நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை கூடுதல் ஆர்வம் | தினகரன்

நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை கூடுதல் ஆர்வம்

இலங்கையில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கலைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதீத பிரயத்தனங்களை இங்கு வருகை தந்துள்ள துருக்கி நாட்டின் முன்னாள் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் அஹமத் தாவூட் ஒக்லு வெகுவாகப் பாராட்டியுள்ளார். கடந்த மூன்று தினங்களுக்கிடையில் அவர் கலந்து கொண்ட சகல வைபவங்களிலும் இன நல்லுறவின் முக்கியத்துவத்தையே வலியுறுத்தியிருக்கிறார்.

முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம். ஏ. பாக்கீர் மாக்காரின் 20வது ஆண்டு நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக வருகை தந்துள்ள பேராசிரியர் அஹமத் தாவுட் ஒக்லு, பல்லின மக்கள் வாழும் நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதன் அவசியம் தொடர்பாகவே தனது உரைகளில் முன்னுரிமை கொடுத்து வருகின்றார். இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தம்மை வெகுவாக கவர்ந்துள்ளதாக அவர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது சிலாகித்துப் பேசியுள்ளார்.

துருக்கி நாட்டின் சிறந்த கல்விமானான அஹமட் தாவூட் ஒக்லு, அரசறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பேராசிரியராகத் திகழ்கின்றார். துருக்கி அரசியலிலும் மிகச் சிறந்து விளங்கிய ஒருவராகவே அவர் நோக்கப்படுகின்றார். மானுட நேயம் தொடர்பில் ஆழ்ந்த பற்றுக் கொண்ட இவர், பல்லின மக்கள் வாழும் அனைத்து நாடுகளினதும் புரிந்துணர்வும், நல்லிணக்கமும் தழைத்தோங்க வேண்டுமென்ற பேரவாக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

கொழும்பில் செவ்வாயன்று இடம்பெற்ற பாக்கீர் மக்கார் நினைவுப் பேருரையின் போது அவர் முன்வைத்த கருத்துக்கள் அங்கு மண்டபம் நிறைந்திருந்த மக்களது கவனத்தை ஈர்ப்பதாகவே காணப்பட்டன. இலங்கையை தான் பல் கலாசாரத்தற்கு உகந்த நாடாகக் காண்பதாகவும் அதன் பொருட்டு நிறைய உதாரணங்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல்லின மக்கள் வாழும் நாடுகளில் இலங்கையும், மலேசியாவும் நல்லிணக்க, நல்லுறவைப் பேணுவதில் முன்னுதாரணமாக விளங்குவதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டிருக்கிறார். பேராசிரியர் தாவுட் ஒக்லு கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்தை பீடாதிபதியை சந்தித்து உரையாடிய போது இலங்கை சகவாழ்வுக்கு உகந்த முன்னுதாரணமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

நாம் இலங்கையில் தங்கியிருக்கக் கிடைத்த இந்த நாட்கள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்களாகவே இருக்கும் என அவர் கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கிடையில் பல தொடர் சந்திப்புக்களில் பங்கேற்கக் கிடைத்தது முக்கியமாக சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி ஊடகவியலாளர்களையும், இளைஞர் குழுவினரையும் தனித்தனியே சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது சிறப்பானதாகும். அந்தச் சந்திப்புக்கள் மிக ஆரோக்கியமானதும் அறிவுபூர்வமானதாகவும் அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள், சிங்களவர்கள், தமிழர்கள், கிறிஸ்தவர்கள் என சகல இன, மதங்களைச் சேர்ந்தவர்களை சந்திக்க முடிந்தது. அவர்களால் நான் கவரப்பட்டேன். இலங்கை மிகவும் உறுதியான பல் கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது என்ற செய்தியை அவர்களுடனான சந்திப்பின் மூலம் பெற்றுக் கொள்ளக் கிடைத்ததாக அவர் பெருமிதப்பட்டார்.

உலக அரங்கில் இன்று முக்கியமாகப் பேசப்படும் நாடுகளில் முன்னுரிமை பெற்றிருக்கும் நாடாக மாறியுள்ள துருக்கி, முஸ்லிம் உலகிலும் இன்று முதன்மை நாடாக வளர்ச்சி கண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அப்படியான ஒரு நாட்டின் தலைவர் எமது நாட்டுக்கு வழங்கியுள்ள பாராட்டு மிக முக்கியமானதாகும். இதனை நாம் சாதாரணமாகப் பார்த்து விட முடியாது.

ஏனெனில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் ஒரு சூழ்நிலையில் அந்த முனைப்புக்கு வலுச்சேர்ப்பதாகவே பேராசிரியர் அஹமதின் கருத்துக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. பல் கலாசரத்துக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் இலங்கை, அந்த நிலையை மேலும் கட்டிப் பாதுகாப்பதற்கு உறுதி பூண வேண்டும் என்ற வேண்டுகோள் குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இறுகப் பிடித்து இணைந்து பயணிக்க வேண்டும். சமூக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும், இறுதியாக உலகளாவிய ரீதியிலுமாக நான்கு வழிமுறைகளை இதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனடிப்படையில் பல்கலாசாரமே சமாதானத்தின் அடிப்படை என்பதில் தான் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நான்கு வழிகளை முன்னெடுக்கப் பொருத்தமான நாடாக இலங்கையை காண்கின்றோம் என்ற துருக்கி முன்னாள் பிரதமரின் ஆலோசனைகளை சரியான முறையில் பின்பற்ற முடிந்தால் அரசாங்கத்தின் நல்லிணக்க இலக்கை வெற்றி கொள்வது இலகுவானதாக அமையலாம் என்பது திண்ணம்.


Add new comment

Or log in with...