நல்லாட்சியில் புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பம் | தினகரன்

நல்லாட்சியில் புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பம்

நல்லாட்சி அரசாங்கத்துக்கு களங்கம் ஏற்பட இடமளிக்காத வகையில் வெளிவிகார அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ள ரவி கருணாநாயக்க நல்லதொரு முன்மாதிரியைக் காட்டியிருக்கிறார். தான் குற்றவாளியல்ல. ஆனாலும், என்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலையடையும் வரை நான் பதவி துறக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.

உண்மையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது போன்று புதியதொரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது வரவேற்கக் கூடியதாகும். ஜனநாயக நீரோட்டத்தில் எந்தச் செயற்பாடாக இருப்பினும் அவற்றில் வெளிப்படைத் தன்மை இருக்கவேண்டும். அத்தகையதொரு புதிய கலாசாரமே இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டும், அரசைக் கவிழ்ப்பதற்கு சதிகாரக் கும்பல் எடுக்கும் முயற்சிகளுக்கு வழியேற்பட இடமளிக்காத வகையிலுமே அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை துறந்துள்ளார். ரவி பதவி துறந்ததன் மூலம் அவரை குற்றவாளியாக அடையாளப்படுத்த முடியாது. தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளுக்கு குந்தகம் ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் காரணமாகவே தற்காலிகமாக பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

அதேநேரம், தான் நிரபராதி என்பது நிரூபணமாகும் வரை பொறுமையுடன் காத்திருக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனக்கெதிராக குழிபறித்தவர்களை விரைவில் அம்பலப்படுத்தவிருப்பதாகவும் ரவி கூறி இருக்கிறார். ஒரு கூட்டம் திட்டமிட்டு தனக்கெதிராகச் செயற்பட்டு வருவதாகவும் உண்மைகளை மிக விரைவில் மக்கள் அறிந்து கொள்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வீடொன்றைப் பெற்றமை தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள ரவி கருணாநாயக்க அதன் விசாரணைகளுக்கு அரசியல் அழுத்தங்கள் வரக்கூடாது என்பதற்காக தனது பதவியை இராஜிமாச் செய்திருக்கிறார். அவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வதற்கு முன்னர் பிரதமருடன் ஜனாதிபதியைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியதன் பின்னரே இராஜினாமாச் செய்யும் தீர்மானத்தை எடுத்திருக்கிறார். அரசுக்கோ, தான் சார்ந்த கட்சிக்கோ அபகீர்த்தி ஏற்படாதிருக்கும் பொருட்டே அவர் இந்த நல்லெண்ண முடிவை எடுத்திருக்கிறார்.

ரவியின் இந்த இராஜினாமா பொதுமக்கள் கருத்துக்கு யாராக இருப்பினும் செவிசாய்த்தாக வேண்டும் என்ற கட்டாயத்தையே உணர்த்தியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் ஒரு சின்னச் சம்பவம் நடந்தால் கூட அதற்குப் பொறுப்பான அமைச்சர் இராஜினாமாச் செய்யும் சம்பிரதாயம் காணப்படுகிறது. அத்தகைய சம்பிரதாயம் இப்போது இலங்கையிலும் உதயமாகிவிட்டது.

ரவி கருணாநாயக்கவின் இராஜினாமா தொடர்பில் பலரும் பலவிதமாக விமர்சிக்கலாம். ஆனால், அவர் எடுத்த முடிவு ஜனநாயக அரசியல் பண்பில் வரவேற்கப்படக்கூடியதொன்றாகும். அவர் எமக்கு நல்லதொரு முன்மாதிரியைக் காட்டியிருக்கிறார். இதுவொரு புதிய அரசியல் கலாசாரமாகும். விசாரணை முடிவின் பின்னர் முக்கியமான பல விடயங்களை அம்பலப்படுத்தப் போவதாக அவரே பாராளுமன்றத்தில் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார். இது முக்கியமான சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டிருப்பது போன்று குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையில் ரவி கருணாநாயக்க தனது அமைச்சுப் பதவியை துறந்திருப்பதானது அவரது தைரியத்தையே காட்டுகின்றது. நல்லாட்சிக்காக இவ்வாறானதொரு முன்னுதாரணத்தை அவர் செய்திருக்கின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இது இரண்டாவது பதவி துறப்பாகும். ஆனால், கடந்த ஆட்சியில் பலருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் எவருமே பதவி துறக்கவில்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அச்சுறுத்தல்களைக் கூட விடுத்தனர். அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. அத்தகைய மோசமான அரசியல் கலாசாரத்துக்கு இன்று நல்லாட்சியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவின் இந்த முன்மாதிரியை பாராட்டுவதோடும், பேசிப் பேசி காலம் கடத்துவதையும் விடுத்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேண்டும். 2015 நல்லாட்சி மலர்ந்த பின்னர் கடந்த ஆட்சியில் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முடக்கப்பட்டிருப்பதானது மக்களின் எதிர்ப்புகளை போக்கி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறிவைக்கின்றோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...