இலங்கைக்கு 99 வருட கால குத்தகை முறை உகந்ததா? | தினகரன்

இலங்கைக்கு 99 வருட கால குத்தகை முறை உகந்ததா?

சில வாரங்களாக எமது நாட்டில் கதைபேசும் கருப்பொருளாக மாறியுள்ள விடயம் 99 வருட குத்தகை முறையாகும். குத்தகை முறையானது நாட்டை அதல பாதாளத்துக்கு இட்டுச் செல்லும் முறையென்று கூறுகின்றார்கள். சிலர் இவ்வாறு குத்தகைக்கு வழங்காமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாதெனக் கூறுகின்றார்கள். இதேவேளை நாட்டு மக்கள் இந்த விவாதங்களுக்கு இடையே எது சரி எது பிழையென அறிய முடியாமல் மௌனம் சாதிக்கின்றார்கள். ஆகவே நாம் இதன் நன்மை தீமைகள் பற்றி அறிய கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவைச் சேர்ந்த கலாநிதி சந்தன அளுத்கேயிடம் வினவினோம்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் உற்பத்தியின் அளவை முடிந்தளவு பயனுள்ளதாக ஆக்கவேண்டும். அதற்குத் தேவையான வளங்கள் நாட்டில் காணப்பட வேண்டும். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் உயர்ந்த நிலையில் இல்லாமையினால் அது சாத்தியம் இல்லை. எமது நாட்டில் அநேகமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு உதவி பெற்றுக்கொள்ளப்படுகிறது. அதனால் அதிக கடன் சுமை ஏற்படுகின்றது. அதனை நாம் வட்டியுடன் செலுத்த வேண்டியுள்ளது. அதனை செலுத்தக் கூடிய சரியான வழிமுறைகள் எம்மிடமில்லை. அதனால் கடனைச் செலுத்த நாம் வழிமுறைகளை தயாரிக்க வேண்டும். அதன் ஒரு நடவடிக்கையாக எமது நாட்டில் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களுடன் அத்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வெளிநாடுகளுடனோ அல்லது நிறுவனங்களுடனோ நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

இங்கு உருவாகும் பிரச்சினையானது நாம் இணைப்பை எவ்வாறு மேற்கொள்வதென்பதாகும். எமது நாட்டில் மாத்திரமல்ல எந்தவொரு நாட்டினதும் பொருளாதாரத்துக்கு ஏற்ப வெளிநாட்டு நிறுவனங்களுடனோ அல்லது வெளிநாடுகளுடனோ இணைந்து நடவடிக்கையில் ஈடுபடும்போது குறுகியகால மத்திம கால அல்லது நீண்ட கால முதலீட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. எமது நாட்டின் முறைப்படி நூறு வருடங்களோ அல்லது அதற்கு அதிக வருடங்களோ எந்தவொரு நிறுவனத்தாலோ அல்லது நபர்களாலோ ஏதோவொரு காணியை பாவித்தால் அதன் உரிமை அவர்களுக்குக் கிடைக்கும்.

நீண்ட கால முதலீடுகள்;

அதனால் நாட்டில் ஏதேனும் நீண்ட கால முதலீடுகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அந்தக் காணி 99 வருடங்களுக்கே குத்தகைக்கு வழங்கப்படும். அக்காணியை 99 வருடங்கள் வரை குத்தகைக்கு எடுத்த நிறுவனமோ நாடோ பாவிப்பதுடன் அதற்கான குத்தகையை அந்நாட்டிற்கு வழங்க வேண்டும். அம்முறையானது சாத்தியமில்லாத போது குத்தகைக்கு வழங்கப்படும் கால எல்லை சிலவேளைகளில் 20 தொடக்கம் 30 வருடங்களாக இருக்கலாம். அதனை மத்திய கால அல்லது குறுகிய கால குத்தகை அடிப்படை எனக் கூறலாம். ஆனால் நீண்ட கால குத்தகை என்றால் 99 வருடங்களே ஆகும்.

இம்முறையை நாம் எமது காணியை குத்தகைக்கு வழங்குவதற்கு ஒப்பிடலாம். எம்மிடம் காணியொன்று இருந்தால் அதில் பண்ணையொன்றை ஆரம்பிக்கவோ அல்லது பயிரிடவோ எம்மால் முடியாத போது நாமொரு முதலீட்டாளரைத் தேடிக் கொள்வோம். அவர் பண்ணையொன்றை அமைத்தோ அல்லது பயிரிட்டோ வருமானத்தைப் பெற்றுக்கொள்வார். அக்காணிக்கும் காணியிலுள்ள ஏனைய வளங்களுக்காகவும் அவர் எம்மிடம் கட்டணம் வசூலிப்பார். அதைப் போன்றதே 99 வருட குத்தகையாகும். அது சாதாரண வாழ்க்கையில் வீடொன்றிலுள்ள மேலதிகமாக உள்ள இரண்டு அறைகளை வாடகைக்கு வழங்குவதற்கு சமனாகும். இங்கு குத்தகைக்கு வழங்குபவர் அதிகூடிய விலைக்கே குத்தகைக்கு வழங்குவார். அதேபோல் முதலீட்டாளரும் கூடிய இலாபத்தைப் பெறவே முயற்சி செய்வார். அதனால் இரு தரப்பாரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமைப்பாட்டுக்கு வருவார்கள்.

இறுதியில் இருதரப்பாரும் ஒப்புக்கொள்ளக் கூடிய வழிமுறையொன்று தயாரிக்கப்படும். அவ்வேளையில் நிலத்தை குத்தகைக்கு கொடுப்பவர் தன்னுடைய தேவையை தெளிவாக யோசிக்க வேண்டும். அதிகளவு வங்கிக்கடனைப் பெற்று அமைக்கப்பட்ட வீட்டில் சில அறைகளை பூட்டி வைத்துக் கொண்டு மேலும் கடன் வாங்கி கடனை அடைப்பது சரியா? அல்லது அவ்வறைகளை சில காலம் வாடகைக்கு வழங்கி அதன் மூலம் கடனை அடைக்க முயற்சிப்பது சிறந்ததா என முடிவு செய்ய வேண்டும். விசேடமாக அதிகளவு கடனைப் பெற்று அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய இலங்கை போன்ற நாட்டில் தனது கடன் சுமையிலிருந்து விடுபட 99 வருட குத்தகை முறை பொருத்தமானதென இங்கு குறிப்பிடலாம். அவ்வாறு இல்லாமல் எமது உரிமையை மாத்திரம் வைத்துக்கொண்டு குறிப்பிட்ட திட்டத்தை நட்டத்துடன் செயற்படுத்தலாம்.

முதலீட்டாளர்களின் முடிவு

அப்போது அதிகக் கடனைச் செலுத்துவது எவ்வாறென தாம் எண்ண வேண்டும். அதேபோல் முதலீட்டாளர்களின் ஒரே முதலீடு இது அல்லவென்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் சிலவற்றை நாம் குறைக்க வேண்டிய நிலைமையும் ஏற்படும். நாம் உதாரணமாக ஒரு வீட்டிற்கான பாதை எட்டு அடியாக மாத்திரம் அமைந்திருந்தால் அந்த வீட்டை வாடகைக்கு விடுவது சிறிது சிரமமே. மோட்டார் சைக்கிளொன்றை வைத்திருப்பவர் குறைந்த கட்டணத்துக்கே அறையை வாடகைக்குப் பெற முயற்சிப்பார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாகவும் அதனையே நாம் கூற வேண்டியுள்ளது.. எம்மால் ஏனைய நாடுகளுடன் போட்டி போட முடியாதென நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹம்பாந்தோட்டை துறைமுகம் பற்றியே அனைவரும் பேசுகின்றார்கள. இன்று ஸ்ரீலங்கா நிறுவனம் அந்நிறுவனங்களாலேயே உள்ளதை யாரும் அறியமாட்டார்கள். உலகில் அநேகமான விமான நிறுவனங்கள் இவ்வாறான ஒருமைப்பாட்டுடனேயே செயல்படுகின்றன.

தாரக விக்கிரமசேகர
தமிழில்: வீ. ஆர். வயலட் 


Add new comment

Or log in with...