200 மீற்றர் ஓட்டத்தில் துருக்கி வீரருக்கு தங்கம் | தினகரன்

200 மீற்றர் ஓட்டத்தில் துருக்கி வீரருக்கு தங்கம்

லண்டனில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் துருக்கி வீரர் தங்க பதக்கம் வென்றார்.

16-வது உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது.

இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டம் நடந்தது.

இதில் நட்சத்திர வீரர் உசேன் போல்ட் (ஜமைக்கா) பங்கேற்கவில்லை. 400 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தென் ஆபிரிக்க வீரர் வான் நீக்கெர்க் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துருக்கி வீரர் ரமில் குல்லியெவ் பந்தய தூரத்தை 20.09 வினாடியில் கடந்து தங்க பதக்கத்தை பெற்றார்.

தென் ஆபிரிக்க வீரர் வான் நீக்கெர்க் (20.11 வினாடி). 2-வது இடத்தையும், டிரினிடாட்-டொபாக்கோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (20.11) 3-வது இடத்தையும் பிடித்தார்.

பெண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோரி கார்டர் 53.07 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

2-வது இடத்தை அமெரிக்காவின் தாலிஹ முகமத் (53.50), 3-வது இடத்தை ஜமைக்கா வீராங்கனை டெரசி (53.74) பிடித்தார். 


Add new comment

Or log in with...