அமெரிக்க தீவு மீதான வட கொரிய தாக்குதல் திட்டம் விரைவில் தயார் | தினகரன்

அமெரிக்க தீவு மீதான வட கொரிய தாக்குதல் திட்டம் விரைவில் தயார்

அமெரிக்க நிலப்பகுதியான குவாம் மீது நான்கு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தும் திட்டம் விரைவில் தயாராகும் என்று வட கொரியா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான சொற்போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கிம் ஜொங் உன் திட்டத்திற்கு அனுமதி அளித்தால் ஹவாசொங்–12 ரொக்கெட்டுகள் ஜப்பான் நிலத்தை கடந்து கடல் வழியாக சுமார் 30 கிலோமீற்றர்கள் தாவி குவாமை அடையும் என்று வட கொரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

வட கொரியாவின் நடவடிக்கைகள் அந்த அரசின் முடிவாக இருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. வட கொரியாவுக்கு எதிராக எந்த ஒரு யுத்தத்திலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அதிக பலம் கொண்டதாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மட்டிஸ் குறிப்பிட்டார்.

ஜிம் மட்டிஸ் தற்போது குவாம் தீவில் இருக்கிறார். அவர் இதுபற்றி கூறும்போது, “வடகொரியாவின் அச்சுறுத்தல் சாதாரணமானது தான். உடனடி தாக்குதல் நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அமெரிக்கா மக்கள் நிம்மதியாக தூங்கலாம்” என்று கூறியுள்ளார்.

சுமார் 163,000 மக்கள் வசிக்கும், அமெரிக்காவின் இராணுவ தளம் உள்ள பசிபிக் தீவான குவாமுக்கு ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தும் திட்டத்தை வட கொரியா கடந்த புதனன்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரச ஊடகம் வெளியிட்ட அறிவிப்பில், ஓக்ஸ்ட் நடுப் பகுதியில் இந்த திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு ஒப்புதலுக்காக தலைவர் கிம் ஜொங் உன்னிடம் அனுப்பப்படும் என்று குறிப்பிடப்பட்டது.

“கொரிய மக்களின் இராணுவம் ஏவும் ஹவாசொங்–12 ரொக்கெட்டுகள் ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா மற்றும் கொய்சி பிராந்தியத்திற்கு மேலால் தாண்டிச் செல்லும்” என்று வட கொரிய அரச ஊடகச் சேவையான கே.சி.என்.ஏவுக்கு இராணுவ தளபதி ஜெனரல் கிம் ரக் கியோம் குறிப்பிட்டுள்ளார்.

“அவை 1,065 வினாடிக்கு 3,356 கிலோமீற்றர்கள் பறந்து குவாமில் இருந்து 30–40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தண்ணீரை தாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். வட கொரியா உள்நாட்டில் தயாரிக்கும் ஹவாசொங் ஏவுகணைகள் நடுத்தர மற்றும் நீண்டதூர ஆயுதங்களாகும்.

வட கொரியாவின் எச்சரிக்கைகள் குறித்து குவாம் ஆளுநர் நேற்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிடும்போது, வட கொரியா கடந்த காலங்களில் எதிர்பாராத ஏவுகணைகளை வீசி, பொதுவாக ஊகிக்க முடியாத ஒன்றாக இருக்க விரும்புகிறது என்றார்.

“எந்த ஒரு தவறான புரிதலையும் தவிர்ப்பதற்கு அந்த நாடு இப்போது தாக்குதல் பற்றி தந்தி அனுப்புகிறது. இது பயத்தால் வரும் நிலை என்றே நான் நினைக்கிறேன்” என்று ஆளுநர் எட்டி கல்வோ குறிப்பிட்டார்.

குவாம் தீவு வட கொரியாவில் இருந்த 3,400 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. இங்குள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் 6000 அமெரிக்க துருப்புகள் நிலைகொண்டிருப்பதோடு தந்திரோபாயம் கொண்ட போர் விமானங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே வட கொரியாவின் நட்பு நாடான சீனா இரு நாட்டு தலைவர்களையும் அமைதி காக்கும்படியும், ஆத்திரமூட்டும் தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் வடகொரியாவின் நடவடிக்கையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள் அதன் பிராந்திய நாடுகள் மற்றும் உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

எங்களால் வட கொரியாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பொறுத்துக் கொள்ள முடியாது. ஜப்பான் சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்றார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையில் கூறியதாவது, “வட கொரியா அமெரிக்காவை அச்சுறுத்தும் நடவடடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.

இல்லை என்றால் அவர்கள் இதுவரை இந்த உலகம் காணாத விளைவைச் சந்திப்பார்கள்” என்றார். 


Add new comment

Or log in with...