அக்கரைப்பற்றில் வீடொன்று தீக்கிரையாகி முற்றாக நாசம் | தினகரன்

அக்கரைப்பற்றில் வீடொன்று தீக்கிரையாகி முற்றாக நாசம்

 
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாயழகு வீதி அக்கரைப்பற்று 9ஆம் பிரிவில் அமைந்துள்ள வீடொன்று நேற்று (10) இரவு தீக்கிரையாகி முற்றாக நாசமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
 
இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதுடைய க. ஏஞ்சல் சோனியா என்பவருக்கு சொந்தமான வீடே இவ்வாறு தீக்கிரையாகி நாசமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
 
 
வீட்டின் உரிமையாளர் கொழும்பிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் யாருமில்லாதபோது வீட்டை உடைத்து உள்நுழைந்தவர்கள் வீட்டை தீயிட்டு எரித்துள்ளதாகவும் இரவு 10 மணியளவில் வீடு தீப்பற்றி எரிவதை அவதானித்த உறவினர்கள் அக்கரைப்பற்று மாநகரசபை தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
ஆயினும் வீட்டினுள்ளே இருந்த பெறுமதிமிக்க உடமைகள் யாவும் தீயில் எரிந்து கருகி நாசமானதுடன் வீட்டின் கூரைகளும் வெடித்து சிதறியுள்ளது.
 
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிசார் அம்பாறை விசேட தடயவியல் பொலிசாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 
 
இதேவேளை சம்பவம் தொடர்பில் உரிமையாளர் கருத்து தெரிவிக்கையில்,
 
தனது கணவர் தன்னை பிரிந்து வெளிநாடொன்றில் வசிப்பதாகவும் தானும் தன் பிள்ளைகளும் எவருடைய துணையுமின்றி மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் வேளையில் தற்போது இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தினால் சுமார் 10 இலட்சம் பெறுமதியான உடமைகள் நாசமாகியுள்ளதாகவும் இதற்கு எதிராக பொலிசார் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
 
(வாச்சிக்குடா விஷேட நிருபர் - வி.சுகிர்தகுமார், அக்கரைப்பற்று மேற்கு தினகரன் நிருபர் - எஸ்.ரி. ஜமால்தீன்)
 
 

Add new comment

Or log in with...