Friday, March 29, 2024
Home » ‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பின் ஏற்பாட்டில் கண் பார்வை இழந்த சுமார் 20,000 பேருக்கு இலவச சத்திர சிகிச்சை

‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பின் ஏற்பாட்டில் கண் பார்வை இழந்த சுமார் 20,000 பேருக்கு இலவச சத்திர சிகிச்சை

by mahesh
October 18, 2023 6:18 am 0 comment

அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் அனுசரணையுடன் கண்ணில் வெள்ளை படர்தலினால் பார்வை குன்றிய சுமார் 120 பேர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை அம்பாறை பொது வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் ஜயசிறி டயஸ் தலைமையிலான குழுவினரே மேற்படி சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

இதன் போது லண்டன் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன், இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்றி அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அம்பாறை பிரதேசத்தில் இரண்டு, மூன்று, நான்கு வருடங்களுக்கு மேல் கண் சத்திர சிகிச்சைக்காக காத்திருந்த கண் பார்வை குன்றிய நோயாளிகள் பயனடைந்தமை விசேட அம்சமாகும். இந்த கண் சத்திர சகிச்சை விடயம் தொடர்பில் லண்டன் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.

கண் பார்வை குன்றிய வயோதிப தாய் தந்தைமார்களுக்கான சத்திர சிகிச்சை அம்பாறை வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கண் சத்திர சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர் தனுஷ்க, அங்குள்ள ஊழியர்கள் பங்களிப்புடன் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சகல பயனாளிகளும் வருகை தந்திருந்தனர்.

வாழ்க்கையில் கண்பார்வை இல்லையெனில் உலகமே தெரியாது. தொழிலுக்குச் செல்ல முடியாது. கண் பார்வை இல்லை என்றால் வீட்டில் மற்றவர்களை நம்பியிருத்தல் வேண்டும். வயது சென்ற முதியவர்களுக்கு இது மிகவும் கடுமையான பிரச்சினையாக இருக்கும். இந்தக் கண் நோயினால் அதிகளவு பாதிக்கப்படுவது வசதியில்லாதவர்களாகும். பணம் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சைகளை இலகுவாகச் செய்து கொள்வார்கள்.

ஒவ்வொருவரும் தங்களுடைய வேலைகளை சுயமாகச் செய்து கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அதுவும் வசதியில்லாத குடும்பங்களில் தங்களுடைய தாய், தந்தையர்களை பிள்ளைகளே கவனிக்காமல் விட்டு விடுவார்கள். பிள்ளைகள் ஒரு மூளையில் இரு என்று சொல்லி விட்டுச் சென்று விடுவார்கள். ஆதலால் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையிலும் இச்சேவையை செய்து வருகின்றோம்.

முதலில் மன்னார் வைத்தியசாலையில் மேற்கொண்டோம். அப்பொழுது மாத்தறை வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய டயஸ் ஜயஸ்ரீ தலைமையிலான குழுவினர்கள் அங்கு வருகை தந்து சிகிச்சையினை மேற்கொண்டனர். அதன் போது 100 நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை இடம்பெற்றது. அதன் பின்பு முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற இடங்களில் தொடரேச்சியாக தேவைகளைக் கருத்திற் கொண்டு செய்து வந்தோம். இந்த வேலைத் திட்டத்தைச் செய்வதற்கு உதவி தேவையாக இருந்தது. அந்த வகையில் சுகாதார அமைச்சினை நாங்கள் நாடினோம். அமைச்சின் கீழ் விசன் 20வது 20வது அமைப்பு இந்த வேலைத் திட்டத்தைச் செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவார்கள். அதற்கான நிதி உதவிகளை நாங்கள் அவர்களுக்கு வழங்குவோம். இதற்கான நிதி உதவியினை நண்பர்கள் உறவினர்கள் மூலம் சேகரித்து முதலில் நாங்கள் செய்து கொண்டு வந்தோம். இவ்வாறு செய்து கொண்டு செல்லும் வேளையில் 2016 இல் இந்த விசன் 20 வது 20 வது என்பது இடை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் நாங்கள் செய்து கொண்டிருந்த பணியை இடைநிறுத்தவில்லை. தொடர்ந்து செய்து கொண்டு சென்றோம்.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களிலுள்ள கண் நோயாளிகளை கடவத்தையிலுள்ள லயன்ஸ் கிளப் தனியார் வைத்தியசாலை, சுவநேத்தா தனியார் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்று சத்திர கிகிச்சைகளை மேற்கொண்டோம். அவர்கள் பெரியளவில் கட்டணங்கள் அறவிடவில்லை. அவர்களும் மனிதாபிமான முறையில் உதவி செய்தார்கள். முதல் நாள் இரவு சிகிச்சை முடிந்தால் மறுநாள் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு வருவோம். இரு நாள் பயணம் செல்ல வேண்டும். இது வயது சென்ற மக்களுக்கு மிகவும் கடினமாக காணப்பட்டது. அவர்களுக்கு வேறு சந்தர்ப்பங்கள் இல்லை. அப்படி இருந்தும் சனங்கள் தங்களுடைய கண்களில் சத்திர சிகிச்சை செய்து கொள்வதற்காக சந்தோசமாக வந்தார்கள்.

நான் வசிக்கின்ற லண்டனில் ‘சொலிகள’ என்ற பாடசாலை கடந்த பத்து வருடங்களாக எங்களுடைய பணியை ஊக்குவிப்பதற்காக பணம் சேகரித்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடத்திற்கு முன்வருடம் அவர்கள் 55 கிலோ மீட்டர் நடை பவனியை மேற்கொண்டு இதற்காக பணம் சேகரித்து 50,000 பவுண்ஸ் தந்தார்கள். இப்பணத்தை வைத்து கடந்த வருடம் 2200 பேருக்கு கண் சத்திர சிகிச்சையினை மேற்கொண்டோம். அக்கால கட்டம் கொரோனா தொற்றுக் காணப்பட்டமையால் அந்தந்த வைத்தியசாலைகளில் கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைத்தன. கொரோனாவால் நாடு முடக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவியது. சத்திர சிகிச்கைகளும் நடக்காமல் இருந்தன. அரசாங்க வைத்தியசாலைகளில் தேவைப்பாடுகளும் இருந்தன. அவர்களுடைய அந்தப் பணத்தை வைத்து இதனை நாங்கள் செய்து முடித்தோம்..

இந்த உதவி பற்றிய விடயங்களை மின்னஞ்சல் மூலம் உதவி வழங்கிவர்களோடு பரிமாறிக் கொள்வோம். மலேசியா நாட்டில் ஒரு செல்வந்தராக இருந்தாலும் அவருடைய பூர்விகம் யாழ்ப்பாணம். அவர் எங்களுடைய சேவைகளைப் பார்த்து அவதானித்திருந்தார். ஏனென்றால் நாங்கள் ஒருவர் உதவி செய்தால் அப்பணம் முழுவதையும் அப்பணிக்காக ஒதுக்கி விடுவோம். அதில் இருந்து செலவுக்கு என்று எடுப்பதில்லை. ஒட்டுமொத்தப் பணமும் பயனாளிகளுக்குத் தான் வழங்கிவிடுவோம். குறைந்தது பெற்றோல் செலவு கூட எடுப்பதில்லை. நாங்கள் செய்த சேவையை அவதானித்து விட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று எம்மிடம் கேட்டுவிட்டு, அவர் 50,000 அமெரிக்கா டொலர் தந்தார். அதற்கு நாங்கள் 2100 கண் சத்திர சிகிச்சை செய்தோம். இதனை இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களில் செய்தோம். கொழும்பு, யாழ்ப்பாணம், சிலாபம். உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. இந்தச் செயற்திட்டத்தைச் சீராகச் செய்தவுடன் நிதி உதவிய வழங்கிய மலேசிய நாட்டுச் செல்வந்தர் இன்னும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் தருகிறேன் என்று கூறினார். இந்த ஒரு இலட்சம் அமெரிக்கா டொலர் பணத்துடன் அவருடைய அரை இலட்சம் பணமும் அவருடைய நண்பருடைய அரை இலட்சம் பணமும் சேர்ந்து வழங்குவதாகக் கூறினார். அப்பணத்தில் 5000 க்கும் மேற்பட்டோருக்கு கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடிந்தது. இதன் பணி 2023 ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

அலாகா பவுண்டேசன் என்ற நிறுவனமே எமக்கு உதவி வருகின்றன. அவர்களுடைய பூர்வீகம் யாழ்ப்பாணம் ஆகும். அவர்கள் எமக்கு எங்களுடைய வேலைத் திட்டத்தை அவதானித்து உதவி வருகிறார்கள். இந்த வேலைத் திட்டத்தின் புகைப்படத்தை அவருக்கு அவ்வப்போது அனுப்புவேன். அதைப் பார்த்தால் நாங்கள் எவ்வளவு கடினமானவர்களுக்கு உதவி செய்கின்றோம் என்பது நன்கு தெரியும். இதைப் பார்த்து விட்டு ஒரு தடவை இயலுமான வரையிலும் இதை அதிகரிக்க முயற்சி செய்வோம் என்று கூறினார். அதன் பின்பு இரண்டரை இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்கினார். எல்லாம் மொத்தமாக மூன்றரை இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை அவர் வழங்கியுள்ளார். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் செப்டெம்பர் கடைசி வரையிலும் 14,200 கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதற்குப் பிறகு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் தந்திருக்கிறார். தற்போதைக்கு மொத்தமாக மலேசிய நாட்டுச் செல்வந்தர் நான்கரை இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கி வருகிறார். இதற்கான நிதி உதவிகளை மலேசியாவிலுள்ள அலகாவும் ஆனந்த பவுண்டேசனும் உதவி வருகின்றன. இந்த இருவரும் தான் இந்த கண் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள பாரிய பங்களிப்புக்களைச் செய்கின்றனர். அம்பாறை,

எம்பிலிப்பிட்டிய, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இன்றைய நாட்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை மட்டுமல்ல வைத்தியசாலைக்குரிய சில உபகரணங்கள் வாங்கிக் கொடுப்பதற்கான உதவிகளும் அவர்கள் புரிந்துள்ளார்கள். யாழ்ப்பாணம், சிலாபம் வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சைக்கு தேவையான இயந்திர உபகரணங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார்கள். கண் வெளிச்சத்தின் பார்வை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை அளவீடு செய்வதற்கான உபகரணங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

முதல் எட்டு மாவட்டத்தில் செய்தோம். இரண்டாம் கட்டம் 18 மாவட்டத்தில் செய்தோம். பின்னர் முன்றாம் கட்ட நடவடிக்கைகளுக்கு இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைத்தது. இப்படி படிப்படியாக வளர்ந்து இப்போது 25 மாவட்டங்களிலும் கண் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறோம். எனினும் சில வைத்தியசாலைகளுக்கு தேவையென கேட்டாலும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. ஏனென்று தெரியவில்லை. ஆனாலும், 25 வைத்தியசாலைகளில் நன்றாகச் செய்து கொண்டு செல்லுகின்றோம். அதில் மிக முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மலரவன். இலங்கையில் ஆக கூட கண் சத்திர சிகிச்சை செய்பவர் என்று குறிப்பிடலாம். அவர் ஓர் வித்தியாசமான முறையில் செய்கிறார். அவர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நோயாளிகளை மட்டும் கவனிப்பதில்லை. மன்னார் முல்லைத்தீவு, வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மக்களையும் வடக்கு எல்லைக் கிராமங்களிலுள்ள பதவிய, மதவாச்சி, கெப்பிட்டிக் கொல்லாவ போன்ற சிங்கள பகுதிகளிலுள்ள மக்களையும் அங்கு அழைத்து எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார்.

இம்மாதம் 30 திகதி முதல் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி வரையிலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளது. இதில் 1000 நோயாளர்கள் பயனடையவுள்ளனர். இரத்தினபுரி வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜஸ்மந்த பீரிஸ், ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் பிரேம் ஆனந்தன், வவுனியா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கிரிதரன் ஆகிய கண் வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதற்கான முழு ஏற்பாட்டினையும் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் பணக்காரர்கள் அரசாங்க வைத்தியசாலையினை எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள் உடனே தனியார் வைத்தியசாலைக்குச் சென்று சத்திர சிகிச்சையினை மேற்கொண்டு விடுவார்கள். வசதியில்லாதவர்கள் மருத்துவமனையில் பரிசோதனைகளை முடித்து விட்டு எப்பொழுது காலம் நேரம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. யார் யாருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்ற பெயர் பட்டியல் வைத்தியசாலையில் இருக்கும். எத்தனை பேருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தால் லென்ஸ் தொடக்கம் சத்திர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள், மருந்து உள்ளிட்ட அதற்குத் தேவையான அத்தனை வகைகளையும் நாங்கள் அவர்களுக்கு வாங்கிக் கொடுப்போம்.

நாங்கள் செல்லும் இடங்களில் வெள்ளை படர்தல் நோய் வந்து நன்றாக அதிகரித்துள்ள நிலைமையில் உள்ளவர்களையும் காணுகின்றோம். சிலவேளை அக் கண்ணைக் காப்பாற்ற முடியாத நிலைமையும் இருக்கிறது. மிக நீண்ட காலம் தாமதித்தவர்களுடைய கண்களை சத்திர சிகிச்சை செய்தால் அதற்குரிய பலன் கிடைக்காது.

யாழ்ப்பாணத்தில் வடமராட்சிக் கிழக்குப் பகுதியில் கடற்கரையோரக் கிராமங்களும் மேற்குப் பக்கம் தீவுப் பிரதேசங்கள் அடங்கும். இப்பிரதேசங்களில் இருந்து நோயாளிகள் வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதில்லை. காரணம் மிக நீண்ட தூரம் பிரயாணச் செலவு என்பதால் யாழ்ப்பாணம் வருவதில்லை. நோய் என்றாலும் அவற்றை வைத்தியசாலைக்கு வந்து பரிசோதனை செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லை. இந்தப் பிரச்சினையைக் கவனத்திற் கொண்டு நாங்கள் பிராந்திய சுகாதார பணிமனையிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தோம். அந்த வகையில் அவர்களுடைய ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை முடியும் தருணத்தில் உள்ளன. இதன்போது இனங்காணப்பட்ட கண் நோயாளிகளுக்கு தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இதனால் நிறையப்பேர் பயனடைந்துள்ளார்கள். இவை போன்று ஏனைய மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. இது கண்டிப்பாக இடம்பெற வேண்டும். இதன் மூலம் கண் பார்வை குன்றிய மக்கள் மீளவும் தம் கண் பார்வைகளைப் பெற்று இவ்வுலகின் வண்ணக் காட்சிகளையும் தம் தொழிலையும் தம் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது அவாவாகும். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஜெகதீஸ்வரன் எங்களுடைய சேவை உயரிய பங்களிப்பை வழங்கி வருகிறார். இவர் போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலுள்ள பிராந்திய சுகாதார திணைக்களங்களும் இந்தக் கண் சத்திர சிகிச்சை விடயம் தொடர்பில் எம்மோடு சேர்ந்து செயற்பட்டால் நாடு முழுக்கவுள்ள கண் வெள்ளை படர்தல் நோயாளிகளின் பிரச்சினைக்கு முற்றாகத் தீர்வைக் காணலாம். எனவே, ஏனைய மாவட்டங்களிலுள்ள பிராந்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் எங்களோடு தொடர்பினைக் கொள்ள வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT