பதவி துறந்தார் ரவி | தினகரன்

பதவி துறந்தார் ரவி

 

பெருமையுடன் பின் ஆசனத்தில் அமர்வதாக சபையில் அறிவிப்பு

* நீண்ட நேரம் உருக்கமான உரை
* குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை
* சதியின் பின்னணியில் மோசடிக்காரர்கள்
* ஐ.தே.கவை சீர் குலைக்க இடமளியோம்!
* நல்லாட்சி அரசை கவிழ்க்க அனுமதியோம்!

வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்க நேற்று இராஜினாமாச் செய்தார். பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமையின் கீழ் விசேட உரையொன்றை ஆற்றிய பின்னர் அவர் தனது பதவி விலகளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

திறைசேரி முறி விநியோக சர்ச்சையில் தொடர்புபட்டுள்ள அர்ஜுன அலோஷியசிடமிருந்து வீடொன்றை கொள்வனவு செய்ததாக அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதனை முன்னிலைப்படுத்தி அவருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையையும் கையளித்திருந்தது. இந்த நிலையிலேயே தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார். பதவியை இராஜினாமா செய்த அவர் பாராளுமன்றத்தின் பின் வரிசையில் சென்று அமர்ந்துகொண்டார்.

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் ஜனநாயக ஆட்சியைக் கலைப்பதற்கு சிலர் முன்னெடுக்கும் சதித்திட்டத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

"கவலையுடனோ அல்லது அதிர்ச்சியுடனோ நான் இந்த முடிவை எடுக்கவில்லை. பெருமையுடன் முடிவை எடுக்கின்றேன். முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக எனது பதவி விலகல் அமையும்" என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கொழும்பு மூன்றில் மொனார்க் வீட்டுத் தொகுதியில் வீடொன்றில் வசிக்கச் சென்றமை தொடர்பில் பிரச்சினை எழுந்தது. பத்தரமுல்லையில் உள்ள எனது வீட்டில் புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதால் வேறு வீடொன்றைத் தேடிவந்தோம். நயில் விஜயசூரியவின் மனைவியும் எனது மனைவியும் நண்பர்கள்.

அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குத்தகைக்குச் செல்ல விரும்பினோம். எனினும், அரசியல்வாதிகளுக்கு அவர் தனது வீட்டை குத்தகைக்கு கொடுக்க விரும்பாததால், அர்ஜூனா அலோசிஷின் நிறுவனத்துக்கு குறித்த வீட்டை குத்தகைக்கு வழங்கவும், பின்னர் அந்த வீட்டை விற்பனை செய்ய உரிமையாளர் விரும்பியதால் வீட்டைக் கொள்வனவு செய்தோம். இதற்காக செலான் வங்கியில் கடன்பெறப்பட்டிருந்தது. இதற்கான கடன் தனிப்பட்ட நிறுவனத்தின் தலைவரால் செலுத்தப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை ஒழிக்கவேண்டிய தேவை இல்லை.

மறைந்த அரசியல் தலைவர் லலித் அத்துலத் முதலியின் ஊடாகவே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். அவர் அரசியலின் ஊடாக பணமீட்டவில்லை. இருந்தபோதும் அவர் மீதும் கப்பலை விழுங்கிய லலித் என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

எனினும், காலப்போக்கில் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என்பது நிரூபனமாகின. அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தினால் நான் அரசியலுக்கு வரும்போது வர்த்தகராகவிருந்தேன். நான் அரசியலுக்குள் வந்ததன் மூலம் எனது தனிப்பட்ட சொத்துக்களை இழந்துகொண்டேனே தவிர சொத்துக்களை சேர்க்கவில்லை. சட்டவிரோதமாக வீடொன்றைப் பெற்றுக்கொள்ளவேண்டிய தேவை எனக்கு இல்லை.

எம்பிக்கள் பலர் என்னுடைய பந்தரமுல்லை வீட்டுக்கு வந்துள்ளார்கள். பல்வேறு கலந்துரையாடல்கள், கட்சி மாற்றங்களுக்காக அவ்வீட்டுக்கு வந்ததுடன், எனது சொத்துப் பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும். சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்க்கவில்லையென்பதும் அவர்களுக்கு தெரியும். தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியல் அதிகாரத்தை நான் பயன்படுத்தவில்லை.

முன்னாள் அமைச்சர் ஒருவரோ அல்லது அமைச்சர் ஒருவரை உரசிச் சென்றவரோ ஆணைக்குழுக்களுக்கு விசாரணைக்காக அழைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் அமைச்சர்கள், பிரதமர்கள் நடந்துகொண்ட விதம் பற்றி எமக்குத் தெரியும்.

ஜனாதிபதிகள் அரசர்கள்போன்று நடந்துகொண்டிருந்ததுடன், அவர்கள் தற்பொழுது சட்டம் என்ற போர்வையில் ஒழிந்திருக்கின்றனர். நாம் அப்படியில்லை. சட்டத்தை மதித்து திறைசேரி முறி குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சென்று சாட்சியளித்து புதிய அரசியல் கலாசாரமொன்றை நாட்டுக்குக் காண்பித்துள்ளோம். என்னிடம் குறுக்கு விசாரணை நடத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆவேசமாக எழுப்பிய கேள்விகள் ஆணையாளர்களால் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டன.

அவருடைய நிபுணத்துவம் பற்றிய சந்தேகங்களுக்கும் அப்பால் அவர் பதவியுயர்வுக்காகவா அல்லது வேறு காரணங்களுக்காகவா அவ்வாறு ஆவேசமாக நடந்துகொண்டார் என்பது தெரியாமல் உள்ளது. எதுவாக இருந்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அமைச்சர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஒருவருக்கு எதிரான கோப்பைக் கூட திறந்துபார்ப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்னர் சுதந்திரம் இருக்கவில்லை. 48 மணித்தியாலங்கள் என்ற குறுகிய காலத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்று நாட்டுக்கு கிடைக்கவேண்டிய வருமானம் மற்றும் கடன்கள் பற்றியும் சட்டமாஅதிபர் திணைக்களம் விசாரணைகளை நடத்தவேண்டும். நிதிமோசடி பிரிவில் உள்ள 87 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளையும் இந்தளவு வேகத்துடன் அத்திணைக்களம் முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஐ.தே.கவுக்காக 32 வருடங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன். இதனால் உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதுடன், போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வழக்குகள் தொடரப்பட்டன. 10 வருடங்களாக வழக்கு விசாரணைகள் நடைபெற்று இறுதியில் நான் எந்த குற்றமும் இழைக்கவில்லையென அவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டேன். எதிர்க்கட்சியில் இருந்த எம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தற்பொழுது எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர். எனது குடும்பத்தினரையும் பயங்காட்டுகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை மாற்றுவதற்கு சலரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருந்தோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக பிரேரிக்கப்பட்டபோது அன்னப்பறவை சின்னத்தைப் பெற்றுக் கொடுத்தது நான். நாட்டின் எதிர்காலத்துக்காக இதனைச் செய்தேன்.

மக்களுக்கு சேவையாற்றுவதற்கே எனது அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்தியுள்ளேன். 20 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்ட எமது கட்சி ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் சேவையாற்றுவதற்காக 24 மணித்தியாலங்களும் எனது தொலைபேசிகள் செயற்பட்டன. தனிப்பட்ட இலாபங்களுக்கோ அல்லது வரப்பிரசாதங்களுக்காகவோ அமைச்சு அதிகாரத்தைப் பயன்படுத்தவில்லை. பதவிகள், பொறுப்புக்கள் என்பன தற்காலிகமானவை. எமது உண்மைத் தன்மையே அவசியமாகும். எனினும், சிலர் பதவிகள் நிரந்தரமாக இருக்கப்போவதாக நினைத்து வருகின்றனர். இதனாலேயே அதிகாரம் போன பின்னரும் சிலர் கனவுகளை வளர்த்து வருகின்றனர்.

எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் அடிப்படையற்றவை. இவற்றுடன் நான் தொடர்புபடவில்லை. இருந்தபோதும் கடந்த 10 நாட்களில் ஊடகங்களும், சிலரும் என்னை குற்றவாளியாக்கிவிட்டனர். வரலாற்றில் ஒருபோதும் இல்லாதமாதிரி ஊடகங்கள் செயற்பட்டுள்ளன. என்னை சிலுவையில் அறையவேண்டும் எனக் காண்பித்துள்ளனர். இதனால் நான் சலிப்படைய மாட்டேன். இவற்றுக்கு முகங்கொடுக்கும் பலம் எனக்கு உள்ளது.

எனினும், இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தை குலைப்பதற்கான சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னெடுத்துச் செல்லும் ஜனநாயக செயற்பாட்டை வீழ்ச்சியுறச் செய்யும் சதிகள் இடம்பெறுவதாக உணரமுடிகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் இந்த சதியில் பின்னணியில் இருக்கின்றனர்.

தமது பிழைகளுக்குக் கிடைக்கும் தண்டனைகளிலிருந்து தப்பிக் கொள்வதற்காக இவ்வாறான சதிகளில் ஈடுபட்டுள்ளார்கள். அதிகார மோகம்கொண்ட சதிகாரர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைக்க இடமளிக்கமாட்டோம். இவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும் இடமளிக்கமாட்டோம். சர்வாதிகாரி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியிலிருந்து மீட்ட நாட்டை மீண்டும் சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாது.

முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக விளங்கும் வகையில் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளேன். எமது கட்சியின் பிரபல அரசியல் வாதிகளுக்கு இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ஜோன்கொத்தலாவல, டட்லி சேனநாயக்க, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன, பிரேமதாச போன்றவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தபோதும் அவை ஆதாரமற்றவை என்பது காலப்போக்கில் நிரூபனமாகியிருந்தன.

ஊழல் மோசடியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும், எமது கட்சி ஆதரவாளர்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவது என்ற தீர்மானத்தை நான் கவலையிலோ அல்லது அதிர்ச்சுயுடனோ எடுக்கவில்லை. பெருமையுடன் எடுக்கின்றேன். பாராளுமன்றத்தின் கௌவரத்தை பாதுகாப்பதற்கே எனது அமைச்சுப் பதவியை அர்ப்பணிக்கின்றேன். எமது கட்சிக்கு ஆதரவாகவிருக்கின்ற அமைச்சர்கள் மற்றும் பின்னவரிசை உறுப்பினர்களுக்காக எனது பதவியை அர்ப்பணிக்கின்றேன்.

பண்பாடு மிக்க ஆட்சி மற்றும் ஜனநாயகம் மிக்க ஆட்சிக்காகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து கொண்டுசெல்லும் நல்லாட்சிக்காவும் அமைச்சுப் பதவியை அர்ப்பணிப்புச் செய்கிறேன். இவ்வாறு ரவி கருணாநாயக்க தனது நீண்ட உரையில் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...