நவம்பரில் இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா | தினகரன்

நவம்பரில் இந்தியா வருகிறார் டிரம்ப் மகள் இவாங்கா

ஐதராபாத்தில் எதிா்வரும் நவம்பர் மாதம் நடக்கும் தொழில் முனைவோருக்கான மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு தலைவராக, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா இந்தியா வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் நிதி ஆயோக் குழு சார்பில் உலக தொழில் முனைவோருக்கான மாநாடு, எதிர்வரும் நவம்பர் மாதம் 28, 30ம் திகதிகளில் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த மாநாடு மூலம் இந்தியாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய தொழில் வாய்ப்புகளை பெறுவதற்காக நடத்தப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போது தொழில் முனைவோருக்கான அமெரிக்க பிரதிநிதி குழுவிற்கு, அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஐதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் அமெரிக்க பிரதிநிதி குழு சார்பில் தலைவராக இவாங்கா பங்கேற்பதை எதிர்பார்ப்பதாக பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இனி இந்தியாவிற்கான தொழிற்முனைவோர் அமெரிக்க குழுவிற்கு இவாங்கா தலைமை வகிப்பதாகவும், உலகளவில் பெண்கள் தொழில் முனைவதற்கு ஆதரவளிப்பதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஐதராபாத்தில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க இவாங்கா டிரம்ப் வரவிருப்பது உறுதியாகியுள்ளது. எனினும் அவர் பங்கேற்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. 


Add new comment

Or log in with...