பொல்லால் அடித்துக் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை | தினகரன்

பொல்லால் அடித்துக் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று பொல்லால் அடித்து கொலை செய்ததாக குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க நேற்று வெள்ளிக்கிழமை (11) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தள்ளார்.

கடந்த 2006.09.08ஆம் திகதியன்று கல்முனைக்குடி புறாச்சந்தியில் கடத்திச் செல்லப்பட்டு பொல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் 03 நபர்கள் மீது கல்முனை பொலிஸாரினால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

இவ்வழக்கு மேலதிக விசாரணைக்காக சட்ட மா அதிபரினால் சந்தேக நபர்கள் மீது கல்முனை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி பி. சுகர்னராஜ் முன்னிலையில் 2012.0710ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்பட்ட போது 03 பேரும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தார். மரண தண்டணை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் மூவரும் இம் மரண தண்டனையை இரத்துச் செய்யுமாறு கோரி கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கை மீண்டும் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குமாறு கல்முனை மேல் நீதிமன்றத்திற்கு கட்டளைப் பிறப்பித்திருந்தனர்.

இதையடுத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க இவ் வழக்கை மீண்டும் விசாரணை செய்து குற்றவாளிகளாக இனங்காப்பட்ட 01வது நபருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (11) மரண தண்டணை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் நீதமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இறந்தவர் கல்முனைக்குடியைச் சேர்ந்த தாஸ்கான் (வயது-25) என்பவராவார். சாய்ந்தமருதை வசிப்பிடமாக கொண்ட 01 பிள்ளையின் தந்தையான முகம்மது யூஸுப் தியாஸ் அல்லது ஜெஸ்கான் (வயது-38) என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.வழக்காளி சார்பில் அரச சட்டத்தரணி மலீக் அஸீஸ் நீதிமனறத்தில் ஆஜராகி இருந்தார்.

ஒலுவில் விசேட நிருபர்

 


Add new comment

Or log in with...