகரிப்பு ஆலையும் மூடப்பட்டது உட்பட அங்கு நீர் மற்றும் துப்புரவேற்பாட்டு சேவைகள் முடங்கியுள்ள நிலையில் நீரிழப்பு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்கள் பற்றிய கவலை அதிகரித்துள்ளது” என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

“நீரின்றி மக்கள் உயிரிழக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்றும் அது குறிப்பிட்டது.

காசாவுக்கு உதவிப் பொருட்கள் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுடன் உள்ள மக்கள் காசாவில் இருந்து ரபா எல்லைக் கடவை ஊடாக வெளியேறுவதற்கு முயன்று வருகின்றனர். இவ்வாறானவர்கள் இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு மத்தியில் ரபா எல்லை கடலையை அடைவதிலும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

மருத்துவத் தேவையுடையவர்கள் வெளியேற அனுமதிப்பதாக குறிப்பிடும் எகிப்து பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளியேறுவதை நிராகரித்து வருகிறது.

இதேவேளை வடக்கு காசாவில் இருந்து சுமார் 600,000 பேர் வெளியேறி இருப்பதாகவும் சில ஆயிரம் பேர்கள் தொடர்ந்தும் அங்கு இருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் பேச்சாளர் ஜொனதன் கொன்ரிகஸ் எச்சரித்துள்ளார். அவர்கள் பாதுகாப்பு வழிகளை பின்பற்றும்படியும் அங்கிருந்து வெளியேறும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர வசதி இல்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

வடக்கில் தொடரும் மோதல்

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் திட்டமிடும் நிலையில் லெபனானுடனான வடக்கு இஸ்ரேலில் இரண்டாவது போர் முனையாக ஹிஸ்புல்லாவுடனான மோதல் அதிகரித்துள்ளது.

எல்லை வேலியை கடந்து வெடிபொருட்களை வைக்க முயன்ற நால்வரை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. லெபனான் எல்லைக்கு அருகில் 2 கிலோமீற்றர் வலயத்தில் இருந்து 28 இஸ்ரேலிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட்கிழமை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் ஹனிடாவில் இருக்கும் இஸ்ரேலிய டாங்கிகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது. எனினும் சேத விபரங்கள் பற்றி உறுதி செய்யப்படவில்லை.

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது ஆத்திரமூட்டும் செயல்களை நிறுத்த வேண்டும் என்று லெபனான் வெளியுறவு அமைச்சர் பொவு ஹபிப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவும் அவர் எச்சரித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்தால், சரியான நேரத்தில் ஹமாஸுக்கு உதவத் தயார் என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது. இஸ்ரேல் முழுவதையும் தாக்கக்கூடிய அளவுக்குத் தன்னிடம் ஆயுதங்கள் உள்ளதாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

தமது அமைப்பில் 100,000 வீரர்கள் இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் செய்யிது ஹசன் ரஸ்ரல்ல 2021 ஆம் ஆண்டு கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT