நெருப்புடன் விளையாடுகிறது வடகொரியா! | தினகரன்

நெருப்புடன் விளையாடுகிறது வடகொரியா!

அமெரிக்காவை வட கொரியா மிரட்டுவது தொடர்ந்தால், உலகம் இதுவரை காணாத அளவு சக்தி கொண்ட தங்களது 'கோப நெருப்பை' வட கொரியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதத் தாக்குதலைக் குறிப்பிட்டே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதப்படும் நிலையில், அவரது இந்தப் பேச்சு குறித்து சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வரும் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

எனினும், தென் கொரியாவுடன் இணைந்து தங்கள் நாட்டின் மீது படையெடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகக் குற்றம் சாட்டி வரும் வட கொரியா, அணு ஆயுதம் தாங்கி அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை அண்மையில் வெற்றிகரமாகப் பரிசோதித்தது.

மேலும், ஏவுகணைகளின் முனைகளில் அணுஆயுதம் பொருத்தும் அளவுக்கு வட கொரியாவின் ஏவுகணைகளை அந்த நாட்டு விஞ்ஞானிகள் சிறிதாக வடிமைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தச் சூழலில், வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மேற்கு பசுபிக் கடலிலுள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு அருகே தனது ஹுவாஸாங்-_1 ஏவுகணைகளை ஏவி சோதிக்கப் போவதாக வட கொரியா கூறியது.

இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியூ ஜெர்ஸி நகரிலுள்ள தனது சுற்றுலா மாளிகையில் வைத்துக் கூறியதாவது:

அமெரிக்காவை மிரட்டுவதை வட கொரியா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அமெரிக்காவை மிரட்டினால், வட கொரியா அமெரிக்காவின் 'கோப நெருப்பின்' உக்கிரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்தக் 'கோப நெருப்பு' எவ்வளவு சக்தி கொண்டதாக இருக்கும் என்றால், அந்த சக்தியை இதுவரை உலகமே பார்த்திராத அளவுக்கு இருக்கும்."

இவ்வாறு கூறினார் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்தப் பேச்சுக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களும், தன்னார்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வட கொரியாவை இத்தனை ஆண்டு காலம் தனிமைப்படுத்தினாலும் அந்த நாடு அணு ஆயுதம் தயாரிப்பதையோ, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை தயாரிப்பதையோ தடுக்க முடியவில்லை. வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

டொனால்ட் ட்ரம்பின் பேச்சு குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மிகவும் உணர்ச்சிபூர்வமானதாகும். இந்த விவகாரத்தில் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறிய வார்த்தைகளோ, செயல்களோ கூட மிகப் பெரிய போருக்கு வித்திட்டு விடும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரம்பின் பேச்சு குறித்து ஜெர்மனியும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

வட கொரியா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வறிய நிலையில் உள்ள ஆனால், அதிகமாக இராணுவ வலிமை கொண்ட நாடு. "உயிர் பிழைப்பது மட்டுமே அதன் தலைமையின் ஒற்றை அத்தியாவசிய இலக்கு" என்கிறார் பி.பி.சி செய்தியாளர் ஜோனாதன் மார்குஸ்.

தமது ஆட்சிக்கான இறுதி காப்பீட்டுக் கொள்கை போல, அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களில் மிகப் பெரிய வளங்களை வட கொரியா குவித்து வைத்துள்ளது. அதன் அணுசக்தி திறன்கள் எவ்வகையிலாவது பயன்படுத்தப்பட்டால் அது பேரழிவாகலாம். குறிப்பாக, வடகொரியாவுக்கே அது பாதகமாக அமையலாம். தற்போது தொடரும் மோதலில், வடகொரியா அரசு பிழைக்க முடியாது.

பீரங்கிகள் மற்றும் ​ெராக்கெட் படைகள் மட்டுமின்றி இரசாயன ஆயுதங்களையும் வடகொரியா விரிவாக வைத்துள்ளது. அந்நாட்டிடம் நச்சுயிரி ஆயுதங்களும் இருக்கலாம். இணைய தாக்குதல்களை நடத்தும் திறனையும் அந்நாடு மேம்படுத்தியுள்ளது. எனவே, இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் வடகொரியா ஆராயும்.

ஆனால், அமெரிக்கா அதன் ஆதரவு நாடுகளுடன் தற்போதைய நிலையில் ஏதேனும் தாக்குதலில் ஈடுப்ட்டால் அது போர் ஏற்படுவதற்கான வாய்ப்பையே அதிகரிக்கும். அத்தகைய தற்கொலை முடிவை வடகொரியாவின் பியொங்யாங் ஆட்சி எடுக்காது என்று கருதினாலும், கடந்த கால செயல்பாடுகளுக்கு முரணாக செயல்படக் கூடிய அளவுக்கு இது பகுத்தறிவற்ற ஆட்சியாக இருக்காது. ஒருவேளை தாக்குதலில் ஈடுபட்டால், அதனால் விளையும் ஆபத்துகளை பற்றியும் வடகொரியா அரசின் தலைமை அறிந்திருக்க வேண்டும்.

வடகொரியாவின் நிலையில் இருந்து பார்க்கும் போது, அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காக அணு ஆயுதத்தையும், கண்டம் விட்டு கண்டும் பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையை வைத்திருப்பது பகுத்தறிவுமிக்க செயலாகப் பார்க்கப்படுகிறது.

ஈராக் மற்றும் லிபியாவில் சர்வாதிகார அரசுகள் வீழ்வதற்குக் காரணம், அவற்றிடம் போராட ஆயுதங்களே இல்லாத நிலை இருந்தது என்று வட கொரியா வாதிடுகிறது. அமெரிக்காவுடன் நேரடியாக மோதி ஆபத்தை வரழைத்துக் கொண்டு ஆட்சியை இழப்பது சரியானதாக இருக்காது என்று வட​ெகாரியாவுக்கும் தெரியும். கொரிய தீபகற்பத்தில் எத்தகைய போர் ஏற்பட்டாலும், அதனால் வாஷிங்டனுக்கே அதிக பலன்கள் கிடைக்கும். இவ்வாறு பி.பி.சி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதுஇவ்விதமிருக்க ஜப்பானையொட்டி அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறது.

இந்நிலையில் வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததால் மேலும் ஆத்திரமடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் என்ற தீவை தாக்கத் திட்டமிட்டுள்ளது. குவாம் தீவில் தாக்குதல் நடத்துவதற்காக ஹவாசாங்-12 வகையை சேர்ந்த 4 ஏவுகணைகளை தயார்படுத்துவதாகவும் இதற்கு ஜனாதிபதி கிம்ஜாங்உன் உத்தரவிட்டிருப்பதாகவும் அந்நாட்டு பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1 இலட்சத்து 63 ஆயிரம் மக்கள் வசிக்கும் குவாம் தீவை தாக்க உள்ளதாக வடகொரிய அறிவித்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், “அமெரிக்காவிற்கு எதிராக எந்த அச்சுறுத்தலையும் வடகொரியா தராமல் இருப்பது சிறந்தது.

நெருப்புடன் விளையாடினால் இதுவரை உலகம் பார்த்திராத கடுமையான பின்விளைவுகளை வடகொரியா சந்திக்க நேரிடும். இதனால் கடும் நெருக்கடியை வடகொரியா எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.

ஜப்பானையொட்டி அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் என்ற தீவு உள்ளது. குவாம் தீவு வடகொரியாவில் இருந்து 3356 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது 541 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்தத் தீவு அமெரிக்காவின் முக்கிய இராணுவ தளமாகவும் உள்ளது. தீவின் கால் பங்கு பகுதியை இராணுவ தளமாக பயன்படுத்துகின்றனர். 6 ஆயிரம் பேர் கொண்ட வலுவான விமானப்படையும் அங்கு உள்ளது.

வடகொரியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா தயாராகி விட்டது போலவே ட்ரம்பிக் பேச்சு உள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் இந்த அச்சுறுத்தலை வடகொரியா கண்டுகொள்ளவில்லை. குவாம் தீவில் தாக்குதல் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

வடகொரிய ஏவுகணைகள் இன்னும் 4 நாட்களில் தயாராகிவிடும். அதன்பிறகு எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படும் என்று இராணுவத் தளபதி கிம் ராக் கயாம் தகவல் தெரிவித்துள்ளார். எனவே வடகொரியா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் குவாம் மக்கள் உள்ளனர். அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர் ஜிம்மேட்டில் தற்போது குவாம் தீவில் இருக்கிறார். அவர் இதுபற்றிக் கூறும் போது, "வடகொரியாவின் அச்சுறுத்தல் சாதராணமானது தான். உடனடி தாக்குதல் நடத்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அமெரிக்கா மக்கள் நிம்மதியாக தூங்கலாம்" என்று கூறியுள்ளார்.

 


Add new comment

Or log in with...