மனிதனுக்கு தற்காப்பு அல்ல தன்மானம் தான் முக்கியம் | தினகரன்

மனிதனுக்கு தற்காப்பு அல்ல தன்மானம் தான் முக்கியம்

மனிதனுக்கு தற்காப்பு முக்கியம் அல்ல, தன்மானம் தான் முக்கியம் என்று முரசொலி பவள விழாவில், நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

‘முரசொலி’ நாளிதழின் பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

விழாவில், ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், நடிகர் கமல்ஹாசன், ‘தினத்தந்தி’ தலைமை பொதுமேலாளர்(நிர்வாகம்) ஆர்.சந்திரன், கவிஞர் வைரமுத்து, ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ‘தினமலர்’ ஆசிரியர் ரமேஷ், ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆசிரியர் பகவான் சிங், ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ ஆசிரியர் அருண்ராம், ‘தினகரன்’ செய்தி ஆசிரியர் மனோஜ் குமார், ‘நக்கீரன்’ கோபால் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

‘முரசொலி’ ஆசிரியர் முர சொலி செல்வம் வரவேற்று பேசி னார். நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:–

நான் வயது வந்தது முதல் கருணாநிதியின் ரசிகனாக இருந்து வந்திருக்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வருகிறாரா? என்று கேட்டேன். அவர் வருகிறார், வந்து பார்வையாளர் இடத்தில் அமர்கிறார் என்று சொன்னார்கள். ரஜினிகாந்தும் மேடைக்கு வந்தால், அவர் கையை பிடித்துக்கொண்டு நானும் நின்றுகொள்ளலாம், வம்பில் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்று நினைத்தேன்.

விழாவுக்கான அழைப்பிதழை கொடுத்துவிட்டு சென்றதும், கண்ணாடியை பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன். அப்போது ‘அடேய் முட்டாள் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழக்கிறாய்.. இந்த விழா எப்படிப்பட்ட விழா என்பதை முதலில் புரிந்துகொள்’ என்று தோன்றியது.

தற்காப்பு முக்கியம் இல்லை, தன்மானம் தான் முக்கியம். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இந்த மேடையில் வீற்றிருக்கும் பெரிய பத்திரிகை ஆசிரியர்களுடன், பாதியில் பத்திரிகை நடத்தமுடியாமல் பாதியில் நிறுத்திய கடைநிலை பத்திரிகை ஆசிரியராக இந்த மேடையில் அமரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இது மாபெரும் வாய்ப்பு, அவர்களுடன் அமர தகுதியானவனா? என்பதை யோசித்து பார்க்காமல் வாய்ப்பை பறித்துக்கொண்டேன்.

அந்த விழாவுக்கு(முரசொலி பவள விழா) சென்று கழகத்தில்(தி.மு.க.) சேர்கிறீர்களா? என என்னை கேட்கிறார்கள். சேர்வதாக இருந்தால் 1983–ல் கருணாநிதி அனுப்பிய ஒரு ‘டெலிகிராம்’ எனக்கு வந்து சேர்ந்தது. அது ஓரு கேள்வி. அந்த பெரும்தன்மையை நான் இன்றும், என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் ஏன் தி.மு.க.வில் சேரக்கூடாது? அந்த ‘டெலிகிராமை’ வெளியில் காட்டவும் தைரியம் இல்லை. பதில் சொல்லவும் தைரியம் இல்லை. அதை மடித்து உள்ளே வைத்துவிட்டேன். பதில் இன்று வரை சொல்லவில்லை.

அவரது பெருந்தன்மை என்னவென்றால் மறுபடியும் அவர் கேட்கவில்லை. அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரித்தான தன்மை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். ஒருவரை ஒருவர் விமர்சித்தும், கிண்டல் அடித்தும் பேசியவர்கள் எல்லாம் இந்த மேடையில் இருக்கும் இந்த ஒரு புதிய கலாசாரத்தை நானும் பயில இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

‘ஆனந்த விகடன்’ சீனிவாசன் பேசும்போது எங்கள் பத்திரிகை பற்றி ‘பூநூல் பத்திரிகை என்றும், பாரம்பரிய பத்தரிகை என்றும் சொல்லி கிண்டல் அடித்திருக்கிறார்கள்’ என்று சொன்னார். அவரே சந்தோ‌ஷமாக இந்த விழாவுக்கு வந்திருக்கும் போது, பூநூலே இல்லாத கலைஞானி இந்த விழாவுக்கு வருவதில் என்ன ஆச்சரியம்? ஏன் இப்படி பதறுகிறீர்கள்? இது ஒரு பத்திரிகையின் வெற்றி விழா.


Add new comment

Or log in with...