கவிஞர் இக்பாலின் இலக்கியச் சொத்து எதிர்கால பரம்பரைக்கு பயன்பட வேண்டும் | தினகரன்

கவிஞர் இக்பாலின் இலக்கியச் சொத்து எதிர்கால பரம்பரைக்கு பயன்பட வேண்டும்

‘ஆய்வுகள் திறன் ஆய்வுகள்’ என்பது இறுதியாக வெளிவந்த கவிஞர் ஏ. இக்பாலின் நூலாகும். அவரது பன்முக நூல் வரிசையில் இது குறிப்பிடத்தக்கதொன்றாகும். ஆய்வரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டவையும், பத்திரிகைகளுக்கு எழுதப்பட்டவையுமான கட்டுரைகள் இதில் அடக்கம். சர்ச்சைக்குரிய பல்வேறு விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

சர்ச்சைக்குரிய விடயங்களைப் பேசுவதும் எழுதுவதும் இவரது தனிச்சிறப்பாகும். அவை அசட்டு தைரியத்தாலோ, உணர்ச்சிவசப்படுவதாலோ வெளிப்படுபவை அல்ல. அதற்கான ஆதாரங்கள் அவர் கைசவமிருக்கும். ஏ. இக்பால் ஒரு நடமாடும் தகவல் களஞ்சியம் என்பது அங்கே வெளிப்படும்.

ஆதம்லெப்பை இக்பால் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ரிபாயா ஆசிரியையை திருமணம் செய்ததன் மூலம் தர்கா நகரைத் தனது வசிப்பிடமாக 1960 முற்கூற்றில் மாற்றிக்கொண்டார். 04-08-2017ல் தனது இறுதி மூச்சை விடும்வரை தொடர்ந்து அங்கேயே வாழ்ந்து வந்தார்.

பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலக்கிய ரீதியாக தென்பிராந்தியமென்று அடையாளப்படுத்திய, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான வரவென்று இக்பால் பேருவளையில் கால்பதித்ததை எடுத்துக் கொள்வதில் தப்பில்லை.

தென்னிலங்கையில் இஸ்லாமிய இலக்கியமென்று ஒரு சாராரும், ஆக்க இலக்கிய ஆற்றலிருந்தும் அதுபற்றித் தெளிவில்லாத இன்னொரு சாராரும் குழப்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவரது வரவு சாத்தியமாகிற்று. முற்போக்கு எழுத்தாளர் சங்க அக்கரைப்பற்றுக் கிளைச் செயலாளராக இயங்கியும், கருத்து மோதல்களில் பங்கேற்றும், இலக்கிய மகாநாடுகளில் பங்கு கொண்டும், பெரும் இலக்கியக்காரர்களுடன் நட்பு வைத்தும், இளம் வயதிலேயே நன்கு பக்குவப்பட்டிருந்தார். அதனைப் பிரயோகிக்கும் வாய்ப்பு இப்பகுதியிலேயே அவருக்கு கிட்டியது.

மொழித்தினம், இலக்கிய கருத்தரங்கு வெளியீட்டு விழா, பயிற்சிப் பட்டறை என்று அவரது பங்களிப்பும் பணியும் வழிப்படுத்தலும் இடையறாது இடம்பெற்று வந்தன. களுத்துறை மாவட்டத்தில் அவர் இலக்கியத்தின் பெயரால் கால்வைக்காத ஊர்கள், பாடசாலைகள் இல்லையென்றே சொல்ல வேண்டும். திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தோடு இவர் கொண்டிருந்த தொடர்பு மிக உச்சமானது.

மேற்குறித்த செயற்பாடுகளுக்கு ஏ. இக்பால் ஓர் ஆசிரியராக இருந்தமை சாதகமாக அமைந்தது எனலாம். பின்நாளில் ஆசிரிய கலாசாலை, கல்வியியற் கல்லூரிகளிலும் விரிவுரையாளராக சேவையாற்றினார். இவரது கவிதைகள் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. மட்டுமன்றி, தமிழ் மொழி.... இலக்கியம்... இஸ்லாம் போன்ற பாடநூல் எழுத்தாளராகவும், ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இவரது சேவையை அவ்வப்போது கல்வி அமைச்சு பெற்றுவந்துள்ளது.

கவிஞர் ஏ. இக்பாலின் முதலாவது நூல் முஸ்லிம் கலைச்சுடர் மணிகள் என்பதாகும். ஒவ்வொரு வகையிலும் கல்விக்குத் தொண்டாற்றி சமூக விழிப்புணர்வூட்டிய பலரை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

அதன் தூண்டுதலால் அறிஞர் சித்திலெப்பை பற்றி விரிவாக ஆராய முற்பட்டார். அதுவே மறுமலர்ச்சித் தந்தையாக வடிவம் பெற்றது.

கல்வித் துறை சார்ந்த பலரின் கண்களைத் திறக்க வைத்த நூலென்றே அதனைச் சொல்ல வெண்டும். பல இளம் ஆய்வாளர்கள் அதன் மூலம் வெளிப்பட்டு விரிவான தளத்திற்கு சித்திலெவ்வையை இட்டுச் சென்றனர்.

கல்வியை முன்னெடுப்பதில் ஆசிரியர்களின் பணி மகத்தானது. கல்விச் சேவையென்பது உள்ளத்திலிருந்து பூத்து வர வேண்டியதே. இதுவே அவரது அடுத்த இலக்காகி ‘ஆசிரியத் தந்தை ஐ. எல். எம். மஷ்ஹுர்’ நூலாகியது.

ஒவ்வொரு நூலின் பின்னாலும் ஒவ்வொரு சமூக நோக்கும் இருப்பது தெளிவானது. இன்னும் நூலாக்கப்பட வேண்டிய அவரது ஆக்கங்கள் நிறைய இருப்பதாகத் தெரிகிறது. தான் கற்பித்த பதினான்கு பாடசாலை அனுபவங்களையும் உள்ளடக்கி ‘ஓர் ஆசிரியர் பாடம் படிக்கிறார்’ என்று எழுதியுள்ளதாகவும் அது தனக்குப் பின்னரே வெளிவர வேண்டுமென்று அவ்வப்போது குறிப்பிடுவதையும் நாம் மறந்துவிட முடியாது. அவரே தயாரித்து வைத்த மேலும் சில பிரதிகளும் இருக்கலாம். கடந்த இரண்டு வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததால். சரியாக அவற்றை ஒழுங்குபடுத்திக் கொள்ள முடியாத நிலையிலேயே காணப்பட்டார்.

கவிஞர் இக்பால் ஒரு சிறந்த வாசகன். இரவில் வாசகனாக அவர் ஒரு நாளும் இருந்ததில்லை.

தேர்ந்த புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி பாதுகாத்து வந்தார். எழுத்தாளர்களிடமிருந்து நூல்களை அன்பளிப்பாகப் பெற அவர் விரும்பவில்லை. அன்பளிப்புக் கொடுத்து ஊக்கப்படுத்துவதையே அவர் விரும்பினார்.

இவ்வாறு அவர் சேகரித்த புத்தகங்களை ஒரு நூலகமாகவே அவர் வீட்டில் வைத்திருந்தார். ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டிருந்த இந்த விடயத்தை இலக்கிய உலகம் நன்கு அறிந்து வைத்திருந்தது.

உயர் கல்வித் தேவைக்காக, ஆய்வுத் தேவைக்காக யார் யாராவது அவரை வீடு தேடி வந்து கொண்டேயிருப்பார்கள். ஏடுகளில் தேடுவது மாத்திரமின்றி, அது சம்பந்தமாக அவரிடமும் அறிந்து கொள்ள முடிவதால் வருவோர்க்கு மேலதிக அனுகூலம் கிட்டுயது.

இக்பால் ஸேர் இன்று எங்கள் மத்தியில் இல்லை. ஆனால் அவர் தேடி வைத்த சொத்து இருக்கின்றது. ஆம்.... ஆறாயிரத்திற்கு மேற்பட்ட நூல்கள்... இந்திய தரமான சஞ்சிகைகள்... சிற்றிதழ்கள்.... பத்திரிகை நறுக்குகள்....

இந்தப் புமைச் சொத்தை அவரது குடும்பத்தவர்கள் பகிர்ந்துகொள்ளப் போவதில்லை. அதற்காக சண்டை பிடிக்கப் போவதுமில்லை.

எனவே உரியவர்கள் உரிய வேளையில் பயன்பெற வழி செய்ய வேண்டும். பயனாளிகள் இன்று மட்டுமல்ல, நாளையும்.... அதற்கு அப்பாலும் உருவாகுவார்கள். இதற்காக தெளிவான உறுதியான ஒழுங்கு செய்யப்படுமானால், அது ‘சதகதுல் ஜாரியா’வாக அமைந்து அன்னாருக்கு நன்மை சேர்க்குமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

குடும்பத்தவர்களும், அவர்களது இலக்கிய சகாக்களும், நெருங்கிய நண்பர்களும் ஆமோதித்து தகுந்ததொரு நடைமுறையை மேற்கொள்ள அதிக காலம் தாமதிக்க வேண்டியதில்லை.

கவிஞர் ஏ. இக்பாலின் மொழி- இலக்கிய சமூகப் பங்களிப்பு பற்றி யார் சொன்னாலும், சொன்னவை சிலவாகவும் சொல்லாதவை பலவாகவுமே இருக்கும். அவர் பணி மிக மிக உச்சமானது.

தமிழ் இலக்கிய உலகில் கவிஞர் ஏ. இக்பால, இடை நிரப்ப முடியாத ஆளுமையாக என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

திக்குவல்லை கமால்


Add new comment

Or log in with...