அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்! | தினகரன்

அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள்!

 
போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் விதிக்கப்படும் அபராதங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
அதற்கமைய ஒரு சில பாரிய விதி மீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகை ரூபா 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
அவை,
 
- அங்கீகரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல்.
- சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவரை பணிக்கு அமர்த்துதல்
- அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதியின்றி வாகனம் செலுத்துதல்.
- மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய பின் வாகனம் செலுத்துதல்.
- கவனயீனமாக புகையிரத பாதையில் வாகனத்தை செலுத்துதல்.
 
அது தவிர, மேலும் சில போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பிலான மிகக் குறைந்தபட்ச அபராத தொகையிலும் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
அந்த வகையில்,
 
- அளவுக்கதிகமான வேகத்தில் வாகனம் செலுத்துதல்:
(குறிப்பிட்ட உயர் வேகத்திலும் பார்க்க அதிக வேகத்தில் செல்வோருக்கு அவ்விடத்திலேயே இவ்வபராதம் விதிக்கப்படும்)
 • 20% அதிக வேகம் - ரூபா 3,000
 • 20% - 30% அதிக வேகம் - ரூபா 5,000
 • 30% - 50% அதிக வேகம் - ரூபா 10,000
 • 50% இலும் அதிக வேகம் - ரூபா 15,000 
 
- இடது பக்கமாக முன்னோக்கிச் செல்லல் - ரூபா 2,000 (அவ்விடத்திலேயே அபராதம்)
- ஏனையோர் தொடர்பில் அக்கறையின்றி அல்லது பொறுப்பற்ற வகையில் கவனமின்றி வாகனம் செலுத்துதல் - ரூபா 10,000
- உரிய வயதிலும் குறைந்த வயதுடையவரால் வாகனம் செலுத்தப்படல் - ரூபா 30,000 (ஏற்கனவே ரூபா 5,000)
- மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் குறிப்பிடப்படாத ஏதேனுமொரு குற்றம் தொடர்பில், பொதுவான தண்டனையின் கீழ் அறவிடப்படும் அபராத தொகை ரூபா 2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- கையடக்க தொலைபேசி பாவனை - ரூபா 2,000
 
அது மாத்திரமன்றி பின்வரும் யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 • சாரதி புள்ளி முறையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
 • வீதி விபத்துகள் அதிகளவில் ஏற்படும் இடங்களில் CCTV கமெராக்களை நிறுவி, அதன் மூலம் பெறப்படும் தகவல்களுக்கு அமைய தவறிழைப்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
 • குறித்த இடத்தில் விதிக்கப்படும் அபராதத்தை செலுத்த, இலத்திரனியல் கொடுப்பனவு வசதியை ஏற்படுத்தும் யோசனையை விரைவில் செயற்படுத்தல்.
 • அதிவேக வீதிகள், நெடுஞ்சாலைகளில் வேக கட்டுப்பாட்டு பதாகைகளை உரிய முறையில் காட்சிப்படுத்தல்.
 • இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து தொடர்பிலான ஒன்றிணைந்த நேர அட்டவணை அல்லது பொருத்தமான திட்டமொன்றை விரைவில் செயற்படுத்தல்.
 • முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்திற்கென பயன்படுத்தப்படும் பஸ்கள் மற்றும் வேன்களை கண்காணித்து, ஒழுங்குபடுத்துவது தொடர்பிலான நிறுவனமொன்றை நிறுவுதல்.
 • பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பான வினைத்திறன் மிக்க, பொது போக்குவரத்து சேவையை நிறுவுதல்.
 • போக்குவரத்து சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஒழுங்கீனங்களை குறைப்பது தொடர்பிலும் மற்றும் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பான வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவுமாக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்துதல்.
 
வீதி விபத்துகளைத் குறைக்கும் நோக்கில், 07 போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பான குறைந்தபட்ச அபராதத் தொகையை ரூபா 25,000 ஆக அதிகரிப்பதற்கு கடந்த ஆண்டு (2016) யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், அது தொடர்பில் பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சங்கத்தினரினால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பினை கருத்திற்கொண்டு குறித்த அபராதங்களில் மேலும் மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பில் ஆராய, ஜனாதிபதியினால் குழுவொன்று அமைக்கப்பட்டதோடு, அக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய மேற்படி விதி மீறல்களுக்கான அபராத தொகையை அதிகரிப்பதற்கு போக்குவரத்து மற்றம் விவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
குறித்த அபராதம் அமுலாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
 
குறித்த விடயம் தொடர்பில் இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், எமது ஊடகவியலாளரினால் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
 

Add new comment

Or log in with...