மட்டக்களப்பு மாவட்டம் 338 புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் | தினகரன்

மட்டக்களப்பு மாவட்டம் 338 புள்ளிகளைப் பெற்று முதலாமிடம்

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளின் பரா விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்ப மாவட்டம் 338 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகளின் பரா விளையாட்டுப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்(5,6.8.2017) சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நடைபெற்றது.

மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாற்றுத்திறாணிகள் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் வழிகாட்டலில் இந்த விளையாட்டு போட்டி நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் வைபவத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைட்ணம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் ஏ.தவராஜா உட்பட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் மற்றும் சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர்கள் சமூக சேவை திணைக்களத்தின் பிரதேச உத்தியோகத்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்ப மாவட்டம் 338 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், 96 புள்ளிகளை பெற்று திருகோணமலை மாவட்டம் இரண்டாமிடத்தினையும், 42 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

இந்த விளையாட்டுப் போட்டியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் 650 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு விளையாட்டுக்கள் இடம் பெற்றன.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்) 


Add new comment

Or log in with...