துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்பு | தினகரன்

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவியேற்பு

நாட்டின் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

துணை ஜனாதிபதியாக இருந்த ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் நேற்று முன்தினத்துடன் (ஓகஸ்ட் 10) முடிவடைந்தது. இதனையடுத்து நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தியை விட 244 வாக்குகள் அதிகம் பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார்.

தொடர்ந்து, அவர் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை 10 மணியளவில் நடந்த விழாவில், அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வெங்கையா நாயுடு, டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


Add new comment

Or log in with...