கூட்டு எதிரணியின் செயல்: சிறப்புரிமை குழுவுக்கு சமர்ப்பிப்பு | தினகரன்

கூட்டு எதிரணியின் செயல்: சிறப்புரிமை குழுவுக்கு சமர்ப்பிப்பு

எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் சபாநாயகரின் ஆசனம் மற்றும் ஜனாதிபதியின் ஆசனங்களில் அமர்ந்தமை தொடர்பில் சிறப்புரிமைக் குழுவில் ஆற்றுப்படுத்தி ஆராயப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சம்பவம் இடம்பெற்ற சமயம் சபைக்குள் செங்கோல் இருந்ததாகவும், இவற்றை வீடியோ  ஒளிப்பதிவுகள் மூலம் பார்வையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய தினம் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பிய பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா, கடந்த 28ஆம் திகதி எதிரணி எம்.பியான பிரியங்கர ஜயரட்ன சபாநாயகர் ஆசனத்திலும், பிரசன்ன ரணதுங்க ஆளும் கட்சி பக்கத்தில் உள்ள ஜனாதிபதியின் ஆசனத்திலும் அமர்ந்துள்ளனர். மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி பாராளுமன்ற செயலாளருக்கான ஆசனத்தில் அமர்ந்து சபையை கூட்டுவதற்கான கோரம் மணியை ஒலிக்கச் செய்திருந்தார். இவர்கள் பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதிக்கச் செய்யும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத்தின் தரத்தை குறைக்க வேண்டும் என்பதற்காக குழுவாக இணைந்து அவ்வாறு நடந்துகொண்டதாக அன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த ரஞ்சித் சொய்சா எம்.பி கூறியிருந்தார். இந்த நிலைமை மிகவும் மோசமானது. பாராளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

தினேஷ் குணவர்த்தன எம்.பி,

சபையில் செங்கோல் இல்லாத வேளையில் நடந்த சம்பவம் குறித்து சிறப்புரிமைப் பிரச்சினை எழுப்ப முடியாது என்றார். எனினும், சம்பவம் நடைபெற்றபோது சபையில் செங்கோல் இருந்ததாகவும், பாராளுமன்ற அதிகாரிகள் அதனைக் கையில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்ட சபாநாயகர், இது குறித்த வீடியோ ஔிப்பதிவு காட்சிகளைப் பார்வையிட்டிருப்பதாகக் கூறினார். இருந்த போதும் சம்பவம் நடைபெற்றபோது செங்கோல் இருக்கவில்லையென எதிரணியினர் கூச்சலிட்டனர்.

மகேஸ்வரன் பிரசாத் 

 


Add new comment

Or log in with...